தமிழன்னை அழைக்கிறாள்

வினோத் கன்னியாகுமரி
செப்டம்பர் 30, 2016 09:38 பிப

தமிழன்னை தவிக்கிறாள்…
நுனிநாக்கில் ஆங்கிலமும்
மேல்நாட்டு கலாச்சாரமும்
தொற்றிக் கொண்ட
தன் மழலைகளை
திருத்துவது எவ்வாறு?

ஆங்கிலேயன் பிடியினின்றும்
உயிர் உடல் தப்பித்தாலும்,
மனதை ஆட்கொண்ட
அவன் பிடியினின்றும்
வெளிவருவது எப்போது???

சுதந்திரம் பெற்றுவிட்டோமென
மார்தட்டி கொண்டாடும் உறவுகளே,,
மனமின்னும் அவனுக்கு அடிமையென
உணர்ந்து கொள்ளவில்லையா???
சுதந்திரம் பெற்றதாய்
கர்வம் வேண்டாம்
எட்டவில்லை முழு சுதந்திரம்
மனதை மீட்க முயலுங்கள்

மாற்றாந்தாயாம் ஆங்கிலத்துக்காக
நம் தமிழன்னையை மறப்பது சரியாகுமா??
அன்புத்தாயாம் தமிழை ஒதுக்கி
ஆங்கிலக்கல்வி புகட்டும் உறவுகளே
தமிழ்வழி பயின்ற உறவுகளெல்லாம்
வாழவில்லையா வையகத்தில்???

கல்லூரி செல்லும் உறவுகளே
ஆங்கிலம் தெரிந்தால்தான் மதிப்பென்று
கூறியது யார் உங்களுக்கு?

வரப்போவதில்லை கம்பனும் வள்ளுவனும்
நம் தமிழை மீட்டெடுக்க
பாரதியும் மீண்டு வருவதில்லை
தமிழில் சுதந்திர தாகம் வளர்க்க

வற்றாத ஜீவநதி தமிழன்னை,
அம்மா என்றதும் அரவணைப்பாள்
தமிழை புறந்தள்ளி பகட்டாய் வாழும் உறவுகளே…
நம் தமிழன்னை அழைக்கிறாள்…
பணமென்னும் சக்கரத்தின் பின்னால் ஓடி
அன்னைத்தமிழின் துயிலுரிக்கும் உறவுகளே…
தமிழன்னை அழைக்கிறாள்…
அன்னைத் தமிழின் கற்பைக் காக்க விரைந்து வாரீர் …