பொம்மை சிரித்தது

மொழியற்றவள்
October 19, 2016 01:25 பிப
அவன் அன்றைக்கு முழுமனதாய்
முடிவெடுத்து விட்டான்..

வாழ்க்கை
அநாவசியம், இங்கே
சாதனையைக்காட்டிலும் வேதனை அதிகம்,
இன்னும் இன்னும் துன்பப்பட்டு கடைசியில்
இதுதான் வாழ்க்கை என
அறிந்துகொள்ள இந்த வாழ்க்கை
எதற்கு ??
தன்னைவிட அறிவில் குறைந்தவன், அழகில்
குறைந்தவன், ஏன் தன்னை விட தனத்தில்
குறைந்தவனும்கூட நல்லபடியாய்
வாழமுடிகிறது. தன்னால் மட்டும் வாழவே
முடியவில்லை.. ச்ச்சீ போ ,, இந்த வாழ்க்கை
என்னும் நெருப்புக்குழி தகிக்கிறது
இனியும் வாழுதல் மிக மிக முட்டாள்
தனம்..

இப்படி தனக்கு தானே
பேசிக்கொண்டிருந்த அருள்நிதிக்கு
அப்படியொன்றும் அதிகம்
வயதாகிவிடவில்லை... முப்பதைத் தாண்டி
முழுமையாய் ஆறு வருடங்களை
விழுங்கிவிட்டிருக்கிறான்...
அசாத்திய திறமைசாலி என அத்தினை பேரும்
இவனை வியந்த போதும். இவனது எண்ணம்
எப்போதும் தான் ஒரு மகாபாவி.. எப்போதும்
துன்பத்தில் உழலும் ஜென்மம் வாங்கி
வந்திருப்பதாகவேதான் எண்ணம்.

அழகான எத்தனையோ விடயங்களைக் கண்
முன் இயற்கையும் கடவுளும்
கொணர்ந்து நிறுத்தியும் அவனது
கண்கள் பார்வையற்றுகிடந்தது... மனம்
முழுதும் சிலந்தியின் வலைப்பின்னல் அதில்
சிலந்திக்கு உணவாய் தன்னையே
கொடுத்து வைத்திருந்தான்...

இன்றைக்கு இவ்வுலகைவிட்டுப்
போய்விடுவதென உறுதியாய்
முடிவெடுத்து அதற்குத் தேவையான
விசமும் அந்த விசம் அருந்தும் ரணம்
தெரியாமல் இருக்க
இன்னொரு விசமான மதுவையும்
கூடவே
கொறித்துக்கொள்ளவென
சில எண்ணெய்யில் பொறித்த
காரமான தீனிகளையும் வாங்கி கூடத்தில்
கிடந்த டீப்பாயில் நிரப்பி வைத்திருந்தான்....

சரி யாருக்கெல்லாம் நன்றி
சொல்ல வேண்டும் என ஒரு பட்டியல்
துரிதமாய்த் தயாரித்தான்.. தனது
முப்பத்தாறாம் அகவை வரை கூடவே
பயணித்த தனது சக நண்பர்களோடு சற்று
நேரம் அலைபேசியில் அளவளாவினான்..
புதிதாய் தெரிந்து வைத்திருந்த சிலரோடும்
சிரிக்கச் சிரிக்க பேசி வைத்தான்.. இறந்தபின்
இவன் இப்படிப் பேசினான் என எல்லோரும்
தன்னை நினைத்துப் புலம்பவேண்டுமென்ற
ஒரு நப்பாசையே இவற்றுக்கெல்லாம்
காரணமாயிருந்தது...

கயல்விழியை நினைத்துப் பார்த்தான்..
அவளின் கடைக்கண் பார்வை இவனை இந்த
நிலையிலும் ஒரு கிரக்கத்தை உண்டுபண்ணியது..
கடைசியில் நீ கூட ஏமாற்றிவிட்டாய் அல்ல
கயல்... உனக்காகவேணும்
இக்கொடும் வாழ்வை சகித்துக்
கொள்ள எண்ணியிருந்தேன்.. நீ கூட
என்னை விட்டுப் போவதென
முடிவெடுத்தாய் தானே.. அதுவும்
கேவலம் பணத்துக்காக..
என்னைக்காட்டிலும் வசதி அதிகம்
உள்ளவன் என்ற ஒரே காரணத்துக்காக
அந்த கூர்மூக்கானை
கட்டிக்கொண்டாய் அல்லவா?
கண்ணீர் கரை உடைத்துக்கொண்டு
விழியிலிருந்து கன்னம் முழுவதும் கோடுகளாய்
நனைக்க ஆரம்பித்திருந்தது...

இனி எதற்கு எவரைப்பற்றிய சிந்தனையும்,,
வேண்டவே வேண்டாம் இன்னும் சில
மணித்துளிகள் நம் வாழ்வை
முடித்துக்கொள்ளப் போகிறோம் எதற்கு
அழவேண்டும்.. என்ன செய்யலாம்
என்ற சிந்தனை எட்டிப் பார்த்தது...

சில
நாட்களாகவே சுத்தம் செய்யாமல்
விடப்பட்டிருந்த தன் அறையைச் சுத்தம்
செய்யத் துவங்கினான்,,, தனது
உடைகளைச் சீராய் அடுக்கி வைத்தான்... தனது
பழைய பெட்டி ஒன்றை எடுத்து அதிலிருந்த
தனது தாய் தந்தையின் புகைப்படத்தைச் சற்று
நேரம் பார்த்துக்கொண்டேயிரு­
ந்தான்,,
அம்மாவும் அப்பாவும் ஒரு விபத்தில்
அகால மரணம் அடையாமல்
இருந்திருந்தால் தனக்கு இந்த நிலை
வந்திருக்கவே வந்திருக்காது...

தனது
அத்தையின் வீட்டில்
ஒட்டிக்கொண்டிருந்த காலத்தில்
தான் பட்ட அத்தினை வேதனைகளும்
தொடர்ச்சியாய் மனதைத்
தைத்துக்கொண்டேயிருந்தது...
அந்த நிலையிலும் கூட தன் படிப்பை
தொடர்ந்து நல்லபடியாகப் படித்து
நல்ல வேலையில் அமர்ந்து இங்கே தனித்து வந்து
அறையெடுத்து தங்கியது வரை
ஒவ்வொன்றாய் நினைத்துப்
பார்த்தான்... பாதி வயிறு நிரம்பிய
போதுகூட தன்னால் நல்லபடியாகவே படிக்க
முடிந்தது... தாய்
தகப்பனில்லாவிட்டாலும் தன்
சொந்தக்காலில் நிற்கும் துணிச்சல்
இருந்தது.. எல்லாம் சரிதான்.. இத்தினை
போராட்டமும் எதற்காக என யோசித்துப்
பார்த்தான்.. ஒன்றுமில்லை தான்
நினைக்கும் எதையும் தன்னால் அடையவே
முடியாத போது இதுபோல கடினங்களை ஏன்
சகித்துக்கொள்ள வேண்டும்? மீண்டும்
மீண்டும் கயல்விழியின் பார்வை கண் முன்
வந்து போனது.. இனியும் தாமதிக்கவேகூடாது
எதற்காக இல்லாவிட்டாலும் தன்
உயிரினும் மேலான அன்பை அவள்
நிராகரித்த காரணத்துக்காகவேணும்
செத்துப் போகத்தான் வேண்டும்...

எழுந்து டீப்பாயின் அருகில் ஒரு
நாற்காலியை இழுத்துப் போட்டு
அமர்ந்தான்... ஜன்னலின் திரைச்சீலை
அசைத்தது காற்று.. அங்கிருந்த ஒரு
அழகான பொம்மை நழுவி தரையில்
விழுந்தது.. அதை எடுத்து வந்து கையில்
வைத்துக்கொண்டான்.. அந்தப்
பொம்மையின் உதடு செக்க
சேவேல் என இருந்தது.. கயல்விழியின் உதடுகூட
அப்படித்தானிருக்கும். இந்தப்
பொம்மை அவனின் தாய் இவனுக்கு
வாங்கிக் கொடுத்தது.. சிறுவயது
முதல் இதை மட்டும் பத்திரப்படுத்தி
வைத்திருந்தான்.

அந்தப் பொம்மையை பார்த்து ஒரு
புன்முறுவல் பூத்தான்... அந்தப்
பொம்மையும் அவனைப்பார்த்துச்
சிரித்தது போல இருந்தது.. நன்கு உற்றுப்
பார்த்தான் அந்தப் பொம்மை
மேலும் மேலும் அதிகமாய் சிரித்தது.. லேசாய்
அதன் உதடுகள் அசையப் பற்கள் கூடத்
தெரிந்தது...

எதற்கு என்னைப்பார்த்துச் சிரிக்கிறாய்
என்றான்..

அருள் நிதி எனக்கு உன்னை
நன்றாகத்தெரியும்.. நீ சிறுவயது முதல்
என்னைக் கவனிக்காத போதும் கூட நான்
உன்னைக்
கவனித்துக்கொண்டுதான்
இருந்தேன்... என்று ஒரு கண் அசைத்து பேச்சை
நிறுத்தியது...

ஆஹா நல்லதுதான்.. என்னைக் கவனிக்க
யாருமில்லை என்ற கவலையை என்
இறப்புக்குமுன் நீ தீர்த்து வைத்துவிட்டாய்
என்றான்..

ஆம் ஆம் உன்னைக் கவனிப்பது எனக்கு
அத்தினை பிடிக்கும்.. நீ எத்தனைத் திறமைசாலி
என எப்போதும் பார்த்து பார்த்து
வியந்திருக்கிறேன்,,
உன் அப்பாவும் அம்மாவும் இறந்து
போனபோது உனக்கு வயது பதின்மூன்று..
அப்பேதுகூட உனக்கு உன் அப்பா ,,
அம்மாவோடு செத்துப் போக
வேண்டுமென தோன்றியதேயில்லை...
உன் அத்தையின் வீட்டில் எத்தனையோ
சித்ரவதையோடு நாட்களை
நகர்த்திக்கொண்டிருந்தாய்...
அப்போதும் கூட உனக்கு செத்துப்
போகவேண்டுமென்ற எண்ணம்
வந்ததேயில்லை... ஆம் தானே என்று கேட்டது
அப்பொம்மை

ஆம் என்று தலையசைத்தான்

ஏன் எனச்சொல்லேன் என
வினவியது பொம்மை

ஏன் என நீயே சொல்லேன்
என்றான் விரக்தியோடு அருள்நிதி

அப்போதெல்லாம் நீ வாழ்வில்
உயரவேண்டுமென்ற எண்ணத்தை
லட்சியமாய் வைத்திருந்தாய்..
படிக்கவேண்டும் நல்ல வேலைக்குச் சென்று
தனித்து தன் காலில் நின்று தன் வாழ்வைச்
சீரமைக்கவேண்டுமென்ற வெறி
உன்னுள் இருந்து
கொண்டேயிருந்தது...
அதனால் தான் தற்கொலை
எண்ணம் உனக்கு வரவேயில்லை.. இந்த
அறைக்கு வந்த புதிதில் கூட இவ்வீட்டை நீயே
முழுமையாய் வாங்கிவிடவேண்டுமென்ற
தீர்மானத்தில் இருந்தாய்...
கயல்விழி உன் வாழ்வில் வந்தபின்
எல்லாவற்றையும் மறந்து போனாய்... அவள்
மட்டும் போதுமென பகலும் இரவும்
கனவுகண்டாய்...அவள் உன்னை விட்டுப்
போனபின் இப்போது தற்கொலை
செய்வதென
முடிவெடுத்திருக்கிறாய்...

ஒரு பதின்மூன்றுவயது சிறுவனின்
தன்னம்பிக்கைகூட இந்த முப்பத்தாறாம்
வயது இளைஞனிடம் இல்லாதது எண்ணிப்
பார்த்தால் சிரிப்பு மட்டுமே வருகிறது என்று
சொல்லி சிரிக்க ஆரம்பித்தது
அந்தப் பொம்மை..

அதன் சிரிப்பு சத்தம் அவ்வறை முழுதும் நிரம்பி
வழிந்தது...
_(முற்றும்)

_பொம்மைதான் அறிவு....
_அறிவு பேசும் போது மனது கேட்காது
_மனதை அடக்க ஒத்திப்போடுதலே சிறந்தது..
(நன்றி வாசித்த அனைவருக்கும்)