நெஞ்சு பொறுக்குதில்லையே 

Preethypriya
டிசம்பர் 17, 2015 06:37 பிப

எட்டப்பன் 
உளவு சொன்னானா? 
எட்டயபுரத்தின் 
புதிய 'ஆத்திச்சூடி' 
"ரௌத்திரம் பழகச்சொன்னதை. 
ரு(ரௌ )த்ரனாக மாறி 
ரு(ரௌ )த்ரதாண்டவம், 
கோரதாண்டவம் 
ஆடியிருக்கிறதே ! 

இதுவரை, 
இடியாக ஒப்பாரி வைத்து 
மழையாக அழுது 
நியாயம் கேட்ட வானம் 
இப்போது 
போர் தொடுத்திருக்கிறதே 
தமிழகத்தின் மீது; 
தன் நீர் படையால் 
முற்றுகை இட்டிருக்கிறதே 
சென்னையை ! 

வானம் 
வில்லாக வளைந்து 
கோடானு கோடி, 
கோடி, கோடி 
நீரம்புகளைத் தொடுத்ததில் 
தமிழகத்தின் மேனியெங்கும் 
வெள்ள (ளை ) இரத்தம். 
மண் மகளின் உடலெங்கும் 
மறைக்க முடியாத, 
மறக்க முடியாத 
ரணம், காயம். 
காயங்களிலிருந்து கொப்புளித்த 
வெள்ள (ளை ) இரத்தத்தில் 
நீந்த முடியாமல், 
கைகளும் மனதும் 
சோர்ந்து போனது 
மனித இனத்துக்கு. 

ஊடகங்களின் உதடுகள் 
உமிழ்ந்த செய்திகள் , 
அவற்றின் காமிரா கண்கள் 
விரித்த காட்சிகள் _ 
வியப்பு 
வேர்வையாக வெளி வராமல் 
விழி நீராக வெளிவந்திருக்கிறது. 
இரும்பே இளகுமென்றால், 
இதயங்கள்? 

நான்கு மறைகளையும் 
நன்றாகக் கற்ற 
ஞானியரின் கைத்தானம் போல ; 
உள்ளம் தழுவுவதாய் 
பொய்யுரைத்து 
உடல் தடவி, 
உள்ளத்தெல்லாம் உருவிக்கொள்ளும் 
வாடகை மனைவியரைப்போல ; 
பல்வேறு இடங்களுக்குச்சென்று வந்து 
பல்வேறு பொருட்களை 
தன்னிடத்தில் குவிக்கும் 
வணிகர்களைப்போல ; 
கண்ணயர்ந்த நேரத்தில், 
கன்னமிட்டு, 
களவாடிய பொருட்களோடு 
கம்பி நீட்டும் 
கள்ளர்களைப்போல ; 
கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் 
வாரிக்கொண்டு 
கடல்மேல் 
படை எடுத்துச்சென்றது 
சென்னை வெள்ளம். 
பார்க்கும் இடம் எங்கும் 
நீக்கமற,_ 
தண்ணீர் ,தண்ணிர் ,தண்ணீர் ; 
தவிர்த்தால் , 
பார்ப்பவர் கண் எங்கும் 
கண்ணீர், கண்ணீர் , கண்ணீர் . 

'சிங்கார ' சென்னை , 
நினைவூட்டியது 
வெனிஸ் நகரத்தை , 
காஷ்மீரத்து ஏரிகளை . 
மட்டுமல்ல, 
கோல்ரிட்ஜின் 
'பழங் கடலோடியை '._ 
"எங்கு பார்த்தாலும் தண்ணீர் , 
இதழ் நனைக்கத்தான் 
இரெண்டொறு துளியில்லை " 
'இயற்கையும் இறைவனும் ஒன்று ' 
நிலைநிறுத்தியது , 
சென்னை வெள்ளம் . 
வேண்டுதல் வேண்டாமை 
வேண்டாத இறைவன் போல 
பேதம் அறுத்தது 
வெள்ள நீர் . 

உலர்ந்து போனதால் , 
உதடு துழாவி 
ஒரு சொட்டு நீர் கேட்டது 
உள்ளிருந்த நாக்கு; 
உடலோடு உயிரின் தொடர்பை 
உறுதி செய்ய 
ஒரு கவளம் சோறு கேட்டது 
உதடு; 
உடுத்திய துணிக்கு மாற்றாய் 
ஒரு முழத்துணி கேட்டது, 
உடல். 
குரங்கு பிய்த்துப்போட்ட 
குருவிக்கூடாய் 
குடியிருப்புகளைப் பிய்த்துப்போட, 
வெள்ளம் சூழ்ந்த வெட்டவெளியில் 
ஆண்டியும் அரசனும் : 
திருவோடுகள் தொலைத்து, 
கைகளே திருவோடுகளாய் 
வானம் நோக்கிய 
மானுடங்கள். 

கட்டுக்கட்டாய் கரன்சிகள்_ 
கால் புழுதியை கூட 
வாங்கமுடியாமல்; 
தங்கம் கொடுத்தும் 
தண்ணீர் பாட்டில் கூட 
கிடைக்காத 
கையறு நிலை. 
கோடீஸ்வரன் நகரில் 
கொத்துக்கொத்தாய் 
பிச்சைக்காரர்களாய் . 

ஓலங்கள் போட்ட கோலங்கள் , 
நீர் மேல் போட்ட கோலங்களாய் 
காற்றில் கறைய , 
கை பிசைந்து நின்றது , 
கருத்திழந்த மனித கூட்டம். 
செவிடன் காதில் ஊதிய சங்காய் 
அவர்களது கூக்குரல். 

பாட்டன் சொத்து பறி போக, 
பறித்துக்கொண்ட 
மனித இனத்தை 
பழி வாங்கியது 
தண்ணீர் . 
ஆம், 
ஏரி ,குளம்; 
நதி,நீரோடை;அத்தனையும் 
நீர் குடும்பத்தின் 
பாட்டன் சொத்து;அதுவும் 
பரம்பரை சொத்து. 
அரசியல் வா(வியா)திகளின், 
அரசு அதிகாரிகளின் கைகோர்ப்பில் 
அநியாயமாய் ஆக்கிரமித்துக்கொண்டான் 
மனிதன் 
நீர் குடும்பத்தின் 
பா ட்டன் சொத்துக்களை . 
அழுதும் தொழுதும், 
பயனில்லாத ஆக்ரோஷத்தில் 
அடித்து நொறுக்கியிருக்கிறது 
ஆக்கிரமிப்புகளை. 

ஆசை ஆசையாய் 
வாங்கிக் குவித்த பொருள்கள் ; 
கை கட்டி, 
வாய் கட்டி,வயிறு கட்டி 
குருவி சேர்ப்பது போல் 
சிறுக சிறுக சேர்த்து, 
அங்கு இங்கு என்று 
கை நீட்டி, கடன் வாங்கி , 
பார்த்துப் பார்த்து கட்டிய 
'கனவு இல்லங்கள் ' 
கனவுகளாக, 
கபளீகரம் செய்தது 
வெல்ல வடிவில் வந்த 
முதலைகள்,சுறாக்கள்,டைனோசர்கள் . 

'உலகே மாயம், 
வாழ்வே மாயம், 
வாழ்ந்த வாழ்வெல்லாம் மாயம்' 
சித்தர் பாடல்கள் வந்து 
சிம்மாசனம் போட்டுக்கொண்டன, 
சென்னைவாசிகளின் சிந்தைக்குள். 
வசதிகள் பெருக்கி, 
வாழ்ந்த வாழ்க்கை, 
கேளிக்கை, 
தேவைகள், அத்தியாவசியங்கள் ;அத்தனையும் 
அடித்து செல்லப்பட்டன, 
அதீத வெள்ளத்தில். 

அரசின் செயல்பாடுகளை 
உரசிப்பார்க்கும் உரைகல்லாக, 
இந்த வெள்ளம் , 
சென்னைக்கு வந்த வெள்ளம். 
"நாட்டைக் கெடுப்பது அரசியல் "_ 
நடுநிலையாளர்களின் நிலைப்பாட்டை 
நிலைநிறுத்தியிருக்கிறது , 
எச்சரிக்கை தொலைத்ததால் 
எழுத்துக்கள் இடம்பெயர்ந்து 
நகரத்தை நரகமாகிய 
இந்த வெள்ளம். 

ஜாதி,மதம்; 
மொழி, இனம் என்ற 
பேதம் அறுத்தது மானுடம். 
மனிதம் அறுத்த 
பேத அறுப்பை அறுத்து 
பேதம் வகுத்தது ,அரசியல் . 
இங்கு நடப்பது 
'அரசாங்கம் ' 
என்பது மறந்து, 
மறுத்து,மறைத்து, 
கூத்து நடத்தியிருக்கிறது 
அரசியல்.(அரசி +இயல் ) 
கைப்புண்ணுக்கு கண்ணாடியா ? 
அரசின் கையாலாகாதனத்துக்கு 
இந்த வெள்ள நிவாரணப் பணிகளே சாட்சி._ 
அரசியலை, 
அரசி இயலை 
தோலுரித்துக்காட்டியிருக்கிறது. 
எறும்புத்தோலை உரித்துப் பார்த்தால் 
ஒருவேளை யானை வரலாம்; 
ஆனால் 
இதயத்தோலை உரித்துப்பார்க்கும் 
"ஞானம் " வரவில்லை 
தமிழரசுக்கு . 
'பண்ணிய பயிரில் புண்ணியம் பார்த்தல்' 
பண்பாளர் இயல்பு . 
ஆனால், 
எரிகின்ற வீட்டில் 
பிடுங்கியது லாபம் என 
ஆதாயம் பார்த்திருக்கிறது, 
அரசு கட்டில். 
உடுக்கை இழிந்தவனுக்கு 
உதவும் கையாக 
உதவிக்கு வராமல் 
உள்ளதையும் உருவியிருக்கின்றன 
சில 
பசுத்தோல் போர்த்திய புலிகள். 

பதவி சுகத்திற்க்காக 
பல் முப்பத்தியிரண்டு காட்டி, 
கேள்விக்குறியாய் முதுகு வளைத்து 
கூழைக்கும்பிடு போட்டு 
ஆதரவு தேடிய அரிதாரங்கள் 
பெருச்சாளிகளாய், 
பதுங்கிக்கொண்டன, 
பொந்துகளுக்குள்,பதுங்கு குழிகளுக்குள். 
நெஞ்சு பொறுக்குதில்லையே , 
நெஞ்சு நிமிர்த்திய மீசைக் கவிஞனே !, 
நெருப்பு மழையில் நீந்திவந்த 
எட்டாய புரத்து எரிமலையே ! 
இந்த 
நிலை மறந்த அரசியல் வா (வியா)திகளை; 
சொந்த சகோதரர்கள் 
துன்பத்தில் மாய்தல் கண்டும் 
சிந்தை இறங்காமல் 
சிரித்து மகிழ்ந்திருக்கும் 
பசுத்தோல் போர்த்திய புலிகளை நினைத்தால். 

அங்குசம் எதற்கும் அடங்காத 
மதம் பிடித்த யானை 
மதம் . 
அந்த 'மதம் பிடித்த' யானையை 
அடித்துச்சென்று 
எங்கோ தள்ளியிருக்கிறது 
இந்த வெள்ளம் . 
எந்த சமயத்தில் பிறந்தாலும், வளர்ந்தாலும்; 
எந்த இறைவனை வணங்கினாலும், வாழ்த்தினாலும்; 
அடிப்படையில் 
மனிதாபிமானம் படைத்த 
'மனிதர்கள்' நாம் என்பதை 
உலகத்தின் காதுகளில் 
உரக்கச்சொல்லியிருக்கிறது ,இது. 
பள்ளிக்கூடங்கள் மட்டுமல்ல, 
பள்ளிவாசல்களும் தேவாலயங்களும் 
இந்து மக்களுக்கு ச் சரணாலயங்களாக , 
அவர்களுக்கு 
உண்டி கொடுத்ததால் உயிர்கொடுத்து, 
உடை கொடுத்து, 
உறையுள்ளும் கொடுத்தான் 
எல்லாம் வல்ல ,அந்த "அல்லாஹ்" 
இந்து கோவில்கள் 
தஞ்சம் தந்திருக்கிறது 
அப்துல்லாவுக்கும் அந்திரேயாவுக்கும். 
இனிமேல் ,இங்கு 
பள்ளிவாசல்களும் 
பனி மாதாவின் தேவாலயங்களும் 
பரமசிவன், பரந்தாமன் கோவில்களும் 
மனித இனத்துக்கு 
பொதுவான வழிபாட்டுத்தலமாகட்டும். 
இயற்கையிலிருந்தும், 
தவறுகளிலிருந்தும் 
பாடம் கற்பவன் , 
கற்கவேண்டியவன் மனிதன். 
இரண்டு விதிகள் , 
இனி செய்வோம், அதை 
எந்த நாளும் காப்போம்: 
தண்ணீரின் வழித்தடங்களை, 
அவை வாழிடங்களை 
ஒருபோதும் 
ஆக்கிரமிப்பு செய்யோம்; 
எவரையும் 
ஆக்கிரமிப்பு செய்யவும் அனுமதியோம் . 
சென்னையின் மக்கள் அடர்த்தியை 
நீர்த்துப்போகச்செய்வோம் _ 
நிறுவனங்களை , 
குடியிருப்புகளை 
மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு 
மாற்றுவோம். 

இன்னும் சில நாட்களில் , 
சில வாரங்களில், 
மாதங்களில் 
இயல்புக்குத்திரும்பும் சென்னை. 
தவறுகளிலிருந்து 
படித்த பாடங்கள் 
நினைவு செல்களிலிருந்து 
நழுவிப்போகும். 
வரமோ சாபமோ / 
மறத்தல் என்பது 
மனித இயல்பு_ 
மரபுவழி வந்தது, 
மரணம் வரைத் தொடரும். 
'பழையகுருடி, கதவைத் திறடி ' 
பாட்டுப்பாடி 
பழையபடி 
ஆக்கிரமிப்போம், அகற்றுவோம்; 
அவதிப்படுவோம். 
இது 
பிரசவ வைராக்கியம்; 
சுடுகாட்டு ஞானம் . 
மறுபடியும் 
"எட்டப்பன் உளவுசொன்னானா? 
எட்டயபுரத்தின் 
புதிய ஆத்திச்சூடியில் 
ரௌத்ரம் பழகச்சொன்னதை " 
பாடுவோம் புதுக்கவிதை.