பேசுவது 'ஹே ராம்'

Preethypriya
டிசம்பர் 03, 2015 07:35 பிபஇளவேனிலின் இளம் தளிர்களே !
'தூக்கி,
தோளில் வையுங்கள் ;
சுமக்கிறோம் இந்தியாவை' என்று
மார் தட்டும்
இந்தியாவின் 'அட்லஸ் 'களே !

விலா எலும்புகளை
வெளிச்சம் தரிசிக்க,
தரை தடவும் விழிகளோடு
தடி ஊன்றி,
தலை குனிந்து,
சந்துகளின் சந்திப்புகளில்
நிற்கும் என்னை தெரிகிறதா?

இந்தியாவின்
எல்லா ஊர்களின்
நெற்றியிலும்
என் பெயர் எழுதப்பட்டிருக்கும்-
பார்க், பஸ் நிலையம்,
பள்ளிக்கூடம் என்று.
"மோகனதாஸ் கரம்சந்த்" என்று
இட்ட பெயர் சொன்னால்
கிரேக், லத்தீன் மொழி போலத்தெரியும் உங்களுக்கு.
"காந்தி"என்ற
குடும்பப்பெயர் சொன்னால் மட்டுமே
அறிமுக ரேகைகள் ஓடும்
உங்களது நெற்றிகளில்.


காரை, சிமிண்டால்
என்னை வார்த்து
சந்திகளில் எல்லாம்
நிறுத்திவைத்திருக்கிறீர்கள் .
காக்கை குருவிகளின்
எச்சங்களுக்கு,
இரைப்பையின்
மிச்சங்களின்
சரணாலயமாக இருக்கிறேன் நான்.

அதிகாரத்தின்
ஆஸ்தான மண்டபங்களான
அரசு அலுவலங்களிலும்
அரசியல் வா(வியா)திகளின் வரவேற்பு அறைகளிலும்
நீதி குறுகி 'நிதி'யான
நீதி மன்றங்களிலும்
திட்டம் போட்டு,
சட்டத்துக்குள் மாட்டிவைத்திருக்கிறீர்கள் .
ஏன் என்று தெரியவில்லை எனக்கு.
ஒருவேளை அது
அறைகளை அலங்கரிக்கும்
மலிவான அலஙகாரப்பொருள்
என்பதாலா?

இளைஞர்களே!
நெற்றி சுருக்கி,
கண்கள் இடுக்கி
நீங்கள் பார்ப்பது புரிகிறது எனக்கு.
நட்சத்திரமாக இருந்திருந்தால்
என்னை நினைவிருக்கும்-
சினிமா நட்சத்திரமாக,
கிரிகெட் நட்சத்திரமாக.
அவர்கள் மட்டும்தானே
உங்களது ஆதர்ஷ புருஷர்கள்!
தோல் சுருங்கி,
விலா எலும்புகள் வெளியே தெரிய,
அரை வேட்டி கட்டிய
அரை நிர்வாண பக்கிரி-
இந்திய விவசாயி நான் .

கனமான் 'பர்ஸ்' வைத்திருக்கும்
கனவான்கள் என்னை
அடிக்கடி பார்த்திருப்பார்கள்.
நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்று
சோதனை செய்யும் போது.
வெள்ளை சுவரின் மீது வெள்ளை சாக்பீசால் எழுதிய
எழுத்துக்கள் போல
பண நோட்டுகளின் வெள்ளைக்குள்
பதுங்கிக்கிடக்கும் உருவம் நான்.
நீங்கள்தான்
'டெபிட் கார்டு", "கிரிடிட் கார்டு" பயன்படுத்துகிறீர்களே!

ஏட்டுக்கல்வி எழுத்தாணியாகி,
மூளைகளில்
எர் உள,
ஏட்டுச்சுரைக்காய்களை
ஏராளமாய் பயிரிட்டிருக்கிறீர்கள் .
கனமான பர்ஸ் ,இங்கிலாந்து வீடு,
பாரிஸ் பொழுதுபோக்கு,
சீன உணவு,
இந்திய மனைவி.
இதுதானே உங்களது கனவு?
காற்றுக் குமிழிகளை மட்டுமே
சுமக்கக்கூடிய, தேன்
சிட்டுக்குருவிகள் நீங்கள்.
பலாக்காய்களை சுமப்பது எப்படி?
உங்களைப் பெற்றவர்கள் உங்களுக்கு
பலாக்காய்கள்!
அதனால்தான்
நீங்கள் குடியிருந்த
கருப்பைகளை தூக்கி எறிந்துவிட்டீர்கள்.
உங்களை சுமந்த கருப்பையில்
நெருப்பையாவது சுமந்திருக்கலாம்!.
அவர்கள் தூங்கப்போகும்
நிம்தியான நெடிய தூக்கத்திற்கு
கொள்ளி போடவாவது பயன்படும்.

தாயை சுமக்கமுடியாத
நீங்கள்
தாய்நாட்டைச் சுமக்கப் போகிறீர்கள்!
உங்கள் தாய்
தங்களது மார்புக்காம்பினை
உங்களது உதடுகளில் திணிப்பதற்குப் பதிலாய்
நாய்களுக்கு திணித்திருக்கலாம் .;
நன்றியாவது மிஞ்ச்யிருக்கும்.
நீங்கள்
உங்கள் பெற்றோருக்கு முன் வைத்த
நெளிந்த அலுமனியத்தட்டை
பத்திரமாக வைத்திருக்கிறார்கள்
உங்களது மக்கள்;
உங்களுக்காக.

தந்த தொட்டில்
தாலாட்ட ,
வெண்ணிலவு கட்டி
வெள்ளிக்கிண்ணத்தில் பால் ஊட்டியவள்தான்
என் தாய்.
என் அரை வயிற்றை
ஆட்டுப்பாலும் வேர்க்கடலையும்தான்
நிறைத்தது..
சூட்டும் கோட் டும் போட்டு,
"பாரிஸ்ட்டரா "க பணி புரிந்தவன்தான் ;.
இந்திய குடியானவன் போல
அரை மறைக்க
அரைவேட்டி கட்டி வாழ்ந்தேன்.
"காந்தி"யாக,
சூரிய காந்தியாகத்தான் இருந்தேன்.
சுதந்திரம் சூரியனாக,
என் முகம்
அந்த சூரியனை நோக்கியே மலர்ந்திருந்தது.
என்னை வாட்டி எடுத்தது
சுதந்திர தாகம்.
இன்று
என்னை
சுட்டெரிக்கிறது அந்த சுதந்திர சூரியன்.
"ஏன் பாடு பட்டோம் "
சம்மட்டி கொண்டு அடிக்கிறது
மனசாட்சி .
எண் ணைச் சட்டியில் இருந்து
எரியும் நெருப்புக்குள் விழுவதற்கா
பாடுபட்டேன்?
விழலுக்கு இறைத்த நீராய் போனதே
சுதந்திரம்.

சுதந்திரத்தின் தூண்களான
சட்ட சபைகளும்
சட்டம் நடமாடும் நீதிமன்றங்களும்
சுய லாபங்களுக்காக
செயல்படும்போது
வாங்கிய சுதந்திரம் எதற்காக.
சட்ட சபைகள்
சுய புராணங்களுக்கான,
சுயவிளம்பரங்களுக்கான
சத்த சபைகளான பிறகு
"சுதந்திரம் செத்த"சபைகளான பிறகு
அகராதிகளில்
"சுதந்திரம்"என்ற சொல் எதற்கு?

இளைய தளிர்களே !
உங்களிடம் உதவி கேட்டு
கையேந்தி நிற்கிறேன் ;
பாட்டன் என்ற உறவின் பெயரால் .
என் கண்களை
கருப்பு துணி கொண்டு
கட்டிவிடுங்கள்.
காந்தாரிக்கு செய்தது போல.
வேண்டாம், வேண்டாம்.
அகற்றிவிடுங்கள் என் சிலைகளை,
என் படங்களை,
என் பெயர் தெரியும் இடங்களை.
கரன்சி நோட்டுகளிலிருந்தும்
அகற்றிவிடுங்கள்
என் நிழல்களை .
என்னை வைத்து நடத்தும்
மோசடிகள்
என்னை எண்ணை சட்டிக்குள் போட்டு
காய்ச்சுவது போலிருக்கிறது.

துப்பாக்கி,
தடி, சவுக்கு என்று
அடக்குமுறை நாய்களை
எங்கள் மீது ஏவிய
வெள்ளையனால் காக்கப்பட்டது
என்னுயிர்,
அறுபது வருடங்கள்.
ஆனால் சுதந்திரத்தால்
காக்கமுடியவில்லை
ஒரு வருடம் கூட.

கற்பூரமாய் கரைந்துபோனமைக்கு
வருத்தப்படவில்லை ,நான்.
சந்தோஷ பூக்களின்
சங்கீத சங்கமத்தை ரசித்துக்கொண்டிருக்கிறேன் .
பசி, பஞ்சம்,பட்டினி;
கொலை,கொள்ளை,கற்பழிப்பு;
நேர்மையின்மை,லஞ்சம் ;
சுயநலம்,சுரண்டல்;
இவற்றின்
சங்கம நெருப்பில்
வெந்து போகாமல் காத்த
கோட்சேயின்
துப்பாக்கி தோட்டாக்களுக்கு
என் வந்தனங்கள்.
"ஹே ...............ராம்".