பிளாஸ்டிக் அரிசியில் இருந்து தப்பிக்க .........

ambikarthikeyan
ஜூலை 20, 2015 02:41 முப

Gud mrng frnds,


பிளாஸ்டிக் அரிசியில் இருந்து தப்பிக்க .........


கடைசியில் அது நடந்தேவிட்டது. நம் ஆதார உணவான அரிசியிலும் வந்துவிட்டது பிளாஸ்டிக் அரிசி. அரிசியில் நடக்கும் இந்தக் கலப்படம் குறித்த செய்திகள், சமீப வாரங்களாக சமூக வலைதளங்கள் மூலம் வேகமாகப் பரவிவருகின்றன. இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுக்ரீவ துபே பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார்.
“உலகமயமாக்கல் காரணமாக சீனா மற்றும் இதர நாடுகளில் இருந்து பெருமளவில் அரிசியும் பருப்பு வகைகளும் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால், அவற்றின் தரம் குறித்த எந்தக் கட்டுப்பாடும் சோதனையும் இங்கே முறைப்படி நடைபெறுவதில்லை” என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


இத்தனை நாட்களாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பிளாஸ்டிக் அரிசி குறித்த செய்திகள் வலம்வந்தாலும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவால் பிளாஸ்டிக் அரிசி குறித்த பீதி பல தரப்பினரிடமும் அதிகரித்துள்ளது. தாவரத்தில் இருந்து விளையக்கூடிய ஒரு தானியத்தை, இயந்திரங்களின் உதவி மூலம் செயற்கையாக உற்பத்தி செய்யும் இந்தப் புதிய முறை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

எது பிளாஸ்டிக் அரிசி?


உண்மையில் பிளாஸ்டிக் அரிசி என்பது பிளாஸ்டிக்கில் செய்யப்படுவதில்லை. உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் செயற்கைப் பிசினைக் கலந்து, பிளாஸ்டிக் அரிசி செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே தங்கள் நாட்டு உயர்தர அரிசி வகையிலேயே போலியைத் தயாரித்து விற்பனை செய்த சீனா, தற்போது முழுக்க முழுக்க செயற்கை அரிசியைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டது.


சீனாவின் ஷாங்ஷி பகுதியில் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதாகக் கொரிய மற்றும் மலேசியச் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பகுதிகளுக்குள் அயல் நாட்டினர் அனுமதிக்கப்படுவதில்லை என்பது சந்தேகத்தை வலுக்கச் செய்திருக்கிறது.


அரிசியை ஆதார உணவாகக் கொண்டிருக்கும் நாடுகளான இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம், சிங்கப்பூர் போன்ற நாடுகள்தான், இந்தப் பிளாஸ்டிக் அரிசியின் இலக்கு. அதுவும் கிராமப்புற மக்களை அதிகம் கொண்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முக்கியத்துவம் தரப்படுகிறது.


எப்படிக் கண்டுபிடிப்பது?


பிளாஸ்டிக் அரிசி தனியாக விற்பனை செய்யப்படுவதில்லை. இவை அரிசியுடன் கலக்கப்பட்டே விற்பனைக்கு வருகின்றன. தவிர, சமைத்தால் மட்டுமே அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். சமைத்த பிறகு பிளாஸ்டிக் அரிசி முழுவதும் வேகாமல் முரட்டுத்தன்மையுடன் இருக்கும்.
பொதுவாக அரிசியை வேகவைத்தால் அதிலிருக்கும் ஸ்டார்ச், மேலே படலமாகப் படியும். பிளாஸ்டிக் அரிசி வேகும்போது கண்ணாடி போன்ற படலம் வரும். இதை வெயிலில் காயவைத்தால் மெல்லிய பிளாஸ்டிக் ஷீட் போல மாறிவிடும். பிளாஸ்டிக் அரிசியை நெருப்பில் காட்டினால் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மணம் வெளிப்படும்.
சர்க்கரையில் கலந்திருக்கும் ரவை யையும், மிளகுடன் கலக்கப்பட்டிருக்கும் பப்பாளி விதையையும் நம்மால் கண்டு பிடித்துவிடுகிற மாதிரி பிளாஸ்டிக் அரிசியை எளிதில் அடையாளம் காணமுடியாது. இதற்கென இருக்கும் ஆய்வகங்களின் துணையோடு மட்டுமே இந்த ரசாயன அரிசியை, திட்டவட்டமாக இனம் காண முடியும்.என்னென்ன பாதிப்பு?


அதிகரித்திருக்கும் செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டால் உள்ளூரில் விளைகிற அரிசியைப் பயன்படுத்தினாலே மறைமுகமாகப் பல்வேறு உடல்நலக் கேடுகள் ஏற்படுகின்றன. இதில் செயற்கையாகத் தயாராகும் ரசாயன அரிசியைச் சாப்பிடுவதால் ஏற்படும் கேடுகளைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
பிளாஸ்டிக் அரிசி எளிதில் ஜீரணமாகாது. தொடர்ந்து பிளாஸ்டிக் அரிசியைச் சாப்பிட்டு வந்தால், பிளாஸ்டிக் பைகளை உட்கொள்வதற்குச் சமமான பாதிப்புகள் ஏற்படலாம். குடலியக்கச் செயல்பாடு சார்ந்த பிரச்சினைகளில் தொடங்கி மரணம்வரை இது இட்டுச்செல்லும் ஆபத்து இருக்கிறது.


இந்தியாவிலும் ஊடுருவல்


இந்தியாவில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் நடந்திருப்பதை இதுவரை அரசு உறுதிசெய்யவில்லை. ஆனால், கலப்படம் நடந்திருப்பதின் எதிரொலியாகவே வழக்கறிஞர் சுக்ரீவ துபேயின் மனுவைப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசியின் பயன்பாடு குறித்து எந்தப் புகாரும் இதுவரை வரவில்லை என்றும், அது குறித்த சோதனைகளை மேற்கொள்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்றும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், கேரளாவின் நடப்புரம் பகுதி மார்க்கெட்டில் பிளாஸ்டிக் அரிசி புழக்கத்தில் இருப்பதை, அந்த மாநிலப் பத்திரிகையான மாத்ருபூமி உறுதிசெய்துள்ளது.


சோதனைகள் நடத்தப்படவில்லை என்பதாலேயே கலப்படம் நடக்கவில்லை என்பதை நம்பமுடியாது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு விஷயங்களில் தீவிரமாக இருக்கும் கேரள மாநிலத்திலேயே பிளாஸ்டிக் அரிசியின் ஊடுருவல் இருக்கும்போது, அண்டையில் உள்ள நம் மாநிலத்தை அது வந்தடையப் பெரிய தடைகள் இருக்கும் என்று நம்ப முடியவில்லை.


என்ன செய்யலாம்?


பொதுவாக உள்ளூர் தயாரிப்புகளைப் புறக்கணிப்பதும், அவற்றைக் குறைத்து மதிப்பிடுவதுமே பெரும்பாலான மக்களின் அணுகுமுறை. அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குக்கூட வணிக நிறுவனங்களின் பதப்படுத்தப்பட்ட உணவை நம்பியிருக்கும் நிலை மாறவேண்டும் என்கிறார் முன்னோடி இயக்க விவசாயி அரச்சலூர் செல்வம்.


“அரிசியில் இருக்கிற கார்போஹைட்ரேட்டுக்கு இணையாக ரசாயனம் மூலம் அரிசி தயாரிப்பது எந்த வகையில் நியாயம்? அப்படிப் பார்த்தால் மனிதன் உட்பட அனைத்தையுமே செயற்கையாகச் செய்துவிட வேண்டியதுதானா?” என்று கேட்கும் செல்வம், உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து அரிசியை நேரடியாகக் கொள்முதல் செய்வதன் மூலம் கலப்பட அரிசியில் இருந்து தப்பிக்கலாம் என்கிறார்.


“யாரை நம்புவது என்கிற அளவுகோல் அவசியம். உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வது, அனைவருக்கும் சாத்தியமில்லை என்று நினைப்பதாலேயே பெரும் வணிக நிறுவனங்களைப் பலரும் நம்புகின்றனர். ஆனால், உற்பத்தியாளர்களைச் சந்திப்பதற்கான எந்த முன்னெடுப்பையும் செய்யாம லேயே, எதுவும் சாத்தியமில்லை என்று சொல்வது அர்த்தமற்றது.


சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கிறவர்கள், நண்பர்களுடன் ஒரு குழுவாகச் சேர்ந்து சுற்றியிருக்கும் கிராமப்புற விவசாயிகளிடம் இருந்து அரிசியை நேரடியாக வாங்கலாம். இப்படிச் செய்வதால் உற்பத்தி செய்கிறவர், அவரிடம் இருந்து பொருளைப் பெறுகிற நுகர்வோர் என இருவருக்குமே நன்மை. இருவருக்கும் இடையே சுமூக உறவு நிலவுகிறபோது, செயற்கைக்கும் ரசாயனக் கலப்படத்துக்கும் இடமில்லாமல் போகும்” என்கிறார் அரச்சலூர் செல்வம்.
உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதும், அதை அதிகரிப்பதற்கான செயல்களில் நுகர்வோராக இருக்கும் பொதுமக்கள் நேரடி ஈடுபாடு காட்டுவதும் மட்டுமே செயற்கை அரிசி கலப்படத்தில் இருந்து தப்பிப்பதற்கான சிறந்த வழியாக இருக்க முடியும்.
வேறு என்ன கலக்கிறார்கள்?நம் நாட்டுக்குள் சாதாரணமாக விற்கப்படுகிற அரிசியிலும் கலப்படம் இருக்கிறது. உயிருக்கு ஆபத்தான ரசாயனங்கள் எதுவும் அரிசியில் நேரடியாகக் கலப்படம் செய்யப்படவில்லை என்றாலும், அவற்றின் எச்சம் இருக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


மண், தூசு, சிறு கற்கள், வைக்கோல் துண்டுகள், களை விதைகள், பறவை மற்றும் விலங்குகளின் ரோமங்கள், அவற்றின் எச்சம், பூச்சிகள், நிறம் மங்கிய மற்றும் உடைந்த தானியங்கள் போன்றவை பொதுவான கலப்படப் பொருட்கள்.
இவை தவிர உற்பத்தியின்போது பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், ரசாயன உரங்கள் ஆகியவற்றின் தாக்கமும் அரிசியில் இருக்கலாம். கலப்படம் தவிர்த்து, அரிசியில் தூய்மைக்கேடும் நடக்கிறது. பூஞ்சைத்தொற்று, புழுக்கள் போன்றவையும் ரசாயன உரங்கள் மூலம் ஆர்செனிக், காரீயம், வெள்ளீயம் போன்ற உலோகங்களின் எச்சங்களும் அரிசியின் தூய்மைக் கேட்டுக்குக் காரணமாக அமைகின்றன என்று எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அக்மார்க் அமைப்புகள் கூறுகின்றன.
கல், குப்பை, பூஞ்சைத்தொற்று, புழுக்கள் போன்றவை கலந்திருப்பதைக் கண்களால் பார்த்தே கண்டுபிடித்துவிடலாம். ரசாயனக் கலப்படத்தை ஆய்வகங்களில் சோதனை மூலம்தான் கண்டறிய முடியும்.Karthi kn...