சுவடுகள்

kaaviyan
ஜூன் 12, 2015 02:44 பிப

பொழப்பத்த பயலுகன்னு

புரளி பேசி சென்றாலும்,

வெட்டி பயலுவன்னு

பட்டி தொட்டி சொன்னாலும்,

வேதனைய காட்டாம

சொல்லிடுடா கபடி கபடி.....

 

சல்லி பயலுவ சவகாசம்

அறவே வேண்டாமுன்னு,

ஆத்தா வச பாடிடுவா

காத ரெண்டும் மூடிகிட்டு,

சொல்லிடுடா கபடி கபடி.....

 

உன் சாதி மட்டமுன்னு,

உறக்கச்சொன்ன ஊர் முன்னே,

உன் குலத்தை உயர்த்திடவே,

வீரமுடன் மண்ணைத்தொட்டு,

வெறியேற்றி சொல்லிடுடா

கபடி கபடி…  கபடி கபடி…

 

 

வேற்று வேற்று இனமெனினும்,

தமிழன் என்ற திமிரோடு,

கபடி களம் இறங்கிடுவாய்

நெஞ்சம் நிமிர்த்தி நின்றிடவே,

க்க நீயும் சொல்லிடுவாய்

கபடி கபடி..... கபடி கபடி.....

 

 

திரும்பி பார்க்கா தாவணியும்,

திமிர் பிடித்த பைங்கிளியும்,

திரும்பி உன்ன பார்த்திடுமே !!

திரும்பி நீயும் பார்க்காம,

சட்டை தூக்கி காட்டிடுடா

சிரிச்சு நீயும் சொல்லிடுடா

கபடி கபடி..... கபடி கபடி.....

 

 

பாசக்கார அக்கா மக,

ஓரக்கண்ணால பார்த்துடுவா....

கண்ணுல காதல சொல்லிடுவா...

காத்துல முத்தத்த குடுத்துடுவா...

சத்தமில்லாம வாங்கிபுட்டு

தம் பிடித்து சொல்லிடுடா

கபடி கபடி..... கபடி கபடி.....

 

 

தோழனின் தோல் தழும்பு

பழைய கதை சொல்லிடுமே

பட்ட கடன் தீர்த்திடவே- வந்தவனை

தூக்கி எரிந்து சொல்லிடுடா

கபடி கபடி..... கபடி கபடி.....

 

ஒண்டியா நின்றாலும்

சண்டியர் நீதான்னு

மீசை முறுக்கி காட்டிடுடா

கபடி கபடி..... கபடி கபடி.....

 

பெரும்புள்ளிகள் கையாலே

வெற்றி வாகை சூட்டிடவே

உன்னினத்தின் கரும்புள்ளிகள்

மண்ணோடு போனதுன்னு

கண்ணீர் துடைத்து சொல்லிடுடா

கபடி... கபடி... கபடி... கபடி.....


உரியடியும், கைச் சிலம்பும்

இளவட்டக்கல்லும், மஞ்சு விரட்டும்

படிப் படியாய் சாய்வது போல்

உன் கபடியும் ஒரு நாள்

வேரோடு சாய்ந்திடுமே !

தமிழனின் மண் பெருமை

மண்ணோடு மறைந்திடுமே !

 

 

தமிழனின் வீரமது

வரும் தலைமுறைகள் உணர்ந்திடவே

தமிழனின் புகழ், பெருமை

வானுயர வளர்ந்திடவே

உயிர்நாடி உள்ளவரை

உறக்க நீயும் சொல்லிடுடா

கபடி... கபடி... கபடி... கபடி.....

கபடி... கபடி... கபடி... கபடி.....