மகளதிகாரம்

kaaviyan
செப்டம்பர் 24, 2016 08:48 முப
பார் முழுதும் சுற்றிடினும்,
பரம் பொருளும் கிடைத்திடினும்-நின்
கரம் பற்றி நடை பழகிய,
காலமது கிடைத்திடுமோ ?

புகழ் அனைத்தும் பெற்றிடினும்,
பூ மெத்தை கிடைத்திடினும்- நின்
சிறு மடியில் தலை பதிக்கும்,
சுகமதனை மிஞ்சிடுமோ ?

சந்தச்சுவை செறியச்செறிய,
படைக்க பெற்ற கவிகள் எல்லாம்- உன்
மழலை மொழிகள் போல்
புது கவிதை ஆயிடுமோ ?

பிரபஞ்சதின் “அழனைத்தும்”,
உன் பிஞ்சு விரல் பதித்து- என்
முடி தன்னை நீ கொய்தும்
அழகிற்கு ஈடெதுவோ ?

பெற்றவளது பாசமும்- தாலி
கட்டியவளது பாசமும்
ஒரு சேர கிடைத்திடவே
படைக்கப்பெற்ற உறவிதுவோ ?

தான் பெற்ற அத்துணையும்
தான் பெறா அத்துணையும்
நின்னை வந்து சேர்ந்திடவே
நித்தமும் எண்ணி வரும்
உறவதனின் பெயர் எதுவோ ?
அது “தந்தை” அன்றி வேரெதுவோ ?

அலைகடலென சோகமது
நெஞ்சமுழுதும் நிறைந்திடினும்- உன்
“அப்பா” எனும் வார்த்தை
மொத்தமது கரைந்திடுமே ?

சோர்வுற்ற காலங்களில்
துயில் கலைந்த காலங்களில்-நீ
முத்தமிட்ட சுகமதுபோல்
சொர்கமது வேரேதடி ?

அத்தருணம் மிஞ்சிடவே
வரம் ஏது வேண்டுமடி ?
அத்தருணம் மிஞ்சிடவே
வரம் ஏது வேண்டுமடி ?