கடலெல்லாம் ரத்தம்-3

நிர்மல்
October 07, 2016 05:01 பிப

ர் ஆற்றங்கரையில் வேர்ப்பரப்பி விழுதூன்றி பிரம்மாண்டமாய் வீற்றிருந்த அந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்தபடி நீர் வற்றி வறண்டு போயிருந்த ஆற்றை பார்த்தவாறே சிந்தனையில் மூழ்கி போயிருந்தார் அகத்தீ அய்யா.அவர் சிந்தனையை கலைக்கும் விதமாய், ‘’வணக்கம் ஐயா” என கார்த்திக்கும்,நரேந்தரும் கூப்பிட மெதுவாய் தலைத் திருப்பி அவர்களை பார்த்தார்.

அகத்தீ ஐயாவின் முகச்சுருக்கங்களிலேயே தெரிந்தது,இந்த வாழ்வு மீதான அவரின் அனுபவங்கள் எத்தகையது என!

கார்த்திக்,“ஐயா,இந்த ஊர்ல உள்ள கோவில்கள் பத்தியும்,சில கல்வெட்டுகள் பத்தியும் ஆராய்ச்சி பண்ணிகிட்ருக்கோம்.உங்களக்கு தெரிஞ்ச விசயங்களை எங்களோட பகிர்ந்துகிட்டிங்கன்னா எங்கள் ஆராய்சிக்கு ரொம்ப உதவியா இருக்கும்.இங்க மக்களோட வழிபாடு முறைகளே ரொம்ப வித்தியாசமா இருக்கே அய்யா?உங்களைப் பத்தி கூட நிறையப்பேரு, நீங்க பல ரிஷிகளை பார்த்தும்,பழகியும் இருக்கிருக்கிறதாகவும்,ஓலைச்சுவடிகளை வச்சி எதிர்காலத்தை கணிப்பீங்கன்னும் சொல்றாங்களே” என கார்த்திக் ஆரம்பிக்க..

அகத்தீ அய்யா,“ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல உசுரை காப்பத்துன எல்லாமே சாமி தானே தம்பி?!என் சிறு வயசுல ஒரு வருஷம் பேய்மழை பெஞ்சுது.மழைன்னா வானத்துல உள்ள மொத்த தண்ணியும் அப்பவே தீர்ந்து போயிடுமோன்னு நினைக்கிற மாதிரியான மழை.இந்த ஊரு இருக்குறது மலை அடிவாரம்ங்குறதுனால மலையில இருந்து இறங்குன தண்ணியில மொத்த ஊரும் வெள்ளக்காடா போச்சுது.உசுரை காப்பாத்துனா போதும்னு ஊருல இருந்த அத்தனை குடும்பமும் கோவிலுக்குள்ள தஞ்சம் புகுந்துட்டாங்க.ஊரே வெள்ளத்துல மெதக்குறப்ப கோவில் எத்தனை நாளைக்கு தாங்கும்.இத்தோட வாழ்க்கை முடிஞ்சிதுன்னு நினைச்சி நிக்கிறப்ப தான் மலையில இருந்து உருண்டு வந்த ஒரு பெரும்பாறை சரியா கோவிலுக்கு கிட்ட வந்து அரண் மாதிரி வர்ற தண்ணிய எதுத்து நின்னுச்சி..அந்த மழைக்கு தப்பிச்சது அந்த ஆண்டவனோட அருள்.இப்பவரைக்கும் இந்த ஊர் மக்கள் அந்த பாறையை சாமியா நினச்சி கும்பிட்டுகிட்டு வர்றாங்க.வருஷம் தவறாம திருவிழாவும் நடந்துகிட்டு இருக்கு.கல்லாப் பாத்தா அது வெறும் பாறை..உசுரை காப்பாத்தினது நினைச்சு பாத்தா  அது சாமி! எல்லாமே நாம பாக்குற பார்வையிளையும்,வைக்கிற நம்பிக்கையிலயும் தானே இருக்கு தம்பி?! ”

பெரியவர் சொல்வதை நரேந்தர் தன் கையடக்க ட்ரான்சிஸ்டரில் பதிவு செய்து கொண்டிருந்தான்.

கார்த்திக்,”அய்யா ஆனா இப்ப ஊருக்குள்ள அதிக குடும்பங்கள் இருக்க மாதிரியே தெரியலையே”

“எப்படி இருப்பாங்க தம்பி?வாழ்றதுக்கு இங்க இன்னும் என்ன மிச்சமிருக்கு..ஒருகாலத்துல இங்க நடந்த விவசாயத்தை ஆச்சரியமா கேள்விப்பட்டு பக்கத்து கேரளத்துல இருந்து எல்லாம் வந்து பாத்துட்டு போவாங்க.அப்படி முப்போகம் விளைஞ்ச பூமி இது.இப்ப எங்க பாத்தாலும் காய்ஞ்சி போயிக் கெடக்கு.குளம்,குட்டைல தண்ணி இல்லைன்னு சொன்னா கூட ஏத்துக்கலாம்.குளம் குட்டையே இல்லைனா சொன்னா அது யாரு தப்பு?இது தை மாசம்..இப்பதான் பெருமழை பெய்ஞ்சு ஓஞ்சது..அதுக்குள்ளே தண்ணிப்பஞ்சம் ஆரம்பிச்சிருச்சி..தண்ணி இல்லை தண்ணி இல்லன்னா எப்படி இருக்கும்?பெய்ஞ்சா வெள்ளம்..ஒஞ்சா பஞ்சம்ன்னு ஆகிப்போச்சு நம்ம ஊருங்களோட நிலைமை..இவ்வளவு மழையும் எங்க போச்சி.பெய்யுற மழை பூமிக்குள்ள போவமாட்டேங்கிது.இங்க யாருக்கும் அக்கறை இல்லை தம்பி..தன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு நின்னு நிதானிச்சு யோசிக்க கூட நேரமில்லாம ஓடிக்கிட்டு இருக்கானுக..இன்னிக்கு விவசாயம் அழியிது..பாத்தும் பாக்காத மாதிரி இருக்கோம்.நாளைக்கு குளிக்க தண்ணி இருக்காது..அப்பவும் அப்படித்தான் எதையும் கண்டுக்காம இருப்போம்..அப்புறம் ஒருநாள் குடிக்க ஒரு சொட்டுத்தண்ணி இல்லாம தவிச்சி நிக்கிறப்பதான் தம்பி நாம பண்ணின பாவமெல்லாம் கண்முன்னே வந்து போவும்..அப்ப யோசிக்க நேரம் இருக்கும்..ஆனா அப்ப யோசிச்சு?விவசாயி வயிறை எரிய வச்ச எந்த சமூகமும் நல்லா வாழ்ந்துற முடியாது..விடுங்க தம்பி இந்த கட்டை இன்னும் என்னத்த எல்லாம் பாக்க வேண்டி இருக்குமோ?” என வேதனையுடன் கலங்கிய கண்களை துடைத்தவாறே வானம் பார்த்து வெறிக்க தொடங்கினார்.

புதுசா எதை எதையோ கண்டுபுடிச்சிட்டோம்,பெருசா எதையோ சாதிச்சிட்டோம்ன்னு நினைச்சிகிட்டு ஆதராமான விசயங்களை கொஞ்சம் கொஞ்சமா கை கழுவிகிட்டு இருக்கோமே?!இந்த வயசான பெரியவரோட இத்தனை வலியான வார்த்தைகள் தனக்காகவா?இல்லையே.. அடுத்ததலைமுறைக்கு என்னத்த மிச்சம் வச்சிட்டு போப்போறோம்ன்ற ஏக்கமும்,எல்லாருமா சேந்து எங்களுக்கு துரோகம் பண்ணிட்டிங்களேய்யான்னு வரப்போற தலைமுறை கேட்டுறக்கூடாதேன்ற ஆதங்கத்துலயும் தானே பேசுறாரு என மனதிற்குள் கார்த்திக் தனக்கு தானே கேட்டு கொண்டிருக்கையில், அவன் சிந்தனையை கலைக்கும் விதமாய் அங்கு வந்த குணா,கார்த்திக்கிடம் சொல்வதற்கென ஒரு  அதிமுக்கிய தகவலைக் கொண்டு வந்திருந்தான்!!!

தொடரும்...