இருநூற்றியோராவது மணநாள் நினைவு!

கா.உயிரழகன்
செப்டம்பர் 21, 2016 11:49 முப
மணமுடித்து நூறாண்டு கழிய
மணமுடித்த நூற்றியோராவது நாளில்
அரசடிப் பிள்ளையாருக்கு வழிபாடென
மணநாள் மிடுக்கோடு நடைபோட்டு
அம்மான் அழகாய்ப் பட்டுடுத்தி வர
அம்மாள் அழகாய்ச் சேலையுடுத்து வர
அன்பான உறவுகளின் ஊர்வலம் வர
எதிரே வந்த எவரோ ஒருவர்
நீண்ட ஆயுளோடு வாழ - நீங்கள்
கையாண்ட மருந்தென்ன என்றார்!
 
நீங்கள் எல்லோரும் - உண்மையில்
சின்னஞ் சிறிசுகள் என்றாலும் - நாங்கள்
நெடுநாள் வாழ்ந்து வந்தாலும்
மருத்துவரையோ மருந்துகளையோ
கண்டதில்லைப் பாருங்கோ...
ஒழுங்காகக் கடவுளை வணங்கினோம்...
உறவுகளொடு அன்பைப் பேணினோம்...
நாளுக்கு நாள் உடற்பயற்சி செய்தோம்...
அரிசி, மா உணவைத் தவிர்தோம்...
எண்ணை, பொரியல், வறுவலை விலக்கினோம்...
பாவற்காய் பிழிந்து சாறு குடிப்போம்...
வெண்டிக்காய் அவிக்காமலே கடித்துண்போம்...
பனம் பண்டங்களோட அவியல் உணவோட...
உழுந்து, பயறு, கடலை, கௌப்பீயோட...
குரக்கன், சாமி, தினை, வரகு உண்பதோட...
அன்பான உறவைப் பேணி வாழ்ந்தால்...
இருநூற்றியோராவது மணநாள் நினைவும்
இணையராக வாழ்ந்து கொண்டாடுவோமே!
 
எதிர்ப்பட்ட எவரோ ஒருவர் கேட்டதிற்கு
பட்டென்று படக் படக்கென - அந்த
நூற்றியோராம் மணநாள் நினைவுக்கு - அந்த
அரசடிப் பிள்ளையாரை வழிபடச் சென்ற
இணையர்கள் பதிலளித்து முடிக்கு முன்
எதிர்ப்பட்ட எவரோ, அவரே தான்
எப்படியோ குதிக்கால் பிடரியில் அடிக்க
ஓட்டம் பிடிப்பதைக் கண்டவர் பலர் - அவர்கள்
சமச்சீர் உணவுப் பழக்கத்தைத் தான்
தங்கள் வாழ்வில் வழக்கப்படுத்தினால் தான்
நெடுநாள் வாழலாம் தான் - என்றுரைக்க
இன்னும் எவராச்சும் தேவையோ என்றனர்!