துவை

ஸ்ரீதர் விக்னேஸ்
ஆகஸ்ட் 30, 2016 07:32 பிப

கடைசியாக கடந்த தீபாவளிக்கு நிகழ்ந்ததாக  நியாபகம்
வரும் தீபாவளி வரை மீண்டும் விட்டு விட்டால்,
குற்ற உணர்வின் புழுங்கியே செத்துடுவேண்.
தீராத அலுவலக தொல்லையில், இதெற்கெல்லாம் எங்கே நேரம்.
சோம்பேறித்தனத்தை அருவி போல் கொட்டும் நாள்களில், இக்கடின வேலை செய்ய மனம் ஒப்புவதே இல்லை,
சோம்பேறித்தனம் என்றால் உடல் கூனி நடக்க செய்துவிடும் சோம்பேறித்தனம் அது.
காலை உணவு தான் பிரதானம் என்கிறார்கள், அரக்கப்பறக்க அலுவலகம் சென்று சேர்பவனுக்கு, காலை உணவுக்கு வழி ஏது, வயிறு அரிக்கும் போதெல்லாம் கொஞ்சம் தண்ணீர் குடித்தால் அடங்கி விடும்,
குளோரின் கலந்த தண்ணீருக்கு நாட்டில் பஞ்சம் இல்லை.
மதிய உணவு மட்டும் என்ன பிரமாதமா? பள்ளிப்பருவத்தில் சாப்பிட்டதில் பாதி கூட இருக்காது, அதற்கே வயிறு உப்பி விடுகிறது, என்னத்த போட்டு சமைக்கிறார்களோ.
அறை சென்று சேர்ந்து, கசங்கி இருப்பவைகளை நீட்டினால் போதும் என்றாகிவிடுகிறது.
எல்லா கருமத்திற்கெல்லாம் இந்த போதை தான் காரணம்
தெரிந்தும் தவிர்க்க முடியவில்லை,
மது போத்தல் இல்லாமல் தூக்கம் பிடிக்காது எனும் பிரமை போதை நோக்கித்தல்லுகிறது,
முழுபோதைக்கும், அரைபோதைக்குமான வட்டத்தில் கடிகாரம் சுழன்றபடியிருக்கிறது,
விழித்தால் எழு, நுழைந்தால் செய், முடிந்தால் போ எனும் நகர்வில் பசியும், போதையும் தான் கடிகார முள்.

என் நண்பன் ஒருவன் இருக்கிறான்,
எந்நாளும் வெள்ளை வெளீர் என உடுத்துபவன்,
வாரந்தோறும் சவரம் செய்து, மீசை மழிக்கும் நவநாகரீக, ஐடி அடிமை.
அவனது முகநூல் பக்கத்தில் பார்த்திருக்கிறேன், சிறந்த செயல்பாடுக்காக அலுவலகத்தில் விருதெல்லாம் வாங்கியிறுக்கிறான், சமீபத்தில் மாரத்தான் ஓடினான் போல, சீருடை அனிந்து அழகான பெண்கள் சூழ்ந்திருக்க நினைவுப்பரிசு ஏந்திய புகைப்படத்தை பதிவிட்டிருந்தான்,
துறை சார்ந்த பயிற்சிக்காக வெளிநாடெல்லாம் சென்று வந்திருக்கிறான்,
பள்ளி பருவத்தில் சொங்கி போல் இருப்பான், இப்பொழுது பெருத்து விட்டான், முகத்தில் பொழிவு கூடியிருக்கிறது.
அவன் பொதுவாக பிறரது அறையில் தங்குவதில்லை.
அடம்பிடித்து அழைத்து வந்த அன்றும் அவன் தங்கவில்லை.
அறையினுள் நுழைந்ததுமே, பீரும், சாம்பாரும் கொட்டி கலந்த மணத்தை, கண்டுபிடித்து விட்டான்,
எங்களுக்கோ பழகிவிட்டது.
வேண்டா வெறுப்பாக பால்கனியில் உலாத்தியபடி மொபைலில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான், பிறகு சிறிது நேரம் டீவி ரிமோட் பொத்தான்களுடன் விளையாடி விட்டு கிளம்பிவிட்டான்.
பெறும் அவமானமாக இருந்தது, "கொஞ்சம் கூட டீசண்டே இல்ல" என தங்கையும்
"இப்படியெல்லாம் இருந்தா உனக்கெப்படி கல்யாணம் பண்றது"  என அம்மா  கூறியதும் நினைவுக்கு வந்தது,
அம்மா அதிகப்படியாக வளர்ந்துவிட்ட என் முடி, மீசை, தாடி பற்றி சொல்கிறாள், எண்ணெயும், தண்ணியும் காய்ந்து கலந்து, திட்டுத்திட்டாக பிசுபிசுக்கிறது, தங்கை என் உடை பற்றி சொல்கிறாள், அலுவலகத்திலும் சொல்லிறுக்கிறார்கள், பொருந்தாத வண்ணங்களில் உடை அணிகிறேனாம்,
“வேலை எப்புடி செய்றேன்னு மட்டும் பாருங்க”  என திமிராக பதில் அளித்தது தவறு என தோன்றியது,

நாள்பட்ட அந்த வேலையை  அன்றைக்கே செய்து முடிக்க சபதம் கொண்டேன், ஆனால் முன்னமே மாலை நேரம் கடந்துவிட்டதால், அடுத்த நாள் அதிகாலையில் செய்வதாக முடிவு,
வழக்கம் போல பரபரப்பாக அலுவலகம் கிளம்பி, ஓவர் டைம் செய்து, பர்த்டே பார்ட்டி கொண்டாடி, சினிமா சென்று மழைக்கு ஒதுங்கி, குளிருக்கு பயந்து,
இன்னும் எத்தனையோ நினைவில் வைத்துக்கொள்ள முடியாத 1008 காரணங்களால் சபதம்  மறந்து போனேன்,
வழக்கமான ஒர் இரவு, சிறிது நேரத்திலேயே மூட்டைப்பூச்சி தன் வேலையை காட்ட தொடங்கியது, இடது கை மணிக்கட்டில் ஊர்ந்த ஒன்றை, தரையோடு அழுத்திக் கொன்றதன் பலனாக, அதன் இரத்த வாடை, முன்னர் அறையெங்கும் பரவியிருந்ததுடன் கலந்து குடலை புரட்டியது, எவ்வளவு முயன்றும், தூக்கம் பிடிக்கவில்லை, நா வரண்டு, தாகம் தொண்டை அடைக்க, மூச்சு முட்டுவதாக உணர்ந்தேன்
பொறுக்க முடியவில்லை, நடுநிசியில் துள்ளி எழுந்து, தண்ணீரில் முக்கியதும் யானை கனம் என தோன்றியது, கை காலெல்லாம் பிடித்தது கொள்ளும் என பயமெடுக்க தொடங்கியது, ஒரு வழியாக முக்கி முனகி போர்வையை துவைத்து, காயப்போட்டேன்,
செய்தித்தாள்களை விரித்து படுத்த பொழுது, அவசரப்பட்டோமோ என தோன்றியது, பெரிதாக என்ன மாறிவிட போகிறது என்ற எண்ணம் மேலோங்கியது, அது ஒழிக என பலமுறை சொல்லிக்கொண்டேன்.

மறுநாள், காய்ந்த போர்வை போர்த்தி படுத்த பொழுது ஏகாந்தமய் இருந்தது
அறையெங்கும் மட்டும் அல்ல என் கனவிலும் சோப்பின் மனம்,
நிம்மதியான உறக்கம், நம்பிக்கையான உணர்ச்சியுடன் அதிகாலை விடிந்தது.

- ஸ்ரீதர் விக்னேஸ்