குரு வணக்கம்

வினோத் கன்னியாகுமரி
சிந்தையில் புதைந்த ஓராயிரம் கனவுகளில்
மெய்யும் பொய்யும் உணர்த்திய குருநாதா!
வலியும் துயரமும் விழியருவியாகிட‌
மனதில் வீரம் விதைத்த‌ குருநாதா...!

மெய்யே இறைவன் என்றுரைத்து
இறை ஒளி காண்பித்த சத்குரு நாதா!
கடமையாய்ப் பூசிய திரு நீறதனில்
இறை சக்தி வெளிக்கொணர்ந்த சத்குரு நாதா...!

நிமிடத்தில் உதிர்ந்திட மலரல்ல நீயுமென‌
வாழும் முறை கற்பித்த என் குருவே!
கல்லாய்ப் போன‌ மனதினை மீட்க‌
புன்னகையே மருந்தாக்கிய என் குருவே...!

அன்பினால் தாயாகி அறிவுரையில் தந்தையாகி
ஆதரவில் தெய்வமாகிய சத்குருவே!
இறை நாமம் கற்பித்து இறைவனையே காண்பித்து
வாழ்விக்கும் மெய்ப்பொருளே சபரி குரு நாதா...!

எழுதிட வேண்டும் உங்களுக்காக கவிதைகள்
பாடிட வேண்டும் உங்கள் அருளமுதை,
போற்றிட வேண்டும் உங்கள் திருநாமத்தை
வணங்கிட வேண்டும் உங்கள் செம்மலர்ப்பாதம்...

கருணைமழை பொழிந்திட்ட சத்குரு நாதா!
திருவடிகள் பணிகின்றேன் சபரி குரு நாதா...!