சாட்டை - நாகூர் கவி

நாகூர் கவி
மார்ச் 22, 2015 04:13 பிப
சாட்டை - நாகூர் கவி

பூப்பெய்த பூ
மணக்கத்தான்...
பூப்பெய்யாமலே
மணக்கலாமா...?

தன்மானத் தமிழனென்று
தரணியெங்கும் மார்பில்
தட்டி தட்டி சொல்கிறாய்...

தன்னோடு படிக்கும்
தமிழச்சியை ஆபாச படமெடுத்து
தன்மானத்தை இழக்கச் செய்கிறாய்...

காதலென்று கன்னியிடம்
கனிவாகப் பேசிப் பேசி
காமவேட்டை நடத்துகிறாய்...

கண்டமேனி மேய்ந்துவிட்டு
கண்மனியை செல்லிலிட்டு
காணொளியை ஏற்றுகின்றாய்...

காணொளியைக் காட்டி காட்டி
கண்டோர்களுக்கு கூட்டி கூட்டி
பொன்மேனியை புண்ணாக்குகிறாய்...

பிறப்புறுப்பை
படமெடுத்து
ப(பி)ணப்பொழப்பு நடத்துகிறாய்...

அற்பன் இப்படி நீ செய்வாயென
அப்பன் அன்றே அறிந்திருந்தால்
உன் பிறப்புறுப்பை அறுத்தெறிந்திருப்பான்...

தமிழ்மார்கள் வளர்த்த
பாலகனா நீ...?
இல்லை...

இல்லவே இல்லை
தமிழ் மார்புகளை கொண்டாடிய
பாதகன் நீ...

அவ்வை இருந்திருந்தால்
ஆத்தி சூடியிருக்கமாட்டாள்
அடி ஆத்தின்னு
ஆத்தாவால் சுடச் சொல்லியிருப்பாள்...

ஐயன் வள்ளுவன்
இக்கொடுமை அறிந்திருந்தால்
காமத்துப்பாலுக்கு
அன்றே பால் வார்த்திருந்திருப்பான்...

பாரதி இன்றிருந்தால்
பார் தீயை பாரதமெங்கும்
பாடல்களால் பாடி
உனைக் கொளுத்திருப்பான்...

என்ன செய்ய...?
இன்று அவ்வையுமில்லை
ஐயன் வள்ளுவனுமில்லை
தேசியக்கவி பாரதியுமில்லை...

தமிழ் அம்பால்
கவி பாடிவிட்டேன்...
தமிழ் அன்பால்
கவி சாடி விட்டேன்...!

(பாலியல் குற்றம்)

(யாரையும் புண்படுத்தும்
நோக்கில் எழுதப்படவில்லை
பண்படுத்தவே....)