நீதிவான் நான்

தமிழரசி ர
October 03, 2016 08:02 பிப

வார்த்தைகளை
கொன்று கொன்று
கசங்கிய காகிதத்தில்
அடங்கம் செய்த எண்ணற்ற
காதல் கவிதைகள்
ஆவியாய் சுற்றுகிறது
உன் மூச்சுக்காற்றில்...

குப்பைகளுக்குள்
தேங்கி கிடக்கும்
சில காகித குஞ்சுகள்
மெல்ல மெல்ல பறந்தவண்ணம்
எழுதின காலடியை தேடுகிறது...

இன்னும் சில காகித
முட்டைகள் கோபத்தில்
இருக்க மூடிக்கொண்ட
எழுத்துகளிடையே
தானும் கசங்கி சாகிறது...

உன்னை 
நேசித்து எழுதிய
காதல் கவிதையை
படிக்க தொடங்கும்
சற்று நேரத்திற்கு முன்பு

இந்த
முயல்குட்டி குப்பை
பாத்திரத்தை கிளறிப்பார்

கசங்கின
ஒவ்வொரு காகித குஞ்சும்
உனக்கான கவிதையின்
குறைபிரசவ காதலும்
கருகலைப்பு நிகழ்வையும்
சுமந்துக் கொண்டிருக்கிறது...

உன்னை
பிறக்க வைக்க
பல கொலையும்
சில தற்கொலையும்
நிகழ்த்திய நான்
கொடூரன் தானெற்றாலும்
குறைபாடோடு கிடக்கும்
காதலுக்கு கருணை கொலை
உத்தரவிட்ட நீதிவான் நான்

நேர்த்தியாய்
நீ படிக்க காத்திருக்கும்
என் காதல் கவிதை
பிறந்த கதையை

என் படுக்கை அறையின்
மூலையில் உள்ள
முயல் தொட்டியையும்
கிழித்தெறிந்த காகிதத்தையும்
கிளறிப்படித்து கொண்டாடு
உன்மீதான காதலை...

--தமிழரசி ர--