கடலெல்லாம் ரத்தம்-2

நிர்மல்
October 03, 2016 08:33 முப

கார்த்திக் தொல்லியல் துறையில்(Archaeology) முனைவர் பட்டம் பெற்று, தற்போது தென்தமிழகத்தில் உள்ள புரதானமான இடங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கின்ற பணியில் ஈடுப்பட்டு உள்ளவன்.இந்தியாவில் தொல்லியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற வெகுசிலரில் கார்திக்கும் ஒருவன்.அவனுக்குக் கீழ் நரேந்தர்,குணா,லோகு ஆகிய மூவர் குழு! என்னதான் அவர்கள் ஜுனியர்ஸ் என்றாலும் கார்த்திக் அவர்களை நண்பர்களைப் போலத்தான் பாவிப்பான். 

”சார் நான் உங்களை ஒன்னு கேட்டா கோவிச்சிக்ககூடாது..என்னதான் தொழில் மேல பக்தி இருந்தாலும் எப்படி உங்களால இருப்பத்திநாலு மணிநேரமும் இந்தக் கல்வெட்டுகளையும்,தலைகாணி சைஸ் புத்தகங்களையுமே பாத்துகிட்டும்,படிச்சிகிட்டும் இருக்கமுடியிது சார்?எனக்கு இதையே பாத்து பாத்துக் கண்ணை மூடினா கூடக் கல்வெட்டு எழுத்துகளா தான் மண்டைக்குள்ள ஓடுது” எனக் குணா கேலியாய் சொல்ல, 

”குணா நீ சொல்ற மாதிரி, இது ஒண்ணும் தொழில்பக்தி எல்லாம் கிடையாது..இன்னும் சொல்லப்போனா தொழிலா நினைச்சா இதைச் செய்யவே முடியாது.இதுக்குப் பொறுமையோட சேர்ந்த ஆர்வமும்,ஈடுபாடும் ரொம்ப முக்கியம்.உறுமீன் வரும்வரைக்கும் வாடி நிற்குமாம் கொக்குன்னாரே வள்ளுவர்,கிட்டத்தட்ட அதே மாதரிதான்..இங்க நமக்கான விசயம் கிடைக்கிற வரைக்கும் தேடுறதை நிறுத்தக்கூடாது..ஏதோ பெருசா கிடைக்கபோதுன்னு நினைச்சி ஆராய்ச்சி பண்ணின விசயங்கள் கடைசில ஒண்ணுமே இல்லாம ஆகியிருக்கு..வைஸ் வெர்ஸாக்களும் உண்டு..இன்னும் நீ பாக்குறதுக்கு நிறைய இருக்குடா” என்றான் கார்த்திக் புன்னகை மாறாமல்! 

“சார் அதெல்லாம் இருக்கட்டும்,குணாவுக்கு ஒரு அசைன்மென்ட் குடுத்திருந்திங்களே..அது என்னாச்சுன்னு கேளுங்க” எனச் சமயம் பார்த்து லோகு வாரிவிட, 

“எது..அந்த ஊர் பெரியவர் அகத்தீ ஐயாவை பாத்து பேசணும்ன்னு சொல்லியிருந்திங்களே அதானே சார்..டன்..பெரியவர் அல்ரெடி வந்து உங்களுக்காக வெயிட்டிங்” 

”தட்ஸ் குட் குணா..சரி வா போயி அவரை மீட் பண்ணலாம்..எனக்கென்னவோ அவரைப் பாத்தா சுவாரஸ்யமான ஆளாத் தெரியிறாரு..புதுசா சில விஷயங்கள் தெரிஞ்சிக்கலாம்னு நினைக்கிறேன்” 

குணா, “அய்யயோ நானா..எனக்கும் லோகுவுக்கும் ஒரு முக்கியமான வேலை இருக்கு சார்..அந்த தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு ஒரு விசிட் போயிட்டு வர சொன்னிங்களே..அங்க போகணும். நரேந்தர் சும்மாதான் இருக்கான்..நீங்க வேணா அவனைக் கூப்டுட்டு போங்களேன்..” 

“டேய் டேய் நீயாவது கோவிலுக்குப் போறதாவது..உன்னையபத்தி எனக்குத் தெரியாதா” 

குணா சமாளித்தவாறே,“அதில்ல சார் அந்தப் பெரியவர் எப்படியும் ஆரம்பிச்சி முடிக்கிறதுக்குள்ள விடிஞ்சிரும்..அதுவும் இல்லாம ஏன் நாம எல்லாரும் மொத்தமா போயி அதை அனுபவிக்கனுமேன்னு தான்.ஆனா ஒண்ணு சார் தாத்தாவுக்கு வயசு தொண்ணுரை தாண்டி போயிகிட்டு இருக்காம்..பாத்தா நம்ப முடியல..நம்மலாம் அந்த வயசுல எந்தக் குழிக்குள்ள தூங்கிகிட்டு இருப்போமோ” என்றவனிடம், 

“நீ இப்படியே கதை பேசிக்கிட்டு இரு..உன்னை தனியா ஒரு ப்ராஜெக்ட்க்கு அனுப்பி வச்சாத்தான் சரியா வருவ நீ! நரேந்தர் நீ கிளம்பு நாம போவோம்!” எனச் சொல்லிவிட்டு அந்தப் பெரியவரை சந்திக்கத் தயாரானான்.

அந்தப் பெரியவரை சந்திக்கும் வரை, கார்த்திக்கிற்கு தெரியாது...அங்கே தனக்கென சில அகத்திறப்புகள் நிகழக்கூடுமென!ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னும் ஒரு கதை இருக்கிறது..ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு வாழ்க்கை ஒளிந்துக்கிடக்கிறது..இன்னும் சொல்லப்போனால் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு ஆசான்கள் தானே?!

(தொடரும்...)