சிறுகூடல்பட்டி தந்த சீதன(ள)ம். 

Preethypriya
November 21, 2015 03:11 பிப


குடியரசு 
தன் கைகளால் 
முடி சூட்டிய 
முடியரசு 
இந்த கவியரசு. 
எதுகை மோனை மட்டுமல்ல, 
எல்லா அணிகளும் 
எதிர் கேள்வி கேளாமல் 
ஏவல் செய்கின்ற 
கவியரசு இவன். 

யாப்பு புரவிகளில் 
இவன் வலம் வந்தாலும் 
சினிமா துறையே 
இவனது சிம்மாசனம். 
எழுது கோல் 
இவனது கைகளில் 
செங்கோலாய் இருக்க, 
கவி மகளின் இதயம் வீங்க 
தமிழகம் இவனுக்கு சூட்டியது 
கவி மகுடம். 

மேகலை 
மறைந்த போது 
மேதினிக்கு விட்டுச் சென்ற 
"அமுத சுரபி" இவன். 
அள்ள அள்ள குறையாத 
அட்சயப்பாத்திரம் . 
ஆபுத்திரன் 
கை அட்சயபாத்திரம் 
பசிப்பிணி போக்கிய போது 
கண்ணதாசன் கையில் உள்ள எழுதுகோல் 
போக்கியது செவிப்பிணி. 

ஆடி மாதத்தின் 
குற்றாலக் குளிரினை 
குத்தகைக்கு எடுத்துக்கொண்டவன், இவன். 
வற்றாத கவியருவியை 
முத்தாரமாகத்தொடுத்தவன் . 
பொக்கு வார்த்தைகள் கூட 
இவனது பேனாவில் இருந்து 
பிரசவம் ஆகின்ற போது 
பொக்கிஷமாய் பாதுகாக்கப்படுகிறது.. 

வசந்த ருதுவில் 
வார்த்தை இசைக்கின்ற 
வானம்பாடி, 
இலையுதிர் காலத்தில் 
இரங்கல் பாடுகின்ற 
பூங்குருவி. 
இவன் 
கவி இசைக்கின்ற போது 
குயிலும் அவன் இசைக்குள் 
கைதியாகிப்போகின்றது. 

சந்தங்களுக்கும் 
சத்தங்களுக்கும் 
வேறுபாடு தெரியாத 
சந்தை இரைச்சல்களுக்கு நடுவே 
சந்தம் பாடுகின்ற பூங்குருவி 
இந்த சந்த அருவி . 

கம்பனுக்கு 
அம்பிகாபதிதான் வாரீசு என்று 
அறியாமல் பேசுகின்றார்கள். 
புவிக்கு அவன்; 
கவிக்கு? 
இவன், இந்த கண்ணதாசன். 
கம்பன், 
இராமாயணம் இசைத்த போது 
அவனுக்கு கற்றுச்சொல்லியாக இருந்தவன் 
இவன். 
அதனால்தான் இவன் 
கவிதை இசைக்கும் போதெல்லாம் 
கம்பனே இவனுக்கு 
கற்றுச்சொல்லியாகிவிடுகிறான் . 

யாப்பு நையாமல் 
இவன் பா புனைந்தாலும் , 
இவன் பா புனையும் போது 
யாப்பு நைந்தாலும் 
கா புனையும் 
காலை மலர்கள் போல 
இவனது கவிதை ,என்றும் 
புதிதாயிருக்கிறது. 
இவனது கவிதை 
மூப்படையாத "பூப்பு" மங்கை. 

சங்கடப்படுத்துகின்ற 
சங்கப்பாக்களை 
சர்க்கரை பாகாக்கி 
எதுகை மோனை என்று 
ஏலம் சுக்கு சேர்த்து, 
எவரும் உண்ணும் வண்ணம் 
தேன் பாகாகத்தந்தவன் 
இவன். 

கவிதைகளின் மாநாட்டில் 
இவனது கவிதைகளே 
தலைமை தாங்குகின்றன ; 
தராசாய் அமைகின்றன. 


"வகையறிந்து 
வரிசை படுத்தப்பட்ட 
வார்த்தைகளே கவிதை " என்பதற்கு 
இவனது கவிதைகளே 
உரைகல்லாய் நிற்கின்றன.. 

கடிவாளம் இல்லாத 
காற்றுப்புரவி ஏறி 
பயணம் செய்கின்ற 
கவியரசன் இவன். 
மின்னலைக் குடித்து 
மின்சாரமாய் கொப்புளிக்கும் 
விஞ்ஞானம் . 
கற்பனை குடித்து 
கவிதையாய் கொப்பளிப்பது 
இந்த மெஞ் ஞானம். 

பன்னிரெண்டு ஆண்டுக்கு 
ஓர் முறை 
பூத்து வருகின்ற 
குறிஞ்சி மலர் இல்லை இவன். 
பன்னூறு ஆண்டுக்கு ஒருமுறை 
பூத்து வருகின்ற 
கவிதை மலர்; 
அபூர்வ மலர்.. 
இந்த மலரில் தேன் குடிக்காத 
மானுட தேனீக்களே 
இருக்கமுடியாது. 
தமிழ் மலரில் 
இவன் தந்த "கவிதை" தேன் 
உண்ணாத 
தமிழனே இல்லை; 
உண்ணாதவன் 
தமிழனே இல்லை. 


இவன் தமிழ் தெரிந்த 
மனிதர்களின் 
உதடுகளில் எல்லாம் 
ஊர்வலம் வருகின்றான். 
உதடுகள் 
உணவினை ஒத்க்கிய போதும் 
இவனது கவிதைகளை 
ஒருபோதும் ஒதுக்கியதே இல்லை. 
மூச்சு விடும் முன்னே 
முன்னூறும் நானூறும் 
"ஆச்"என்றால் 
ஆயிரம் ஆயிரம் 
சந்தம் தந்தவன் இவன். 
சந்தங்களை 
சகாயமாக விற்பனை செய்த 
"தமிழ் சந்தை" இவன். 

புட்டியில் இருந்து மது 
இவனது புத்தியில் இறங்கிய போது 
இவனிடம் பட்டியல் போட்டு 
பக்தியுடன் நிற்கின்ற சொற்களைக் கோர்த்து 
கவிதை அட்டியல் செய்த 
"கவிதை பொற்கொல்லன்"இவன். 
வான் பொய்ப்பினும் 
தான் பொய்யா 
வற்றா காவிரி பொய்த்த பின்னும் 
வற்றிப்போகாத "தமிழ் கங்கை"இவன். 

சங்கப் பூவில் 
நுழைந்து 
தேன் குடித்து 
குடித்த தேனை 
கவிதையாய் கொப்புளிக்கும் 
கவித்தேனி . 
'அக்' மார்க் தேனை விட 
இவன் தந்த சந்தத்தேன்களே 
அங்காடியில் 
அதிகமாக விற்பனை ஆகின்றது . 


கண்ணா பின்னாவென்று 
கவிதை பாடும் கவிஞனல்ல 
இவன். 
கண்ணா பின்னாவென்று 
எழுதினாலும் 
கன்னனுக்கு பின்னே வந்தவனே என்று 
அங்கே பொருள் இருக்கும். 

இவனது செந்நா 
சிந்தும் வார்த்தைகள் 
மின்னா,பொன்னா என்று வாசிப்பவரின் 
விழிகளை விரிய வைக்கும் , 
அதில் வியர்வையை 
வரவளைக்கும். 

இவனது கவிதைகளில் சில 
காது குத்துமே அன்றி 
காதில் குத்தாது; 
காதைக் குத்தாது. 

கார் காலத்தில் 
காற்றடிக்கின்ற போது 
கலைந்து செல்லும் 
மேகத்தின் அழகு 
இவனது கவியழகு. 
மழை பெய்து ஓய்ந்தபின்னே 
தோன்றுகின்ற 
நிர்மல வானத்தின் தெளிவு 
இவனது வார்த்தைகள் . 
வாணியிடன் வீணை வாங்கி 
அதை எழுத்து கோலாக மாற்றம் செய்து 
எழுதியதால் 
இவனது எழுத்துக்களில் 
இசை பிறக்கிறது. 

வட்டிக்கு வட்டி போட்டு , 
அந்த வட்டிக்கு 
குட்டி வட்டி போடும் 
செட்டிநாடு தந்த 
"தமிழ் சீதனம்" இவன். 
சிறுகூடல் பட்டி தந்த சீதளம், 
சீதனம் இவன். 
சீதளக் காற்று 
இவனது பாட்டு . 

முத்தமிழின் இதழ்களை 
முத்தமிட்டு முத்தமிட்டு 
முத்தமிழாய் ஆன 
முத்தையன் இவன். 
இவன் ஒரு 
கட்டிமுத்து, 
கருப்பு முத்து, 
காரைக்குடி தந்த முத்து. 
கன்னித்தமிழுக்கு 
இவனே "கவிதை முத்து" 
இவனது முத்தமிழ் இதழ்களில் 
முத்தமிட முடியாத காரணத்தால் 
இவனது முத்தமிழையும் 
நாளெல்லாம் 
முத்தமிட்டுக்கொண்டிருக்கிறோம். 

இவன் 
தன தனயருக்கு மட்டும் 
செல்வம் தந்தவனல்ல; 
தமிழருக்கெல்லாம் 
தமிழ் செல்வம் தந்த 
வள்ளல் இவன். 
அனுபவங்களை 
மையாக அடைத்து 
இவனது எழுதுகோல் எழுதியதால் 
இவனது எழுத்துக்கள் எல்லாம் 
அனுபவங்களின் கருவூலமாயிருக்கிறது. 

பொதிகையின் முடியிலிருந்து அல்ல, 
சிறுகூடல் பட்டி 
மலயரசித் தாயின் மடியிலிருந்து 
புறப்பட்ட "தென்றல்"இவன். 
பத்தோடு ஒன்று, 
பதினொன்றாய் அல்ல, 
அந்த பத்தில் 
பாண்டியநாட்டு முத்தாய் 
பேசப்படுகின்ற கவிஞன் 
கண்ணதாசன் . 

கல்வியில் பெரியவன் 
கம்பன் என்றால் 
கவிதையில் பெரியவன் 
கண்ணதாசன். 
அவன் 
காவியத்தாயின் தலைமகன் என்றால் 
அந்த காவியத்தாயின் 
இளையமகன் இவன். 
எல்லோரும் கவிதை எழுதினார்கள்; 
ஆனால், 
இவன் எழுதியதெல்லாம் 
கவிதை ஆனது. 

கிருஷ்ணபகவானின் கீதைக்கு 
எல்லோரும் 
தத்துப் பித்தென்று 
"தத்துவமாய் "உரை எழுதியபோது 
இவன் மட்டுந்தான் 
தத்தையும் புரியும்வண்ணம் 
எழுதினான் உரை.. 
அவர்களோ 
கீதைக்கு உரை கண்டார்; 
இவனோ, 
"அர்த்தமுள்ள இந்துமதம்"எழுதி , 
அந்த உரைகளுக்கோர் 
கரை கண்டான்; 
கடல் போல புகழ் கொண்டான். 
மற்றவர் உரையோ 
சோற்றில் கிடந்த சிறு கற்கள்; 
இவனுறையோ 
பஞ்சாமிர்தத்தில் கிடந்த 
கற்கண்டுகள். 

கண்ணதாசன் இறந்துவிட்டான் என்பது 
இலகுவாக எடுத்துக்கொள்ள வேண்டிய 
எழுத்துப்பிழை அல்ல; 
கண்டிக்கப்படவேண்டிய 
கருத்துப்பிழை. 
கண் மூடி, 
கல்லறைக்குள் 
கனவு கண்டு கொண்டிருக்கிறான் 
கண்ணதாசன்- 
"காவியக் கனவு". 
அந்த கல்லறைத்தூக்கம் கலைந்து 
அவன் வெளிவரும்போது 
கம்பனை விஞ்சும் 
காவியம் ஒன்றை 
காகிதங்கள் பிரசவிக்கும்.