காதல் தோல்வி

பிறைநேசன்
ஜூலை 29, 2016 11:26 முப
காதலித்த நபரை கல்யாணம் செய்ய முடியவில்லையென்றால் அது காதல் தோல்வி. சாதி, மதம், இனம், சமூக பொருளாதார வேறுபாடுகள் அனைத்தும் காதலின் எதிரிகள். இவ்வாறு காதலர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் நினைக்கவில்லையெனில் சமூகம் அவர்களை அவ்வாறு நினைக்க வைக்கிறது.

அரிவாள் முனையில் அவர்களின் திருமண வாழ்வை பறிக்கிறது. ஆனால் அந்த உயிரற்ற சமுதாய ஏற்பாடுகளான சாதியும் மதமும் காதலர்கள் திருமணத்தில் ஒன்று கூடுவதை மட்டுமே தடுக்க முடியும்.

காதல் திருமணத்தில் தடுக்கப்பட்ட பெண்ணும் ஆணும் அதன்பின்னான வாழ்வில் ஒவ்வொரு கணமும் தான் காதலித்தவருடைய நினைவில் வாழ்வதை எவ்வாறு தடுக்கமுடியாது.

காதலர்கள் தங்களுடைய காதல் மிக உயர்வானதென்று கருதுகிறார்கள்.  உண்மையில் அது அத்தனை உயர்வானதெனில், சாதி மதம் போன்ற சிறிய சக்திகள் அதை எவ்வாறு அழித்துவிட முடியும்?

காதலர்கள் காதலுக்காக மட்டுமே காதலிக்க வேண்டும். காதலின் நோக்கம் அன்பைப் பரிமாறிக் கொள்வதற்காக மட்டுமே இருக்க வேண்டும். காதலின் லட்சியம் அன்பாக இல்லாமல் திருமணமாக இருக்கும்போது அந்தக் காதல் சக்தியற்றதாகி விடுகிறது. 
அவ்வாறான காதல் திருமணத்தில் சேர முடியாத நிலை உருவாகும்போது அது காதல் தோல்வியென்று கருதப்படுகிறது.

இது ஒருவகை முட்டாள்தனம்.

ஒருவேளை அந்தக் காதலர்கள் திருமணத்தில் சேர்ந்துவிட்டாலும் காதலின் லட்சியமான திருமணம் நிறைவேறிவிட்டதால் காதலும் வற்றிப்போய்விடுகிறது.

இது அதைவிட பெரிய முட்டாள்தனம்.

காதல் மனதின் உன்னத உணர்வு. ஒரு வித சக்திமூலம். அது திருமணத்தில் முடியவேண்டும் என்ற அவசியமில்லை.

காதலித்தல் என்பது ஒரு செய்ய காரியமும் அல்ல. உணர்வு எப்படி செயலாக முடியும்?. அது ஒரு செயலாக இல்லாதபோது அதிலே எப்படி வெற்றியோ தோல்வியோ இருக்க முடியும்?.

காதல் ஒருவருக்கு ஒரு முறைதான் நிகழவேண்டும் என்பதும் சரியல்ல. 
மனிதனின் வாழ்வில் காதல் நிச்சயமாக ஏற்பட்டே தீர வேண்டும் என்ற கட்டாயாமும் இல்லை.

இந்த அத்தனை முட்டாள்தனங்களும் காதலை திருமணத்தோடு இணைத்துப் பார்த்ததால் உருவானவை.