"சிரம் குவிவார்"

poomalaipalani
ஜூன் 07, 2016 08:59 பிப
"சிரம் குவிவார்"

மாணிக்கவாசகரின் திருவாசக சிந்தனைகள்.
மாணிக்கவாசகரின் சிவபுராணத்தில் நாம் நோக்கும் அளப்பறிய உணர்வு உட்கருத்துக்கள்,


" கரங்குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள்,
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்கள் "

இரண்ட கரங்களையும் ஒன்றாக சேர்த்து நெஞ்சுக்கு நேரே வைத்து வணங்குவதும், தலைக்கு மேலே தூக்கி வணங்குவதும் மிகப் பழங்காலமாக தமிழர்களிடையே இருந்து வரும் பழக்கமாகும். ( அதுவே தற்போது வணங்குதற்குரிய பிறர் மற்றும் பெரியோர்கள் யாரைக் கண்டாலும் சற்று தலைதாழ்த்தி ஒரு கையைமட்டும் நெஞ்சில் வைத்துக் கொண்டு வணங்கும் பழக்கம் சுறுங்கி விட்டது)

கரம் குவிவார் என்று அடிகளார் கூறுவதன் நோக்கம் இடர் கடலினின்று நீங்கிக் கரையேற வேண்டுமென்ற நினைவு வந்தவுடன் அவனை சரணமாக அடைவதற்குரிய ஒரே வழி மன ஒருமைப்பாட்டோடு கரங்களைக் குவிப்பதாகும். இந்த நினைவு ஆழமாகப் பதியப் பதிய கரங்கள் தானகவே சரண் அடைய குவிந்து விடுகின்றன.

எனவே கரம் குவிவார் என்கிறார் ........ அடுத்த படி
"உள் மகிழும்" என்ற இரு சொற்களும் ஆழ்ந்து சிந்திப்பதற்குரியது. கரம் குவிப்பவர்களின் சித்தத்தின் உள்ளே நின்று கரம் குவிப்பதை கண்டு மகிழ்கின்ற இறைவன் என்று பொருளும் உண்டு, இந்த மகிழ்ச்சி கரம் குவிப்பவருக்கே ஏற்றினால் என்ன என்று சிந்திக்கத் தோன்றுகிறது.
மனத்தில் மகிழ்ச்சி தோன்ற வேண்டுமானால் அதற்கு புறத்தே இருக்கக்கூடிய பொருளாகவும் இருக்கலாம், அகத்திலும் அக்காரணம் இருக்கலாம். உள்மிகிழ்தல் என்பதால் வெளி மகிழ்ச்சி வேறு, உள்மகிழ்ச்சி வேறு என்பது நன்கு புலனாகிறது.
மனம் , புறமனம், அகமனம், ஆழ்மனம் என்று மூன்று நிலையில் இயங்குகிறது , இந்த ஆழ்மனம் சித்தத்தின் செயற்பாடாகும். சாதாரண நிலையில் ஆழ்மனத்தில் எத்தகைய ஒரு நிகழ்வும எளிதில் தோன்றுவதில்லை.
உலகிடை கிடைக்கும் மகிழ்ச்சி புற மனத்தில் தோன்றும் மகிழ்ச்சியாகும். அது மிகச் சாதாரணமானது. நிலையில்லாதது. இங்கு அடியார் பயன்படுத்தும் மகிழும் என்ற சொல்லுக்கு உண்மையான பொருள் "ஆனந்தம் " என்பதாகும். கரம் குவிந்தவுடன் புறப்பொருள்களாலோ, அல்லது நம்முடைய கற்பனையாலோ, அல்லது நம்முடைய புறப்புலன்களின் வழியிலாலோ கிடைப்பதன்று, ஆகவேதான் " உள் மகிழும் " என்கிறார் அடிகளார்.
கரம் குவிவார் உள்மகிழும் என்றால் கரம் குவிதலாகிய செயல் , உள்ளே ஆனந்தத்தை உண்டாக்குகின்றது.
உலக வாழ்வில் பெரும்பாலான புறச் செயல்கள் அகத்தில் - ஆழ் மனத்தில் எந்த வித மாறுபாட்டையும் உண்டாக்குவதில்லை. காரணம் புறச் செயல்கள் எவ்வித உள்ளீடுமின்றி வாலாயமாக பழக்கம் காரணமாக நடைபெறுவதால் மனத்தில் எந்த வித மாற்றத்தையும் உண்டாக்குவதில்லை, ஆனால் இங்கு ஆழ்மனத்தில் ஆனந்தம் உண்டாகிறது என்றால் கரம் குவிதலுக்கும் இதற்கும் உள்ள தொடர்பை அறிய வேண்டும். ஆன்மாக்களின் உள்ளே நின்று இறைவன் மகிழ்கிறான் என்பதில்லை, நம்மை தான் அவன் உள்நின்று மகிழ்ச்சி யடைய செய்கிறான்.

அடுத்தபடியாக


"சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்" சிரம் குவிவார் என்று கூறடியதன் விளக்கம் மரியாதைக்குரிய ஒருவரையோ அல்லது தெய்வத்தையோ வணங்கும் நோக்கில்

நெஞ்சுக்கு நேரே குவிதலையோ நெற்றிக்கு நேரே குவிதலையோ அல்லாமல், தலைக்கு மேலே குவிதலைக் குறிப்பாகும்,

நெஞ்சு நேரே கைகளை குவித்தாலும், நெற்றிக்கு நேரே -ஆக்ஞா சக்ரத்திற்கு நேரே குவித்தலும்

தலைக்கு மேலே குவித்தலும் ஆகிய மூன்று முறைகள் உண்டுஉலக இயலில் நாம் ஒருவரை ஒருவர் வணங்கும் போது நெஞ்சுக்கு நேரே கையை குவித்து வணங்குகிறோம்.

பெரியவர்கள், ஞானிகள் ஆகியவர்களைக் காணும போது புருவ மத்தியில் கைகளைக் குவித்து வணங்குதல் ஒரு முறையாகும்.

தலைக்கு மேலே கைகளை குவித்து வணங்குதல் இறைவனைப் போற்ற மட்டுமே உரியதாகும்

உலகியல் முறையில் பார்த்தாலும் தலைக்கு மேலே கைகளை தூக்கின்றவன் தன்னால் ஒன்றும் முடியாது என்பதை அறிவிப்பதற்கு இதனைப் பயன் படுத்துகின்றான் ( இதனையே ஒருவன் பொய்யான மரியாதையுடன் வணக்கத்தோடு தலைக்கு மேல் கை குவித்து வணங்குவதை " கூலக்கும்பிடு " என்பர் மறைமொழியாக )

நீரில் மூழ்குபவன் கைகளை மேலே தூக்குவதன் காரணம் தன்னால் இனி மீள முடியாது என்பதை உணர்த்துவதே ஆகும். ஆகவே பிறர் உதவியை நாடும் போது கையை மேலே தூக்குதலையே இன்றும் காண்கிறோம்.

பந்தங்களிலிருந்து மீள முடியாது என்பதை உணர்த்த ஆன்மா இறைவனிடம் சரணாகதி அடைந்து அந்த சரணாகதி அடைந்ததை மனத் தால் மட்டுமன்றி உடலாலும் காட்டுவதற்குரிய அறிகுறிதான் கைகளை மேலே தூக்குவதாகும். இந்த நிலையில் தான் இறைவன் ஆட்கொள்ள ஒடோடி வருகிறான் என்பதை மகா பாரத நிகழ்ச்சி ஒன்றால் அறிந்து கொள்ளலாம்.
துச்சாதனன் துகில் உரியத் தொடங்கிய போது பெண்களுக்குரிய இயற்கையோடு திரெளபதி தன் இடையிலுள்ள உடையைத் தன் கைகளால் இறுக்கிப் பிடித்துக் கொள்ள முயல்கிறாள். அந்த போராட்டம் நிகழ்கின்ற வரையில் கண்ணன் தோன்றவில்லை. தன் முயற்சி பலிக்காது என்று கண்ட பாஞ்சாலி தன் இரண்டு கைகளையும் மேலே தூக்கி " கிருஷ்ணா " என்றவுடன் கண்ணபிரானின் கருணை வெள்ளமாக அவள் மேல் பாய்கிறது. நூற்றுக்கணக்கான புடவைக்ள் குவிந்து பாஞ்சாலி இடர் களையப்படுகிறது.

இறைவனிடம் உண்மையான சரண் அடைந்தவர்கள் இரண்டு கைகளையும் சிரத்தின் மேல் தூக்கி குவித்தால் ஒன்றுதான் சரியான வழியாகும்.

தான் என்ற நினைவு இன்றி தன்முயற்சி இல்லாத போது கைகள் தாமே ஒன்று குவிவது பக்குவம் அடைந்த ஆன்மாக்களின் இயல்பபாகும். அதனைக் குறிப்பால் உணர்த்தவே
" சிரம் குவிவார் " என்றார் அடிகளார்.

மேலும் இந்த அடியில் உள்ள " ஓங்குவிக்கும் " என்ற சொல் ஆழமான பொருடையதாகும்.

நீருக்குள் மூழ்குபவன் இனித் தன் முயற்சியால் யாதும் முடியாது என்று அறிந்தபின் இனி நாம் மீடேறே மேலே கைகளை தூக்கியவுடன் கரையில் நிற்பவர்கள் அந்த கைகளைப் பற்றி பிடித்து அவனை கரை யேற்றுகின்றனர். அதுபோல பிறவிப் பெருங்கடலில் அமிழ்ந்து கொண்டிருப்பவன் "உன் திருவடிகளே சரணம்" என்று மன மொழி மெய்களால் துதித்த அந்த விநாடியே சிரத்தின் மேலே கைகள் குவிய அவர்களை பிறவி கடலிலிருந்து தூக்கி விடுகிறார் இறைவர்.

பிறவி என்னும் ஆழ்கடலிலிருந்து தன் திருவடிக்கு இறைவன் ஏற்றுவதை " ஓங்குவிக்கும் " என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் மணிவாசகர்

தொகுப்பு : வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

ஓம் நமசிவாயம்
திருச்சிற்றம்பலம்
மேலும் ஆன்மீகத் தகவலுக்கு

vpoompalani05.blogspot.in/
vpoompalani05.wordpress.com
vpoompalani05.weebly.com