உடைஞ்சு போச்சு.! -Mano Red

மனோ ரெட்
October 06, 2015 10:54 முப
களிமண்ணாக இருந்தாலும்
கடும் தவமிருந்தே,
குழந்தைகளின் கையால்
உடைந்து போவதற்காக
பிறக்கின்றன பொம்மைகள்.!

உடைந்த சத்தத்துக்கும்
சத்தம் கேட்டு ஓடி வரும்
பெரியவர்களின் திட்டுதலுக்கும்
இடையில் இருக்கிற - மௌனத்தின்
இடைவெளியில் அழகாக
தப்பி விடுவார்கள் குழந்தைகள்.

தப்பிக்க அவர்கள் இயற்றும்
வாக்கியங்கள் ஒவ்வொன்றும்
அத்தனை சாதாரணமல்ல,
பொம்மைக்கு கிடைக்கும்
சாப விமோசன மந்திரங்கள்.!

பொம்மைதான் குழந்தையா?
குழந்தைதான் பொம்மையா என்பது
உடைதலின் தன்மை சார்ந்தது.
பொம்மைக்கு ஆயுள் குறைவு
என்பதனால்
குழந்தையாகவே இருக்கின்றன.!

கை தவறி விழுந்திருந்தாலும்
”நான் ஒன்னும் செய்யல
அதுவா விழுந்து உடைஞ்சு போச்சு” - என்ற
குழந்தையின் குற்றச் சாட்டலில்
பொம்மை இப்போது
சொர்க்கம் சேர்ந்திருக்கும்.!