பரிகாரம்

பெனா
செப்டம்பர் 20, 2016 05:25 பிப
அன்று காலை முதலே ராசம்மாளுக்கு மனது சாியில்லை, நேற்று தனது மருமகளிடம் தன் மகன் முதியோா் இல்லம் என்று எதையோ பேசிக்கொண்டிருந்ததை அந்த வழியாகச் சென்றபோது கேட்டுவிட்டாள். மனது குறுகுறுத்தது அவளுக்கு.

தனது அக்காள் இறந்தபின் அவளின் கணவனயே திருமணம் செய்து வைத்தனர் இவளுக்கு. தனது அக்காவின் மகனென்றும் பாரது, எழிலை அந்த வயதில் இவள் செய்த கொடுமையைத் தாங்காது அவன் ஊரை விட்டே ஓடிவிட்டான். ஆனால் அவள் அதை இப்போது பல நேரங்களில் நினைத்து வரு ந்தாமலும் இல்லை. இவ்வாறு யோசித்துக்கொண்டிருக்கும்போது, அவள் மகன் ரகு வந்தான்.

ரகுவிற்கு அவன் அம்மா தனது அண்ணனை அவ்வாறு நடத்தியதில் மிகவும் வருத்தம். நாளடைவில் அந்த வருத்தமே வெறுப்பாய் மாறிப்போனது.

"அம்மா சீக்கிரம் கிளம்பு"
\
"எங்கப்பா..?"

"இன்னைக்கு ஒரு இடத்துக்கு போறோம்."

"அதான் எங்க?"

"நீ கிளம்பு முதல்ல"

"எனக்குத் தெரியும். நீ என்ன முதியோர் இல்லத்துல கொண்டுபோய் விடப்போற. எனக்கு உன்னவிட்டா வேற யாருப்பா இருக்கா? தயவுசெஞ்சு என்ன உங்கூடவே வச்சிக்கப்பா! இல்ல, இந்த வயசான காலத்துல இப்படி செய்றதுக்கு உன் கையாளயே என்ன கொன்னுடு!" அவள் அழ ஆரம்பித்திருந்தாள்.

ரகு ஒன்றும் பேசாது சென்றுவிட்டான்.

(காலை 10 மணி.)

ரகுவும் ராசம்மாளும் சிவசங்கரி முதியோர் இல்லத்தில் இருந்தனர். அதன் நிர்வாகி முகிலிடம் ரகு பேசிக்கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்து அவர் ராசம்மாளை வரச்சொன்னார்.

"உட்காருங்கம்மா, நானும் உங்க மகன்தான்"

அவள் அழுதபடி மனதில் இருந்ததைச் சொன்னாள். அவர் சிறு யோசனையுடன் ரகுவை வரச்சொன்னார்.

ரகுவும் முகிலும் சிறிது நேரம் தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தனர்.

"இங்க பாருங்க ரகு. எல்லா பிள்ளைகளும் பெத்தவங்கள இங்க கொண்டுவந்து விடறப்போ எதயாவது காரணம் சொல்வாங்க. ஆனா நான் காரணம்லாம் கேட்குறதில்ல. ஆனாலும் உங்ககிட்ட நான் ஒன்னு சொல்லனும்."

"ம்ம்... சொல்லுங்க..."

"உங்க அண்ணனை உங்க அம்மா கொடுமைபடுத்துனது தப்புதான். ஆனா, ஆவங்க அத நெனச்சு வருந்தாம இல்ல ரகு. இப்ப என்கிட்ட அததான் சொல்லி அழுதாங்க. எந்த ஒரு தவறுக்கும் ரெண்டு தீர்வு உண்டு. ஒன்னு தண்டனை, இன்னொன்னு பரிகாரம்.

உங்க அம்மா அவங்க பண்ண தவறை உணர்ந்துட்டாங்க. அதனால அவங்களுக்கு தண்டனை தரது முட்டாள்தனம். உங்களுக்கும் உங்க அம்மா மேல வேற வெறுப்பும் இல்ல. அதனால, நீங்க ஏன் அதுக்கு ஒரு பரிகாரம் பண்ணக்கூடாது?"

"நீங்க சொல்றதும் சரிதான். ஆனா, என்ன பண்றதுன்னு தெரியலயே. நீங்க ஒரு யோசனையோடதான் பேசுறதா எனக்குப் படுது. சரிதான முகில்."

"ஆமா ரகு... என் யோசனை இதுதான். உங்க அம்மா ஒருத்தன அனாதையாக்குனாங்க. நீங்க அதுக்கு தண்டனையா இன்னொரு அனாதைய உருவாக்க நினைக்கிறீங்க."

(ரகுவுக்கு தனது தவறு புரிந்தது. கண்கள் கலங்கின.)

"உங்களுக்கு இப்போ இது சரியா இருந்தாலும் எதிர்காலத்துல உங்க மனச இது உறுத்தாதுனு உங்களால சொல்லமுடியுமா ரகு?"

ரகுவிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

"அதுக்கு பரிகாரமா ஏன் நீங்க ஒரு அனாதை குழந்தைய தத்தெடுக்கக்கூடாது?"

(ரகுவின் முகத்தில் நிம்மதி படர்ந்தது.)

"ஆனா, இதுக்கு என் மனைவி சம்மதிப்பாளான்னு தெரியலயே?"


"நீங்க பேசிப்பாருங்க... தத்தெடுக்கலனாலும் பராவாயில்ல. உங்க அம்மாவ அனாதையாக்கிடாதீங்க!"

மறுநாள் ரகு, அவன் மனைவி மாலா மற்றும் ராசம்மாள் ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்தனர். ரகுவின் அண்ணன் நினைவாக 'எழில்' என்று பெயரிட்டனர்.

அவர்கள் சென்றபிறகு, தனது சித்திக்கு நேரவிருந்த அவலத்தைத் தடுத்து ஒரு குழந்தைக்கு வாழ்வளித்த நிம்மதியுடன் தனது வேலைகளை பார்க்கச்சென்றார் 'எழில்முகிலன்.'