தர்க்கம் ஒரு வேசிமகள்

பிறைநேசன்
ஆகஸ்ட் 06, 2016 02:35 பிப
எல்லாப் பேச்சாளர்களையும் நன்கு கவனித்துப் பார்க்கும் ஒருவனுக்கு இந்த விசயம் புலப்படும்.

அவர்களுக்கு நியாயத்தைப் பற்றி எல்லாம் தெரியும் என்று கூறமுடியாது. ஆனால் அவர்களுக்கு மொழியைப் பற்றி நன்றாகத் தெரியும். சொற்களைப் பற்றி நன்றாகத் தெரியும். எதை, எப்படி, எப்போது கூறினால் எதிராளி பதில் பேசமாட்டான் என்று ஆராய்ந்து அதற்கேற்ற வார்த்தைகளை பேசத் தெரியும்.

அது தான் தர்க்கம். வாதத்திறமை.

தர்க்கம் நிறைய விசயங்களில் உள்ளது. இது மொழியியல் வகையிலான தர்க்கம். அதற்கப்பால் அவர்கள் செல்வதே கிடையாது.

தர்க்கம் தெரிந்த ஒருவர் எதிராளியை பேச்சில் எளிதாக மடக்கி விடுவான். ஆனால் அவன் உண்மையைப் பற்றி நிற்கிறான் என்றோ, சத்திய வழியில் நடக்கிறான் என்றோ உறுதியாக கூற இயலாது.

ஒரு சிறந்த பேச்சாளரை அழைத்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் “கண்ணகி ஒரு பத்தினி” என்ற தலைப்பில் இரண்டு மணி நேரம் பேசச் சொன்னால் கூட பேசுவார்.
மறுநாளே வேறொரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அவரை அழைத்து, “கண்ணகி ஒரு விபச்சாரி” என்று நான்கு மணி நேரம் பேசச்சொன்னாலும் பேசுவார்.

உண்மையில் இவருக்கு கண்ணகியைப் பற்றிய எந்த நிலைப்பாடும் கிடையாது. இதுதான் தர்க்கம் ஒரு வேசிமகள் என்பது. அது யாரிடம் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் போகும்.

தர்க்கத்தை ஒருவன் தனது பேச்சில் பயன்படுத்தலாம். ஆனால் முழுவதும் தர்க்கத்தின் வழியில் சென்று விடக்கூடாது. எந்த தர்க்கம் உண்மையை வெளிப்படுத்தும் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். அதே தர்க்கம் உண்மையை கொல்வதாக இருந்தால் மனிதன் அந்த தர்க்கத்தை கொன்று விட வேண்டும். இல்லையெனில் தர்க்கம் இவனைக் கொன்றுவிடும்.

மகாபாரத்ததின் சகுனி தர்க்கம் நன்கு அறிந்தவன். ஆனால் சத்தியத்தை அறியாதவன். ஆனால் கிருஷ்ணன் இரண்டையும் அறிந்தவன். சகுனியை எதிர்கொள்ளும் அளவுக்கு தர்க்கம் தெரிந்தவர்கள் பாரத்ததில் வேறு எவருமில்லை, கிருஷ்ணனைத் தவிர. பேச்சாளர்கள் சிறந்த தர்க்கவாதிகள். ஆனால் ஒருபுறம் படித்த முட்டாள்கள். இல்லையெனில் மற்றவர்களை முட்டாளாக்குபவர்கள்.

சத்தியமும் நியாயமும் கருணையை அடிப்படையாகக் கொண்டது. அது புத்திசாலித்தனத்தோடும் கருணையுள்ளத்தோடும் அணுகப்பட வேண்டும். மாறாக அது யாருடைய வாதம் சிறந்தது என்ற தர்க்கவியல் நோக்கத்தில் அணுகப்படும்போது நியாயம் இறந்துவிடுகிறது.
 
வழக்கறிஞர்கள் தர்க்கத்தின் வழி செல்பவர்கள். நீதிபதிகள் வழக்கறிஞர்களின் வாத்ததைப் பொறுத்தும், வைக்கப்பட்ட ஆதாரங்களை கொண்டும் இயங்கவேண்டிய கைப்பாவைகள். இதற்கிடையில் சட்டம் ஒரு இருட்டறை. இதிலே சட்டத்தை யாரும் கையில் எடுக்கவும் கூடாது. பின் நியாயம் எப்படி வாழும்?