விடுதலை நாள் வாழ்த்து

முகில் நிலா
ஆகஸ்ட் 14, 2016 10:25 பிப
குழாயடிச் சண்டை
குமுகாயச் சண்டை
இனச் சண்டை
சமயச் சண்டை என
மாண்டவர் பலர் இருக்கலாம்...!

நீர் தரமறுத்தல்
மின்சாரம் பறித்தல்
ஊழலில் பெருத்தல்
உழவனுக்கு மட்டும்
வயிற்றில் அடித்தல் நடந்திருக்கலாம்...!!

பட்டினிச் சாவு
மருத்துவத் திருட்டு
கல்விக் கொள்ளை
உணவுக் கலப்படம்
இயல்பானதாய் உணரப்பட்டிருக்கலாம்...!!!

அணு உலை திறக்கலாம்
குழாய்கள் பதிக்கலாம்
தமிழனின்
தன்மானத்தோடு
மொழி, பண்பாடு, அனைத்தும் கருவருக்கப்பட்டிருக்கலாம்...!!!!

வந்தவன் பிழைக்கலாம்
வரலாறு பொய்க்கலாம்
நொந்து வாழும் 
மாந்தம் 
குவியலாய் புதைக்கவும் பட்டிருக்கலாம்...!!!!!

ஆனால் என்ன

நம்பிப் பகிர்வோம்
நாளை நாமும்
உண்மையில் விடுவிக்கப்படலாம்
என்ற மீநம்பிக்கையில்
விடுதலை நாள் வாழ்த்துக்களை!