காத்திருக்கேன் நாட்கணக்கா…

வினோத் கன்னியாகுமரி
செப்டம்பர் 30, 2016 07:22 பிப
ஆடியில காத்தடிச்சா
ஐப்பசியில மழ வரும்
ஆடியில அடிச்ச காத்து
மழைக்காக காத்திருக்கு…
தென்காத்து திரும்பி வந்து
வாடக்காத்தா வீசும்
உன் காத்து எப்போ வரும்
காத்திருக்கேன் நாட்கணக்கா…
கடன் வாங்கி படிக்க வச்சேன்
கம்ப்யூட்டர் கத்துக்கிட்டான்
கடன்காரன் காத்திருக்கான் பத்திரமும் கையோட…
கப்பலேறி பட்டணம்தான்
போன புள்ள திரும்பல
கண் முழிச்சு காத்திருக்கேன் வர்ற தடம் தெரியல…
வெள்ளப்பய கொண்டுவந்த
இங்கிலீசு பேசிப்புட்டா
மாரணச்சு நான் கொடுத்த
என் தமிழு மறந்துபோச்சா???
நூறுகோடி பேருக்கே
இந்த மண்ணு படியளக்கும்
ஒருவாய் சோத்துக்கா
அங்க வேல பாக்கணும்??
வளத்தேன் மகராசனா
உனக்கென்ன கொறயும் வச்சேன்
உன் முகம் பாத்து கண்ணுறங்க
கொடுத்து வைக்கலியே…

(வினோத் கன்னியாகுமரி. ஐந்து வருடங்களுக்கு முன் உடன் பிறப்பின் பாடல் போட்டிக்காக எழுதப்பட்டது)