கள்ளிப்பால் இதிகாசம்

Preethypriya
டிசம்பர் 08, 2015 12:21 பிப


வடுகபட்டியிலிருந்து புறப்பட்ட
வைகைநதியின்
"கள்ளிக்காட்டு இதிகாசம்" அல்ல,இது.
"கள்ளிப்பால் இதிகாசம்".
இருப்பினும்
இந்த இரண்டுக்கும் உண்டு
இரத்த சம்பந்தம்.

உசிலம்பட்டி ,
மதுரை மாவட்டத்தின் பெரும்பகுதி ,
சேலம் ,தருமபுரி மாவட்டத்தின்
பல கிராமங்கள் ;
அத்தனை கள்ளிக்காடுகளும்
இந்த
கள்ளிப்பால் இதிகாசத்தின்
களங்கள் .

தாயின் கருப்பையிலிருந்து கழன்று
கண் திறக்கும் முன்னே
கள்ளிப்பால் திணிக்கப்பட்டு
மண்ணின் கருப்பைக்குள்
சமாதி ஆகின்ற,
கரு மாறாத ,
பெயரிடப்படாத
பச்சை பெண் குழந்தைகள் அத்தனையும்
இந்த இதிகாசத்தின்
கதைத்தலைவிகள்.

'அம்மா'
ஒற்றை வார்த்தையில்
ஒரு கவிதை;
ஒப்பற்ற கவிதை.
உலகெங்கு தேடினும்
ஒப்பு கிடைக்காத ஒரே கவிதை.
இந்த
ஒரு வார்த்தை கவிதைக்காக
தவமிருக்கும் வானம்பாடிகளாய்
தாய்மார்கள்.
தாய்மையும் தெய்வீகமும்
ஒரு பொருள் சுமந்த
இரு மொழி என்கிறார்கள்
கவிஞர்கள்.

இந்த தாய்மைக்காக
எத்தனை தவம்,
எத்தனை கோவில்,
எத்தனை குளம்.
ஊசி முனைத்தவம்,
மண் சோறு உண்ணல் _ அத்தனையும்
அந்த ஒற்றைச் சொல்
செவிநுகர் கனிக்காக.

தெய்வீகத்திற்கு இணையான
அந்த
தாய்மையின் சின்னமான
தனங்கள்
பால் சுரக்கும் திறனிருந்தும்
இதயங்களில்
பயம் சுமந்ததால்
தளிர்களுக்கு
கள்ளிப்பால் கொடுப்பது கண்டு
(நெல்லும் எருக்கம்பாலும்
கள்ளிப்பாலுக்கு மாற்று )
ஆடிப்போயிருக்கின்றன தெய்வங்கள்.
அதனால் தர மறுக்கின்றன ,தரிசனம்.
தாய்மை இருந்தும்
'தாய்மை' மறுக்கின்ற
இந்தத் தாய்மார்கள்
தாய்மை இல்லாதவர்களா ?
பாசம் தொலைத்தவர்களா?
இல்லை...இல்லை..
இல்லவே இல்லை.
இவர்களின் இந்த
தரங்கெட்ட செயலுக்கு
பாசமே அடிப்படை.
ஆம்,
ஓரிரு நாள் துக்கத்தில்,துயரத்தில்
தொலைந்து போகட்டும் அவலம் என்ற
நல்லெண்ணமே
இதற்கு வித்து.
இதை குற்றமாக கருதவில்லை
இந்தத் தாய்மார்கள்.
இப்போது
இதைச்செய்யாவிடில்
எதிர்காலத்தில் ..................

அந்தப் பெண் கழுத்தில்
தாலிக்கயிறு
ஏறுமோ ஏறாதோ;
தாலிக்கயிறு ஏற வழியில்லாமல்
தூக்குக் கயிற்றில் ஏறுகின்ற
துன்பம் நேரலாம்;
மஞ்சள் நிற
திருமணப்பத்திரிக்கையில்
இடம் பெற வழில்லாமல்
தினசரிப் பத்திரிக்கையில்
இடம் பிடிக்கும் கொடுமை நேரலாம்.

மனிதாபிமானம் தொலைத்த
மன விகாரம்
இந்த வரதட்சணை.
பட்டங்கள் பல பெற்று,
சட்டங்கள் செய்கின்ற ஆளுமை படைத்த ;
ஆணுக்கு சற்றும் இளைப்பில்லாத
பெண் கூட
இல்லை ,விலக்கு.
சமுதாயத் தீமைகளில்
தலையாய தீமை,
தலைமை தாங்கும் தீமை.
தீ இது.

"எழுதியவன்
ஏட்டைக் கெடுத்தான் ,
படித்தவன்
பாட்டைக்கெடுத்தான் " என்னும் நிலையில்
வரதட்சணை ஒழிப்பு சட்டங்கள்.
பணத்திடம்,பதவியிடம்
பணிந்து நடக்கும்
இந்த சட்டங்கள்
ஏழைகள் என்றால்
ஏளனம் செய்யும்; எட்டி உதைக்கும்.
சட்டம் மாட்டி
வரவேற்பு அறைகளை
அலங்கரிக்க மட்டும் போடப்பட்ட
சட்டங்கள் இவை.

பெண் என்றால்
வரதட்சணை என்று
புதிய அகராதி எழுதப்பட்டதே
இந்த கள்ளிப்பால் இதிகாசத்தின்
ஆதியாகமம்.
எனவே,
வரதட்சணை ஒழிப்பு ஒன்றே
எழுதும் முடிவுரை
இந்த இதிகாசத்திற்கு .

இனியொரு விதி செய்வோம்
அதை
எந்த நாளும் காப்போம்:
பெண்மையே!
வரதட்சணை என்று
எவனாவது கேட்டால்
காரி உமிழுங்கள் ,அவன் முகத்தில்.
வரதட்சணை என்னும்
விழுது விட்ட ஆலமரத்தின்
ஆணி வேர்களுக்கு
அது மட்டுமே
அமில வீச்சு.