குட்டிக் கதை = இறந்த பின் வாழ்வது எப்படி…

malar manickam
செப்டம்பர் 30, 2016 05:47 பிப

    ஆறாம் வகுப்பு ஆசிரியர் மரங்களை பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன்,

  ‘சார் மனுசங்களாம் எம்பது, தொண்ணூறு வயசானதும் இறந்து போய்டுறாங்க. ஆனா இந்த மரங்கள் மட்டும் எவ்வளவு வயசானாலும் சாகறதே இல்ல. அது மாதிரி மனுசங்களும் சாகாமலே வாழ முடியாதா..?’

  ‘ மனிதனா பிறந்தா இறந்து தான் போகனும் என்பது நியதி. ஆனா வாழுற காலத்துல நல்ல முறையா வாழ்ந்தோம்னா, இறந்த பின்னாடியும் வாழலாம்’ என்றார்.

  ‘இறந்த பின்னாடி பேயா தான் வாழலாம்’ என்று யாரோ சொல்ல எல்லோரும் சிரித்தனர். 
 

உடனே ஆசிரியர்,
 
     '' அன்னை தெரசா இறந்து ரொம்ப வருசமாச்சு. ஆனாலும் இன்னைக்கு வர நாம யாருமே மறக்கல. அவங்கள பத்தி பாடத்துல படிக்கிறோம். அவங்களோட உருவத்த சிலையாவும் போட்டோவும் வச்சிருக்கோம். அது மட்டுமில்லாம புனிதர் பட்டம் வேற கொடுத்திருக்கோம். இதுக்கு காரணம் என்ன..?
      அவங்க வாழ்ந்த காலத்துல ஏழை எளியோருக்கும் நோயாளிக்கும் சுயநலமில்லாம செய்த உதவி தான் காரணம்.

  நீங்களும் இறந்த பின்னாடி வாழணும்னா  வாழுற காலத்துல நல்ல மனிதானா வாழுங்க '' என்றார்.