எழுத்துப் போலிகள்

பாவலர் கருமலைத்தமிழாழன்
எழுத்துப்  போலிகள்
பாவலர் கருமலைத்தமிழாழன்
 
வறுமையிலே   வாடுகின்ற   எழுத்தா  ளர்தம்
            வளமான  எழுத்துகளை   விலைக்கு   வாங்கி
சிறுமையாகச்  சிலரிங்கே   அவரெ  ழுத்தாய்
            சிறப்புதனைப்  பெறுகின்றார்   நூலாய்   ஆக்கி !
எறும்புகூட   கண்ணில்லாப்   போதும்   ஊர்ந்தே
            எங்கெங்கும்   சென்றுணவைத்   தேடும்  போதில்
இருகண்கள்   உள்ளவர்கள்   குருடர்   போன்றே
            இயங்காமல்   பிறர்காலில்   நடக்கின்   றார்கள் !
 
புலியாகப்   பூனையதும்    பாய்த   லுண்டோ
            புழுக்கையினைப்   புதையலாக   மதிப்போ  ருண்டோ
எலிவலையை  வீடென்றே   வாழ்வோ   ருண்டோ
            எட்டியதும்   அதிமதுரம்  என்போ  ருண்டோ !
அலிதன்னை   ஆண்பெண்ணாய்   ஏற்போ  ருண்டோ
            அழகுசெய்தால்   கறுமுகம்தான்   வெளுப்பா  யாமோ
பலித்திடுமோ   பொய்யர்தம்   கனவும்   நனவாய்
            படைப்பாளர்   ஆவாரோ   போலி  யர்தாம் !
 
பசிதன்னை   விலைபேசி   வாங்கும்   எண்ணம்
            பரத்தையிடம்   பெறுகின்ற   இன்பம்  போலாம்
புசியென்று  வயிற்றுக்குக்   கொடுத்த   போதும்
            புரிகின்ற   பேரங்கள்   புனித   மாமோ !
நசிந்திருக்கும்   எழுத்தாளர்   நலிவைப்   போக்க
            நம்மன்னர்   முன்பளித்த   கொடையைப்  போன்று
கசிந்திரக்கம்    காட்டாமல்   எழுத்தைப்   போற்றிக்
            கரம்தாழ்த்தி   அவரெடுக்கக்   கொடுத்தே   காப்போம் !