குட்டிக் கதை = ஒளி வட்டம்

malar manickam
செப்டம்பர் 17, 2016 07:43 பிப

  
          பள்ளிக்கு கிளம்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் மெர்லின். அந்நேரம் சுவரில் மாட்டியிருந்த இயேசுவின் படத்தைப் பார்த்தாள். இயேசுவின் பின்னால் அழகான ஒளி வட்டம் இருந்தது. அந்த ஒளி வட்டத்தை பார்த்துக் கொண்டே,

  ‘ அப்பா இங்க வாங்க உங்க கிட்ட ஒண்ணு கேட்கணும்..?; ’

  ‘ என்னம்மா சொல்லு..? ’

  ‘ அப்பா ஏன் இயேசு சாமிக்கு பின்னால மட்டும் ஒளி வட்டம் தெரியுது. நம்ம பின்னாடி ஒளி வட்டம் தெரியாதா..? ’

  ‘ யாரெல்லாம் நல்லது பண்றாங்களா, அவங்க பின்னால ஒளி வட்டம் தெரியும் ’ என்று சொல்லி விட்டு ஆபிசுக்கு கிளம்பி போனார் அப்பா.

    பள்ளிக்கு போன மெர்லின்,  மாலை நேரம் மைதானத்தில் விளையாடி விட்டு வகுப்புக்கு திரும்பி கொண்டிருந்தாள். அப்போது ஒரு தங்கசெயின் கீழே கிடப்பததை பார்த்தாள். அந்த செயினை கையில் எடுத்து, நாமே வைத்துக் கொள்வோம் என முதலில் நினைத்தாள். பிறகு ‘ செயினை தொலைச்சவங்க மனசு எவ்வளவு கஸ்டப்படும்’ என்று நினைத்து, அந்த செயினை வகுப்பாசிரியிரிடம் ஒப்படைத்தாள்.
   
  மறுநாள் காலை வழிபாடடில் தலைமையாசிரியர், ‘‘ ஒரு பொண்ணு, அடுத்தவங்க பொருளுக்கு ஆச படக் கூடாதுன்னு கீழ கிடந்த தங்க செயினை எடுத்து தானே வச்சுக்கிடாம டீச்சர் கிட்ட கொண்டு வந்து குடுத்துருக்கு. அந்த நல்ல காரியம் பண்ணுண பொண்ணு யார் தெரியுமா….?

    ஆறாம் வகுப்பு படிக்கிற மெர்லின் ’’என்று சொல்லும் போது  எல்லோரும்
மெர்லினை பார்த்து வேகமாக கை தட்டினார்கள். மெர்லினுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.

 
     அதே சந்தோசத்தோடு வீடு திரும்பினாள் மெர்லின். அவளை பார்த்த அப்பா
  ‘ என்னம்மா இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்க, மூஞ்சுல ஒளி வட்டம் தெரியுது..? ’

  ‘ இன்னைக்கு நா ஒரு நல்ல காரியம் பண்ணுணேப்பா. அதான் ஒளி வட்டம் தெரியுது ’ என்றாள்.
 
* நல்லதே  நினை,    நல்லதே செய்,
                                                                 உன் முகம் கூட அழகாக தெரியும். *