மழைக்கு வேண்டுகோள்...!!!!!!

முகில் நிலா
ஜூன் 20, 2015 05:23 பிப
காலைக் கருக்கலிலே
கண்விழிச்ச வேளையிலே
கடுதாசி போடாம கண்ணம்மா’
கதவோரம் நீ வந்த.....!!!!

பொழுதும் புளர்ந்தாச்சி
பொறுத்திருந்தும் பார்த்தாச்சி
போய் சேர நினப்பில்லையோ
போகும் வழி நீ மறந்துட்டியோ...?

யார் என்ன சொன்னாங்க
ஏன் இந்த ஒப்பாரி
இரக்கம் தான் காட்டேன்மா
இன்னொரு நாள் நீ வாயேன்மா....

விறகு பொறுக்கி வைக்கலியே
என் அடுப்புத்தான் எரியலையே
அழுக்கு துணி வெளுத்தெடுக்க
அவகாசம் நீ கொடுக்கலியே....

பால் வாடி போய் வரவும்
பாலகனுக்கு முடியலையே
பசு மாடு தீவனந்தான்
தின்னிடவும் வழியில்லையே....

அந்நாடம் வயித்துக்கு
அல்லாடும் சனமேதான்
அக்கறையே காட்டம்மா’
அனுசரிச்சு போயேன்மா....

இரவெல்லாம் நீ பேஞ்சு
நனைச்சாலும் போதுமம்மா
பகல் பொழுது முச்சூடும்
பதுங்கி நீ இருந்திடேன்மா.....

ஒரு சாணு வயித்துக்கு
உழைச்சாத்தான் சோறம்மா’
உன்னாட்டம் அழுதிடவும்
எனக்கேது வாய்ப்பம்மா...??