கடலெல்லாம் ரத்தம்-5

நிர்மல்
October 25, 2016 06:48 முப

தமிழின் உச்சம் 'ழ' என்றால்...   தமிழின் அத்தனை அழகும் ஒற்றைச் சொல்லில் உறைந்துக் கிடக்கும் ஒரு பெயர்  'யாழினி!'. பெயர் மட்டுமல்ல அவளும் அப்படித்தான். இந்த  பெயரை உச்சரிக்கும் போதே கார்த்திக் தனக்குள் தன்னையும் அறியாமல் ஓர் உற்சாகம் உடலுக்குள் ஊடுருவி அடி முதல் தலை வரை வியாப்பிப்பதை உணர்ந்தான்.ஒருப் பார்வை..ஒரு கணம் அதுப்போதும். இவள் நமக்கானவள் என்பதைக் கண்டுக்கொள்ள!என்ன, சிலரால்  மட்டுமே அந்தத் தருணத்தை அப்படியே கைகளில் ஏந்தி, மனதிற்குள் நிறைத்து வாழ்வின் கடைசி நொடி வரை அதைக் காப்பாற்றி கண்மூட முடிகிறது.

காதல்-இதை மறுக்க முடியும்,மறைக்க முடியும்,எதிர்க்க முடியும்...ஆனால் இதனைத் தாண்டாமல் எவரால் வாழ்வை கடக்க முடியும்?!முதல் காதல் என்பது நாம் யாருக்கும் படிக்க கொடுத்திடாத நம் ஆயுசுக்குமான ஆட்டோகிராப் புத்தகம்! பிறக்கும் குழந்தையின் முதல் பெயராய்,கம்பியூட்டர் திரையின் பாஸ்வேர்டாய்,உயிர் வழி உள் நுழைந்து மனதிற்குள் ரீங்காரமிட்டு எப்போதும்  நம்மோடு வாழ்ந்துக் கொண்டே தான் இருக்கும் முதல் காதல்! நினைக்கையில் எல்லாம்  கன்னத்தில் குழி விழும் உதட்டோர  சிறு புன்னகையையும்... காலத்தின் பெருவிரல் பிடித்து, வாழ்க்கையின்  வரப்புகளில்எ நடந்து, எதார்த்தத்தின் எல்லைகள் கடந்து , பால்யத்தின் பிம்பமாய் சற்றே நம்மை உருமாற்றிடவும் .... சாக்காடு செல்லும் வரை நெஞ்சைக் கீறும் ஓர் சிறு ரணமாய் எப்போதைக்குமான ஓர் அவஸ்தையுமாய்,இவை  இத்தனை இத்தனையையும் மொத்தமாய் தந்திடும் வல்லமை முதல் காதலுக்கு மட்டுமே சாத்தியம்!..    

எத்தனை கடினமான நேரத்திலும் அவளால் இதழோரத்தில் ஒரு சிறு புன்னகையைத் தவழவிட்டபடி பறந்து திரிய முடிந்தது கார்த்திக்கிற்கு  ஆச்சரியமாய் இருந்தது.வேலையின் மும்மரத்தில் கார்த்திக்கிடம் வெளிப்படும் சிறுசிறு கோபங்களையும்,முரண்களையும் கூட மிக எளிதாய் எடுத்துக்கொண்டு அவளால் கடந்து போக முடிந்தது.

பலநேரங்களில் அவன் மனதில் நினைப்பதை,மிகச்சரியாய் செயலாய் அவள் செய்து முடிப்பதைக் கண்டு கார்த்திக் ஆச்சர்யம் கொண்டான்.ஒருவேளை இவள் தனக்கானவளோ என்ற எண்ணம் கூட சமயங்களில் அவனுக்கு வந்துசென்றது.மறுகணமே,ச்சே என்ன இது சுத்த அபத்தமாய் என எண்ணித் தலையை ஒரு உலுக்கு உலுக்கி அதிலிருந்து வெளிவரப் பிரயத்தனப்படுவான்.இது என்ன மாதிரியான உணர்வு,இதற்கு என்ன பெயர் வைப்பது என்றெல்லாம் அவனுக்கு தெரியவில்லை.ஆனால் இப்போதைக்கு இந்த தருணங்களை அப்படியே அனுபவித்தால் மட்டும் போதும் என்று உள்மனம் சொல்லியது.

கார்த்திக்கின் இந்த அவ்வப்போதைய தடுமாற்றங்களை மற்ற மூவரும் கவனிக்காமல் இல்லை.அதிலும் குணா இவர்கள் இருவரும் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தை வெகு எளிதாய் கண்டுபிடித்துவிட்டான்.

ஒருமுறை,“சார் இப்பல்லாம் ஒரு பொண்ணை பாத்துப் புடிச்சிருந்துச்சினா,உடனே போயி லவ்வை ப்ரொபோஸ் பண்ணிடனும்.அதைவிட்டுட்டு சும்மா பார்வையாலேயே பாக்குறது,மனசுக்குள்ளயே வச்சி ஃபீல் பண்றதுன்னு இருந்தா..அந்த பொண்ணுங்களே இப்ப கடுப்பாகிருறாங்க”

“டேய் குணா இப்ப ஏன்டா சம்பந்தேமேயில்லாம இதெல்லாம் என்கிட்டே சொல்லிகிட்டு இருக்க?”

“இல்ல சார் சும்மா பொதுவாச் சொன்னேன்” என கண்களாலேயே கார்த்திக்கை பார்த்து சிரித்தவாரு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.

கார்த்திக்கின் உள்மனதில் “ச்சே இந்த ஸ்வீட் ராஸ்கல் நாம மனசுல நினைச்சதை அப்படியே சொல்லிட்டானே” என ஒருப்பக்கம் குறுகுறுப்பும்,மறுபக்கம் இத்தனை நாளாய் கட்டுபாட்டிற்குள் இருந்த மனம் இப்போது இப்படி அலைபாய்கிறதே என்ற கலவரமும் ஒருசேர அவனை ஆட்டுவித்தன.என்ன இருந்தாலும் தன்னிடம் ஜூனியராய் சேர வந்தப் பெண்ணை பற்றி இப்படி நினைப்பது சரியா எனத் தோன்றினாலும்,தன் வேலையை தன் வாழ்கையை புரிந்துகொண்ட ஒரு பெண்ணால் தான் தன் வருங்காலத்தை வசந்தமாக்க முடியுமென்றால் அந்தப் பெண், யாழினியை விடவும் வேறு யாரை இருந்து விடமுடியும்?என தனக்குள்ளே கேட்டுக்கொண்டான்.

கூடிய விரைவில் யாழினியிடமும் இதைப்பற்றிப் பேசிவிடவேண்டும்.கையில் அள்ளிய நீராய் சிறுகசிறுக சிதறிக் கலையும் இந்த மன அலைகளைத் தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டான்.

இதற்கிடையில் களக்காடு செல்வதற்கான முன்தயாரிப்புப் பணிகள் முடிவடைந்து அங்குச் செல்வதற்கான நாளை எதிர்நோக்கி காத்திருந்தனர்..
 
 தொடரும்...