தமிழ் மகனே நீ தூங்கு

வினோத் கன்னியாகுமரி
வீசும் இளந்தென்றலுண்டு
கண்மணியே நீ உறங்கு
பந்த பாசம் விட்டதென
கண்மூடி நீ தூங்கு

காலநேரக் கணக்கெல்லாம்
தேவையின்றி போனதடா
சேர்த்த பொருட்செல்வமதும்
பயனின்றி போனதடா...

இல்லை ஒரு கவலையென‌
கண்மணியே நீ உறங்கு
கற்ற தமிழ் சொந்தமென‌
தமிழ் மகனே நீ தூங்கு

தாய் மடியில் இடமிருந்தும்
புவனமெங்கும் உறவிருந்தும்
தாய் மண்ணில் தலைசாய்த்த
தமிழ்த்தோழா நீ உறங்கு

கட்டிலின்றி மெத்தையின்றி
வீடு வாசல் உறவுமின்றி
குமரி அன்னை மடியதுவே
தொட்டிலென நீ தூங்கு

தமிழதனை வாழவைக்க
கற்றுத்தந்த ஆரமுதே
தமிழன்னை ஈன்றெடுத்த‌
தவப்புதல்வா நீ உறங்கு

சுவாசமதை தென்றலுக்கும்
உயிரை பஞ்ச பூதத்திற்கும்
தேகமதை மண்ணினுக்கும்
விட்டுச்சென்ற பாலகனே...,

நெஞ்சகத்தில் நினைவுகளாய்
கண்மணியே நீ உறங்கு
வாழ்க தமிழ் அமுதெனவே
கண்வளராய் கண்மணியே... ... ...