இலவசம் என்னும் வசியம்

பாவலர் கருமலைத்தமிழாழன்
இலவசம்  என்னும்  வசியம்
பாவலர்  கருமலைத்தமிழாழன்
 
இலவசங்கள்   மக்கள்தமை   வசியம்  செய்தே
-----இயல்பான   வாழ்க்கையினை   முடக்கிற்  றின்று
இலவசங்கள்   உழைக்கவேண்டும்   என்று  நெஞ்சுள்
-----இருந்திட்ட   ஆர்வத்தைக்   குலைத்த  தின்று
இலவசங்கள்   சோம்பலினை   உடலி  லேற்றி
-----இரவாகப்   பகலினையும்   மாற்றிற்   றின்று
இலவசங்கள்   அரசியலின்   கட்சி  முன்பு
-----இரவலராய்க்   கையேந்த   வைத்த   தின்று !
 
வரிப்பணமோ   உற்பத்தி   பெருக்கி   நாளும்
-----வளம்பெருக்கி  நாடுதனை   உயர்த்த  வேண்டும்
வரிப்பணத்தில்   தொழிற்சாலை   கட்டு  வித்தால்
-----வறுமையோட்டிச்   செல்வத்தைக்   குவிக்கு   மன்றோ
புரிந்திருந்தும்   வாக்குகளைப்   பெறுவ  தற்கே
-----புரையோடிக்   குமுகத்தை   அழுக   வைத்தே
அரிப்பெடுத்துச்  சொறியவைக்கும்   இலவ  சத்தை
-----அளித்தின்று   வரிப்பணத்தை   பாழ்செய்   கின்றார் !
 
இலவசங்கள்   அறிவிக்கும்   கட்சி  கட்கே
-----இல்லையிடம்   எனஒதுக்கி   ஓட   வைப்போம்
நிலத்தினிலே   வியர்வைநீர்   பாய   வைத்து
-----நிறையுழைப்பில்   வளங்களினைப்   பெருக  வைப்போம்
நலமாக   நாட்டுமக்கள்   வாழ்வ   தற்கே
-----நாளைபலன்   தரும்திட்டம்   செய்ய   வைப்போம்
பலம்நம்மின்   கரங்களிலே   ஒன்று  சேர்ந்து
-----பாடுபட்டு   வாழ்வதற்கே    உறுதி   ஏற்போம் !