செம்மொழி தெலுங்கின் கலமல்லா கல்வெட்டு

சேஷாத்ரி
சேஷாத்ரி சிறப்பு பதிவு
October 19, 2015 07:22 முப
நடுவண் பண்பாட்டு அமைச்சகம் தெலுங்கிற்கான செம்மொழி வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையின்படி 2008 நவம்பரில் இல் தெலுங்கைச் செம்மொழியாக  அறிவித்தது.

இதற்கு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழைமை உடைய  இலக்கியங்கள் அல்லது பதியப்பட்ட வரலாறு இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில்1904 இல் சென்னையில் இருந்து செயற்பட்ட இந்தியத் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட கள ஆய்வில் கடப்பை மாவட்டம் கமலாபுரம் வட்டம் ஏற்ரகுடிபாலேம் கலமல்லா ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் கண்டு அறியப்பட்ட ரேனாட்டு சோழன் எரிகல் முத்துராசு  தனஞ்செயன் பற்றிய கல்வெட்டு எழுத்தமைதியால் பழமையானது இதாவது, கி.பி. 575 ஆம்  நூற்றாண்டினது என்று முடிவு செய்யப்பட்டு அதை நடுவண் பண்பாடு அமைச்சகத்திற்கு சான்று ஆவணமாகக் காட்டியுள்ளனர். 

ரேநாடு என்பது இற்றைய இராயல்சீமையின் கடப்பை மாவட்டத்தைச் சுற்றி அமைந்த நாட்டுப் பகுதியாகும். இதை ஆண்ட தெலுங்கு சோழர்கள் ரேநாட்டுச் சோழர்கள் எனப்பட்டனர். யுவான் சுவாங்கின்  பயணக் குறிப்பில் உள்ள "சுளியர்" என்பதை மேற்கோளாகக் கொண்டு சிலர் தெலுங்கு சோழர்களை கி.பி  7 ஆம் நூற்றாண்டு முதல்13 ஆம் நூற்றாண்டுவரை ஆண்டவர்கள் என்று கூறுவது உண்டு.

இக்கல்வெட்டு கோவில் வளாகத்தில் கிடத்தப்பட்டிருந்த உடைந்த தூணின் இரண்டு பக்கங்களில்17 வரிகளில் வெட்டப்பட்டுள்ளது. இதில் நான்கு வரிகள் (12 - 15) சிதைந்து உள்ளன. அதை சென்னைக்கு கொண்டுவந்து தொல்பொருள் சேமிப்பில் வைத்திருந்துள்ளனர். ஆனால் இப்போது அக்கல்வெட்டு காணாமல் தொலைக்கப் பட்ட நிகழ்வு தொல்லியல் ஆர்வலர்களை பெரிதும் வருத்தமுறச் செய்துள்ளது. 

 
1. ...................
2. కల్ముతురా           kalmutura                கல்முத்துரா     
3. జు ధనంజ            ja dananja               ஜு தனன்ஜ    
4. య ఱు రేనా         ya ru raina               ய று ரேனா  
5. ణ్డు ఏళన్             ndu elen                  ண்டு ஏளன்   
6. చిఱుంబూరి          chirumburi               சிறும்பூரி 
7. రేవణకాలు (పం)    raivanakalu (pam)   ரேவணகாலு(பம்) 
8. పు చెనూరు కాజు   pu chenuru kaju      பு செனூரு காஜு 
9. ఆఱికాశా ఊరి        arikasa ori               ஆறிகாசா  ஊரி 
10. ణ్డవారు ఊరి        ndavaru ori              ண்டவாரு ஊரி 
11. న వారు ఊరిస...  na vaaru orisa         னவாரு ஊரிச 

12.

13.

14.

15.

16. హాపాతకస           hapatakasa                  ஹபாதகச 

17. కు.                     ku                               கு

கல்வெட்டு பாடம்: 

......../ కల్ముతురా / జు ధనంజ / య ఱు రేనా / ణ్డు ఏళన్ / చిఱుంబూరి / రేవణకాలు / (పం) పు చెనూరు కాజు / ఆఱికాశా ఊరి / ణ్డవారు ఊరి /  న వారు ఊరిస.../  హాపాతకస / కు

... / கல்முத்துரா / ஜு தனஞ்ஜ / ய ரு ரேனா / ண்டு ஏளன் / சிறும்பூரி /ரேவணகாலு (பம்) / பு செனூரு காஜு / ஆறிகாசா ஊரி / ண்டவாரு ஊரி / னவாரு ஊரிச .... /   ஹபாத கச / கு

 ..... / kalmutura / ju dananja / ya ru raina / ndu elen / chirumburi /    raivanakalu (pam) / pu chenuru kaju / arikasa ori / ndavaru ori / na vaaru orisa.... /  hapatakasa /  ku   

 
Dhananjaya - செல்வத்தை வென்றவன், அருச்சுனனின் மற்றொரு பெயர்: இலக்கிய பதிவு: Srimad Bhagavatam 1.9.3; ரேவண்த - இந்த கல்பத்தின் 5 ஆவது மனுவின் பெயர் , சூரியனின் ஒரு மகனுக்கு பெயர்; ஏளன் - எள்ளி ; காலு (கால்) - மகன், கால்வழி, காலாட்படை; ஆரிகாசா - கொக்கரித்து ஆரவாரித்து போருக்கு எழுந்து வெளியேவந்தான்; இண்டு + அர் = இண்டர் - இடையர், இழிகுலத்தோர் "இண்டக்குலத்தை" திவ். திருப்பல் 5; pata kasaku - (கசகுதல்) -  பின்வாங்குதல்.  
 
 

கல்வெட்டுப் பொருள்:

 
எரிகல் முத்துராஜு தனஞ்சயரையும் ரேநாட்டையும் எள்ளி  சிறும்பூர் ரேவண்ணன் காலாட்படையை அனுப்பிட செனூர் காஜு கொக்கரித்து ஆரவாரித்து போருக்கு கிளம்பினான். அப்போது ஊர்ப்புறத்தே வாழும் இழிகுலத்தோரும் (ஏழை எளியவர்), ஊரகத்தோரும் ஊரின் ( ஒரு பகுதியில் குழுமினர்) - - - - நடையை பின்வாங்கினர்.
 
தமிழின் "அவன்" என்ற ஆண் பால் ஒருமை கோண்டி மொழியில் "அவண்டு" என வழங்குகிறது. கோண்டி மொழியின் தாக்குறுத்தம் காரணமாக அவண்டு > வ+அ+ண்டு > "வாண்டு" என மொழி முதல் அகரம் இரண்டாம் இடம் பெயர்ந்து தெலுங்கில் வழங்குகிறது. அதுவே ரேவண்டு என்று பெயரோடு இக்கல்வெட்டில் வாங்குகிறது. அதே போல் தமிழில் "அவர்" என்ற பலர் பால் படர்க்கை சொல்லின்  மொழி முதல் அகரம் இரண்டாம் இடம் பெயர்ந்து வ+அ+ர் = வார் > "வாரு" என தெலுங்கில் வழங்குகிறது. இக்கல்வெட்டில் ஊரிண்டவாரு, ஊரினவாரு ஆகியசொற்களில் பயில்கிறது.  இச்சொல்லாட்சிகள் இக்கல்வெட்டை தெலுங்கு என உறுதி செய்கின்றன.  
      
 

கல்வெட்டை வெட்டியோர் யாவர்?

 
ரைநாட்டு சோழன் தனஞ்சயனின் மெய்கீர்த்திகளோ அல்லது ரைவணனின் அரச பின்னணிக் குறிப்புகளோ இக்கல்வெட்டில் இடம்பெறவில்லை ஆதலால் இது அரசர் வெட்டிய கல்வெட்டு அல்ல. கல்வெட்டில் ஆள் பெயர்கள் தவிர சமற்கிருத சொற்கள் ஏதும் இல்லை. பிராமணர்கள் வெட்டியிருந்தால் தமது சமற்கிருத அறிவை வெளிக்காட்ட சில சமற்கிருத  சொற்களையேனும் திணித்திருப்பார் அப்படியில்லாததால் இக்கல்வெட்டை பிராமணர்களும் வெட்டியிருக்க முடியாது. கல்வெட்டில் மக்கள் மொழி அதிகம் ஆளப்படுவதாலும் இதில்  ஐயம் திரிபற தெலுங்கு மொழி வீறுநடை போடுவதாலும் படையெடுப்பின்  காரணமாக பெருந்துன்பத்திற்கு ஆளான ஊர் மக்கள் படை நடத்தி வந்தோர் தம்நடையைப் பின்வாங்கியதை அடுத்து துயர் நீங்கியவராக கோவிலில் இக்கல்வெட்டை வெட்டியிருக்கவேண்டும்.
 
 

கல்வெட்டின் காலம்: 

 
தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 10 ல் இக்கல்வெட்டின் காலம் குறித்தோ அல்லது எழுத்தமைதி மிகப் பழமையானது என்றோ எந்தக் குறிப்பும்  இல்லை. கல்வெட்டிலும் காலக் குறிப்பு ஏதும்  இல்லை. 
 
(South Indian Inscriptions Vol.  X  Early Cholas of Renadu
No. 607. (A. R. No. 380  of  1904.)
On two faces of a broken pillar lying in the court-yard of the temple of Chennakesavasvami at Kalamalla, Kamalapuram Taluk, same District. Undated.
Damaged and unintelligible.  Mentions Dhananjaya and Rena[ndu].)
 
அப்படியிருக்க இக்கல்வெட்டே தெலுங்கு மொழியின் முதல் பழமையான கல்வெட்டு என்று எதன் அடிப்படையில் முடிவு கொண்டனர் என்று விளங்கவில்லை. எரிகல் முத்துராஜு என்ற பெயருடன் தனஞ்சயன் பெயர் இடம் பெறுவதாலேயே இது மிகப் பழமையானது கி.பி. 575 ஆண்டினது என்று முடிவு கொண்டிருந்தால் அது பிழையானது. ஏனெனில் எரிகல் முத்துராஜு புண்ணியகுமார என்ற பெயரில்  இன்னொரு அரசனும் இருந்துள்ளான். ஆதலால் பிற்கால அரசர் சிலர் எரிகல்முத்துராஜு என்ற மூதாதையின் பெயரை தம் பெயரோடு இணைத்துக் கொண்டார்கள் என்று கருதுவதே சரி. சிலர் தனஞ்சயன் என்பது எரிகல் முத்துராஜுவின் பட்டப் பெயர்களுள் ஒன்று என்று கதை அளக்கின்றனர். இதுவும்  தவறே.  
 
 
தனஞ்சயன், ரேவண் ஆகிய பெயர்கள் புராணப் பெயர்கள்.   தனஞ்சயன் என்ற பெயர் முதன் முதலாக கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாதராயண வியாசர் இயற்றப்பட்ட பாகவத புராணத்தில் தான் இடம் பெறுகிறது. அதற்கு  முன்னம் இப்பெயர் பரவியிருக்க வாய்ப்பில்லை. அதோடு இக்கல்வெட்டு கலமல்லா ஸ்ரீ லக்ஷ்மி சென்னகேசவ பெருமாள் கோவிலின் திறந்தமுற்றத் தரையில் கிடத்தப் பட்டிருந்த உடைந்த தூணின் இரு பக்கங்களில் வெட்டப்பட்டிருந்தது என்று தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 10 இல் பதியப்பட்டுள்ளது.
 
பாறைகளை செதுக்கி கற்றளிகள் கட்டுவது தென்னிந்தியாவில் முதன்முதலாக 8 ஆம் நூற்றாண்டில் தான் ராசசிம்மப் பல்லவனால் தொடங்கி வைக்கப்பட்டது. இக்கல்வெட்டு திறந்த வெளியில் நிறுத்தப்பட்ட கல்வெட்டு அல்ல மாறாக கற்றளியின் ஒரு தூணில் இருபக்கங்களில் வெட்டப்பட்ட கல்வெட்டு எனும்போது இது 6 ஆம் நூற்றாண்டு கல்வெட்டாக இருக்க முடியாது 8 ஆம் நூற்றாண்டிற்கு பிற்பட்ட கல்வெட்டாகத் தான் இருக்க முடியும். மேலும் கல்வெட்டில் இழிந்த குலத்தோர் என்ற குறிப்பு இக்கல்வெட்டின் காலத்தை இன்னும்  பின்னுக்கு தள்ளுகிறது. புராண இந்து மதம் பரவிய பின்பு 9 - 10 ஆம் நூற்றாண்டுகளில் தான் பிறப்பு வழி ஏற்றத் தாழ்வுகள் மக்கள் கருத்தில் வேரூன்றின. ஆகவே இக்கல்வெட்டு 10 ஆம் நூற்றாண்டளவில் வெட்டப்படிருக்க வேண்டும் என்று கருதவே  இடம் தருகிறது. எனவே தெலுங்கைச் செம்மொழி என காட்டற்கு இக்கல்வெட்டிற்கு சற்றும் தகுதி இல்லை. ஏனெனில் இதனினும் பழமையான தெலுங்கு நடுகல் கல்வெட்டுகள் உள்ளன.  
 
1904 இல் இக்கல்வெட்டு முதன் முதலாக அறியப்பட்ட போது அதைப் படித்தவர்களுக்கு அக்கால் போதிய தரவுகள் இல்லாமையால் இதன் காலத்தை தவறாகவே குறித்திருந்தாலும் செம்மொழிக்கு தகுதிச் சான்றாக இக்கல்வெட்டை பரிந்துரைக்கும் முன் அறிஞர்கள் இதன் காலத்தை மீள்பார்வை செய்திருந்தால் தவறு நேராமல் தவிர்த்திருக்க இயலும். மேலும், கன்னட தெலுங்கு கல்வெட்டுகளை படிக்கின்ற போது சமற்கிருத அகராதிகளை மட்டும் பார்வையிடுகின்ற கல்வெட்டு அறிஞர்கள் தமிழ்ச் சொற்களுக்கு தமிழ் அகராதிகளை நாடுவதில்லை என்பது தவறான புரிதலைத்தான் தரும். இக்கல்வெட்டில்  உள்ள தமிழ்ச் சொற்களின் பொருள் அறிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரரகரமுதலி  http://www.tamilvu.org/library/ldpam/ldpam00/html/ldpam00hom.htm  உதவியது. 
 
இக்கல்வெட்டில் நான்கு (12 - 15) வரிகள் சிதைந்து போனதால் கல்வெட்டின் முழுப் பொருளையும் தெளிவாக  அறியமுடியவில்லை. செனூர் காஜு தனஞ்சயன் சார்பில் போரில் பங்கு கொண்டானா அல்லது ரேவண்ணன் சார்பில் போரில் கலந்து கொண்டானா என்று தெரியவில்லை. நடை பின்வாங்கிய படை யாருடையது என்பதும் விளங்கவில்லை. 
 
 

கால் காலாட்படையை குறிப்பதை  காட்டும் கல்வெட்டு சான்று:

 
பிரையகம் யெறிந்த / க் கால்லப் போருட்ப / ட்டான் தெருக்கால்லா / ரு மகன் நீலகண்ட(ரைச) / ன் கல்கால்லர் - காலாட்படையர் (Infantry); தெருக்கால்லார் - தெருக் காவல் மேற்கொள்ளும் காலாட்படை தலைவர்
 
பிரையகம் என்ற இடத்தை அழித்த காலாட்படையர் போரில் தெருக்காவல் மேற்கொள்ளும் காலாட்படைத் தலைவரின் மகன் நீலகண்ட அரைசன் வீரசாவடைந்தான். அவன் நினைவில் நட்ட நடுகல் இது. பண்டு நகரங்களின் தெருக்காவலுக்கு காலாட்படையே ஈடுபடுத்தப்பட்டது. அவ்வாறான ஒரு படை பிரையகம் என்ற இடத்தில் போரில் ஈடுபட்டு அதை அழித்து உள்ளது. இது நகர் முற்றுகைப் போர் ஆகலாம். அப்போரில் அப்படையின் ஒரு ஆள், இதாவது, அரைசர் பொறுப்பில் இருந்த நீலகண்டன், படைத் தலைவரின் மகன் இறந்துள்ளான். எளியோரும் அரைசர் ஆகி உள்ளனர் என்பதற்கு நீலகண்டன் ஒரு சான்று. கல்வெட்டில் அரசன் பெயர், ஆட்சி ஆண்டு குறிப்பிடாமல் உள்ளது. இக்கல்வெட்டு தமிழ் பிராமியில் இருந்து வட்டெழுத்து பிரியும் காலகட்டத்து எழுத்து பொறிப்பில் உள்ளது, மெய்எழுத்து புள்ளிகளுடன் உள்ளன. எனவே விஷ்ணு வர்மனின் இருளப்பட்டி கல்வெட்டிற்கும் முந்தையது இது எனலாம். இதை 3 - 4 ஆம் நூற்றாண்டினது எனக் கொள்ளலாம்.
 

தொடர்புடைய தொடுப்புகள்: