ஜென்ம சரித்திரம்

pugazhvizhi
ஜூன் 11, 2016 02:47 முப
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரம்.மாணவர்கள் அனைவரும் பரபரப்பாக தங்கள் முடிவுகளை தெரிந்துகொள்ள பள்ளிகளிலும் ப்ரவுசிங் சென்டர்களிலும் அலைமோதிக் கொண்டிருந்தனர்.அன்று தான் ராகினிக்கும் தேர்வு முடிவுகள்.மொத்த மாநிலமும் பரபரப்பாக இருக்கும் நிலையில்,முடிவுகள் வெளியாகி அரைமணிநேரம் கழித்து தான் தூக்கம் கலைந்து கண் விழிக்கின்றாள்.முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையிலும் அவளிடம் எந்த ஒரு பரபரப்பும் இல்லை.அவள் எழுந்து வந்தவுடன் தொலைக்காட்சியினை சற்று உற்று நோக்கிவிட்டு தன் வேலைகளை செய்ய தொடங்கினாள்.அவள் அலட்சியமாய் இருப்பதற்கு காரணம் எப்படியும் நல்ல மதிப்பெண்கள் அதாவது ஆயிரத்தி நூறுக்கு மேல் எடுத்து விடுவோம் என்ற நம்பிக்கை அவள் மனதில் இருந்தது.

கால்மணிநேரம் கழித்து ராகினியின் தமையனிடமிருந்து அழைப்பு வந்தது. அவள் பொதுத்தேர்வில் ஆயிரம் மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக கூறினான்.அதைக் கேட்ட ராகினி மனம உடைந்து போனாள்.வெறும் ஆயிரம் மதிப்பெண்களை வைத்துக்கொண்டு மருத்துவம் படிக்க முடியாது என்ற எண்ணத்தில் ଞமனம் நொந்து போனாள்.
அந்த நேரத்தில் ராகினியின் அம்மா வரலட்சுமி, "ஏன்டி நல்லா பரீட்சை எழுதுனேனு சொன்ன,இப்ப என்னன்னா ஆயிரம் மார்க் தான் எடுத்துருக்க. " மனம் உடைந்த ராகினி, "இல்லம்மா நல்லா தான் எழுதுனேன் எப்படி கொறஞ்சிச்சுனே தெரிலம்மா" என்றாள்.
இவ்வாறு மதிப்பெண்களின் குறைவினைப் பற்றி ஒரு பிரளயமே நடந்துகொண்டிருந்தது.

அதே சமயத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் குறுக்கு தெருவில் முதல் வரிசையிலிருந்து நான்காவது வீட்டின் மொட்டை மாடியில் ஒரு பத்து பேர் கொண்ட கும்பல் குதூகலமாய் தெருவே அலறும் படி கொண்டாட்டம் நடத்திக் கொண்டிருந்தது.அந்த கொண்டாட்டத்திற்கு காரணம்,கும்பலில் இருந்த பத்து நபர்களும் பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்தது தான்.
அந்த கும்பலில் ஒருவனை மட்டும் தூக்கி வைத்து கொண்டாடினர்.ஏனெனில் அவன் இருக்கும் அனைவரை விடவும் அதிக மதிப்பெண்கள் எடுத்ததே காரணம்.அவனது மதிப்பெண் பெரிதாய் ஆச்சரியப்படுமளவிற்கு ஒன்றும் இல்லை.1200க்கு 480 மதிப்பெண்கள் பெற்று அந்த கும்பலில் முன்னிலை வகித்தான்.
அவன் வேறு யாருமில்லை..................நம் கதையின் நாயகன் விக்ரம்.

விக்ரமின் நண்பன் ராஜா அந்த சமயத்தில்,"ஏன்டா மச்சான் எக்ஸாம் சமயத்துல எங்க கூட தானடா சேர்ந்து அரட்டை அடிச்ச..........................அப்புறம் நீ மட்டும் எப்படிடா இவ்வளோ மார்க் எடுத்த"
"போடா நீ ஒருத்தன் எனக்கே தெரில எப்படி இவ்வளொ மார்க் வந்துச்சுனு" என்று பெருமூச்சு விட்டப்படி கூறினான் விக்ரம்.அந்த சமயத்தில் விக்ரமின் இன்னொரு நண்பன் விஜய்,"இதுல என்னடா பெரிய ஆச்சரியம் எப்போதும் நீ தானடா நம்ம கேங்க்ல எல்லாரையும் விடவும் அதிகமா மார்க் எடுப்ப, என்ன.............இந்த தடவை கொஞ்சம் கூடிடுச்சு அவ்வளோ தான் "என்றான்.

மாடியின் விளிம்பின் ஓரம் நின்று கொண்டு தெருவில் போய்வரும் பெண்களையெல்லாம் பார்த்து கொண்டுருந்த ராஜா,விக்ரமின் அருகில் வந்து "எது எப்படியோ மச்சி இன்னிக்கு நைட் ட்ரீட் கன்ஃபார்ம் சரியா "என்றான்.ராஜாவின் மொழிகளுக்கு ஒத்துக்கொள்வதுப் போல் தலையை அசைத்தான் விக்ரம்.

இரவு நடக்க இருக்கும் கொண்டாட்டத்திற்கு முன்பு விக்ரமை பற்றி அறிமுகம் கொடுப்போம்.

அரச காலம் முதல் புகழ் பெற்ற நகரமாக விளங்கும் தஞ்சாவூர் அருகே பட்டுக்கோட்டையி்ல் பெரிய ஜமீன் பரம்பரையைச் சார்ந்தவன் விக்ரம்.கூட்டுக்குடும்பமாக அரண்மனையில் வாழ்ந்தவர்கள் விக்ரமின் தந்தை இறப்பிற்கு பிறகு அவன் தாயார் மந்தாகினி விக்ரமை அழைத்துக்கொண்டு பட்டுக்கோட்டையிலேயே தங்களுக்குச் சொந்தமான வேறொரு மாளிகையில் குடியேறினர்.

வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதால் விக்ரம் மிகவும் செல்லமாக வளர்ந்தான்.இயல்பாக பழகும் குணத்தினால் அனைவருக்கும் பிடித்தமான பையனாக ஊரில் வளம் வந்தான்.தன் இயல்பான குணத்தினால் நண்பர்கள் பட்டாளம‍் பல இருந்தாலும் விக்ரமிற்கு பாலிய நண்பனாகவும் நெருங்கிய நண்பனாகவும் இருப்பவன் ராஜா மட்டுமே.ராஜா,விக்ரமின் அனைத்து காரியங்களிலும் பங்கெடுத்து எந்நேரமும் இருப்பவன்.விக்ரமைப் பற்றி அனைத்தும் அறி்தவன்.அனால் ராஜா அறியாத ஒன்று என்னவாயின் அது விக்ரமின் காதல்.

ஆம், கனவிலும் நினைவிலும் மாறி மாறி அவன் யோசித்துக் கொண்டிருப்பது அவள் ஒருத்தியை மட்டும் தான்.சௌந்தர்யம் பொருந்திய முகம்.வெள்ளி நிலவின் முகம், நட்சத்திரங்களை அள்ளித் தூவிய கண்கள்.................முத்து பற்கள்.அந்த முகம் அவன் கண்களை மூடினாலே இமைகளில் ஒற்றிக்கொள்ளும்.அந்த பௌர்ணமி முகத்தினை எண்ணி எண்ணி ரசித்தான்.அந்த உருவத்தை ஒரு முறை நேரில் கண்டிட துடித்தான்.

ஆம் இதுவரை அந்த உருவத்தை நேரில் கண்டதில்லை.அவ்வாறாயின் எப்படி காதல் என்று கேள்வி எழும்.
அவன் மனதில் குடிக்கொண்ட பிம்பம்.....................அவன் சிறுவனாக இருந்தபோது அரண்மனை இருட்டறைக்குள் செல்லக்கூடாது என்பது அவன் தாயாரின் கட்டளை.ஆனால் அவன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது அந்த அறைக்குள் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.அந்த அறையினுள் கிடந்த படத்தில் ஒரு பெண்ணின் உருவத்தைக் கண்டான்.அந்த உருவம் அவன் கண்களை ஈர்த்தது.பிறகு வாலிப பருவத்தை எட்டியபோது தன் வருங்கால மனைவி அந்த பெண்ணை போல் இருக்க வேண்டுமென்று கொஞ்சம் எண்ணினான்.

பிறகு நாட்கள் கடக்க அந்த பெண் உருவத்திலேயே தன் மனைவி இருக்க வேண்டுமென்று எண்ணினான்.சில சமயங்களில் இது முட்டாள் தனம் என்றும் நடக்காத ஒன்றுக்கு ஆசைபடுவதாகவும் எண்ணினான்.இப்படி அந்த பெண்ணின் ஞாபகத்திலேயே கரைந்தான்.தன் எண்ணங்கள் அனைத்தையும் தன் மனதிலேயே பூட்டி இயல்பாக தன் நண்பர்களிடம் அரட்டை அடித்துக் கொண்டு இன்று தன் நண்பன் விஜயின் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு சுற்றுபயனத்துக்கு வந்தவன் இன்று இரவு நடக்க இருக்கும் இரவு கொண்டாட்டத்திலும் கலந்துக்கொள்ள தாயாராகி கொண்டிருந்தான்.

இரவு கொண்டாட்டத்தில் நண்பர்கள் அனைவரும் உல்லாசமாக அரட்டை அடித்துக் கொண்டும் உணவருந்திக் கொண்டும் இருந்தனர்.அந்த சமயத்தில் விஜய் ,"சரிடா ரிசல்ட் வந்துடுச்சு இனி எந்த காலேஜ்ல படிக்கிறதுனு முடிவு பன்னிருக்கீங்க " என்றான்.அங்கு இருந்தவர்கள் அனைவரும் வெளியூர் சென்று படிக்க போவதாக கூறினர‍்.அந்த சபையில் விக்ரம் மட்டும் அமைதியாக இருந்தான்.

உடனே விஜய் விக்ரமை நோக்கி, "என்னடா நீ மட்டும் எதுமே சொல்லல...............எங்க படிக்க போற" என்றான்.
"ம்ம்ம்.........நானாடா, அம்மாவ விட்டு பிரிஞ்சி என்னால இருக்க முடியாதுடா.................அதனால பட்டுக்கோட்டையிலியே தான் என்ஜீனீயரிங் படிக்கலாம்னு முடிவு பன்னிருக்கன்டா" என்றான் விக்ரம்.

"என்ன எஞ்ஜீனீயரிங்கா ......................நீ படிப்படா உன்ன உங்க வீட்ல சேத்து விடுவாங்க.................அப்படினா இன்னும் கொஞ்ச நாளுல நம்மல்லாம் பிரிஞ்சிடுவோமா " என்றான் கும்பலில் ஒருவன்.
"ஏன்டா கவல படுற லீவ்ல எல்லாரும் மீட் பபன்னுவோம்டா " என்றான் ராஜா.உடனே விஜய் "அப்போ ராஜா நீ எங்க ".

"அவன் எங்க போக போறான் நான் எங்கையோ அங்க தான் ராஜாவும் " என்றான் விக்ரம்.விக்ரமின் மொழிகளுக்கு ஒப்புக் கொண்டான் ராஜா.

பிறகு சில நாட்கள் கழித்து அனைவரும் கல்லூரிகளி்ல் சேர்ந்தனர்.விக்ரம் வசதியான வீட்டு பையன் என்பதால் அவனும் ராஜாவும் மட்டும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தனர்.அதே போல் ராகினியும் அவள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறாததால் தன் ஊருக்கு அருகே உள்ள பட்டுக்கோட்டை பொறியியல் கல்லூரியில் இணைந்தாள்.

தொடரும்..............