கோட்டைச் சாவி குதிரைலாயத்திலா?

Preethypriya
டிசம்பர் 06, 2015 04:10 பிப

கோட்டைகளில்
இது "புனிதம்."
பாளையங்கோட்டை,
புதுக்கோட்டை,
செங்கோட்டை,
தேவகோட்டை,
கந்தர்வக்கோட்டை,
சிவரக்கோட்டை,
செஞ்சிக்கோட்டை என ,
தமிழகத்தில்
எத்தனையோ கோட்டைகள்.
தமிழக அரசியலில்
இது
பிரபலமான கோட்டை.
இதன் சாவியை கைப்பற்ற
அரசியல் கட்சிகளுக்குள்
எத்தனையோ
தள்ளு முள்ளு ;
முட்டல் ,மோதல்;
வெட்டு, குத்து.

'புனித ஜார்ஜ் கோட்டை"_
தமிழகத்தின்
எண் ஜாண் உடம்பிற்கு
இதுதான் சிரசு.
இந்த சிரசின்
கட்டளைக்கு கீழ்பணிந்து
இயங்குகின்றன ,
தமிழகத்தின் அவயங்கள்.
இந்த சிரசு மட்டும்
சரியாக இயங்கினால்
சீராக இருக்கும்
தமிழகத்தின் உடலியக்கம்.
"கர்ம வீரரும் "
கர்ம வீரர்களும்
குடியிருந்த கோட்டை இது.
ஒரு கையில்
தன்னலம் துறந்த செங்கோல் ,
மறு கையில்
துஷ்ட நிக்ரகம் ,சிஷ்ட பரிபாலனம்
இரு தட்டுகளாலான துலாக்கோல்.
இன்று?....................
கோட்டான்களின் குடியிருப்பாக.

மரூ உ வோ ,திரிபோ ?
குதிரை லாயமான
"கோடாபாக்"
இன்று
கோடாம்பாக்கம் .
"கோடா பாக்"_
குதிரை
சாணத்தின், மூத்திரத்தின் நெடி,
கரன்சிகளின் வெப்பத்தில் ஆவியாக,
சலவை நோட்டு வாசனை
காற்றில்
பாய்மரம் விரிக்கும்.
இது
தமிழகத்தின் ஹாலிவுட்,"கோலிவுட்"._
வெள்ளித்திரை விருந்துக்கான
"சமையல்கூடம்.
இங்கே,
புட்டம்,பொடுகு சொறிந்த
புண்ணாக்கு,
நகக்கண்களில் குடியேற ,
விரல்கள்
மாவு பிசையும்,
சப்பாத்திக்கு, புரோட்டாவிற்கு.
அங்க வியர்வை அருவியாக,
இட்லி தோசையில்
உப்பு சேரும்.
அக்குள் வேர்வை
எண்ணை சட்டிக்குள் எண்ணையாக,
பதார்த்தங்கள் அதில்
பொறித்து எடுக்கப்படும்.
எச்சிலும் பீழையும்
சர்க்கரையாய் மாறி சுவை சேர்க்க ,
இங்கே தயாராகும் பதார்த்தங்கள்
"ஜிகினா"தாள்களில் சுற்றப்பட்டு,
கண்ணாடி "ஷோ" கேஸ்களுக்குள்
கண் சிமிட்டும்;கவர்ச்சி காட்டும்;
நாவில் எச்சிலை ஊறவைக்கும்.
இந்த சமையல் கூடத்துக்குள்
விழி வீசியவர்கள்
திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள்
இந்த "ஷோ "கேஸ் பக்கம்.


வெட்டி ஒட்டிய
அட்டைப்பட அரண்மனை நகல் பார்த்து
ஆச்சர்யப்படும், அசல்கள்.
அட்டைக்கத்தி
அசல் புலியைக்கொல்ல ,
வாள் வீச்சின் தேவையின்றி
வாய் வீசியே
எதிரிகளை பந்தாடும் "லாவகம்" பார்த்து
தியேட்டருக்குள்
கைதட்டல்கள் காது கிழிக்கும்;
விசில் சத்தம்
விண் துளைக்கும்.

அரிதாரப்பூச்சு
அறுபதை இருபதாய்க் காட்ட,
கல்லூரியில் காதல் செய்யும்,
குத்தாட்டம் போடும்.
ஒரு கை வீசி
ஒன்பதை ஓடச்செய்யும்.
சுண்டெலி வாள் வீச,
சிங்கங்களின் சிரம் அறுபடும் .
அன்றாடம் ஆறு முறை
ஆடைமாற்றும் 'கற்பு,'
அரியின் தாரமாய்,
அழகு கண்ணகியாய்
வேஷம் கட்டும் .
அரங்கத்தில்
அம்பிகையாய்
அரிதாரம் பூசும் 'லலிதா'க்களின்
அந்தரங்கமோ "அரங்கேற்றம்"_
'பெட் ரூமின் விளக்கணைந்தால்தான்
ஸ்டுடியோக்களில்
ஹெட்லைட் எரியும்' என்ற
பாலபாடம் கற்றவர்கள்.

கண்ணாடித் தாள்களும்
ஜிகினாத் தூள்களும்
கற்பனை விஞ்சிய
கனவுலகம் படைக்கும்
இவ்வுலகம்
ஒரு நிழலுலகம்.
இது,
ஒரு கனவு தொழிற்சாலை ,
தமிழகத்தின் தனிப்பெரும் தொழிற்சாலை .
படித்தவனோ, பாமரனோ!_
இளசுகள்
கால் ஊ ன்றத்துடிக்கும் தொழிற்சாலை.
ஒப்பனை உலகை,
அந்த
கற்பனை உலகை
உண்மை என்று நம்ப வைக்கும்
மாயா உலகம்.
இங்கே,
மந்திரத்தில் மாங்காய் அல்ல ,
மாந்தோப்பே உருவாகும்.
இங்கே,
குண்டூசி குழி தோண்ட , கடலாகும்
அதில் ,கோயம்புத்தூர் படகாகும்.
வண்ணத்துப்பூச்சி
வாரியல் குச்சி எறிந்து
வல்லூரை வீழ்த்திவிடும் .

அரிதாரம் பூசினால்,
ராவணன்
ஆவான் ,
ராமன் .
அங்கே, நடக்கும்
ராம ராஜ்ஜியம்.
இப்படி ,
கேழ்வரகில் நெய் வடிக்க,
கேட்டு வாங்கிக்குடித்த
கேணையர்கள் ஏராளம், தாராளம்.
விளக்கை சுற்றிவந்து,
விட்டில்களாய்
வெந்து மடிந்தவர்கள்,
கோடி வேட்டிக் கனவுகளில்
கோவணம் பறிகொடுத்தவர்கள்
ஏராளம், ஏராளம்.

இந்த கனவு உலகத்தின்
"குடி'மக்கள்களுக்கு
ஏ .சி. கூட வேர்க்கும்.
மனிதர்கள்,
மண்ணில் கால் பதித்து நடக்கும் போது,
இவர்கள்
மேகத்தில் மிதந்து செல்வார்கள்.
கும்பிகள்,
கூழுக்கு அழும்போது
இவர்களது கொண்டைகள்
பாரீஸ் பூக்களை தேடி அலையும்.

இந்த 'அரிதார'உலகத்தின்
'தலை'களை
தலைவர்கள் என்று
ஏமாந்து
தலை மேல் தூக்கிவைத்து
ஆடினார்கள்,
பாடினார்கள்,
பாலாபிஷேகம் செய்து
சூடம் காட்டினார்கள்;
கோட்டையின் சாவியை
இவர்களின் கையில் திணித்தார்கள் .
விளைவு?
கனவு தின்று,
பசியாற்றிக்கொண்டிருக்கிறோம்.
பாலும் தேனும் ஓடுமென்று
கனவு கண்டு
நுரை தின்று பசியாற்றிக்கொண்டிருக்கிறோம் .
சாவி வாங்கியவர்கள் வீடுகள்
பாலில் தேன் கலந்து குடித்து
பன்னீரினால் வாய் கொப்புளிக்க,
சாவி கொடுத்த வீடுகள்
சாவு கொடுத்த வீடுகளாக .

போதும்,போதும் ;
தோலிருக்க,
சுளை விழுங்கும் கூட்டத்திடம்
கோட்டைச் சாவியை
கொடுத்து வைத்தது போதும்.
"பட்டதெல்லாம் போதும்
இந்த பட்டினத்தாரிடம்"_
'பட்டு' இனத்தாரிடம் .
கோட்டையின் சாவியை
இனிமேலும்
விட்டுவைக்க வேண்டாம்
குதிரை லாயத்தில்.
கோஷங்கள் வானைப் பிளக்கட்டும்;
வாசல் திறக்கட்டும் ;
வழி பிறக்கட்டும்.