எழுக தமிழ்!

பூங்கோதை செல்வன்
செப்டம்பர் 23, 2016 10:33 முப

எழுக தமிழ்!

ஞாலமெங்கும் வீரம் கொண்டு
கோல்சிறந்த தமிழனே
ஓலமிட்டு ஒடுங்கிப்பகை 
காலடியில் வாழ்வதோ 
எழுக தமிழ் எழுக தமிழ்
எரி மலையாய் நிமிர்க தமிழ்!

கொண்ட கொள்கை குன்றிடாத
கருமவீரன் வழிநடந்து 
கொடும்பகையை அழிக்கவென
கொட்டிப் பறை எழுந்திடு 
எழுக தமிழ் எழுக தமிழ்
கொங்குதமிழ் எழுகவே!

நாடுவிட்டு நாடு எங்கும்
நாதியற்று அலைவதோ
நாம் துயின்ற தாய்மடியை
நாய்கள் ஆட்சி செய்வதோ
எழுக தமிழ் எழுக தமிழ்
நெஞ்சு நிமிர்த்தி எழுக தமிழ்!

ஓரினமாய் வீறுகொண்டு
ஒற்றுமையைப் பேணிடு
பேடியல்ல வீரத்தமிழே 
போர்க்குணத்தோடெழுந்திடு
எழுக தமிழ் எழுக தமிழ்
ஓர்மம் கொண்டு எழுகதமிழ்!

ஆண்டுபல சென்றாலும்
அடங்கிப் போன அடிமையல்ல
மாண்டவர்மேல் சூளுரைத்து
மானம் கொண்டு எழுகதமிழ்
எழுக தமிழ் எழுக தமிழ்
முரசியம்ப மொழிக தமிழ்!

பூங்கோதை-