முடியாமல் தவித்து

முகில் நிலா
மார்ச் 11, 2015 10:48 முப
வாசமுள்ள மரிக்கொழுந்த
வச்சிருந்தும் மாமா
அது வாசனை தான்
உன் மனச மாத்தலியே மாமா....!!!

பாசத்தோட தொடுத்து வச்ச
வார்த்தையெல்லாம் மாமா
உன் காது வரை எட்டலையே
காத்திருக்கேன் மாமா......!!!!!

நீ ஆலையிட்ட கரும்பாட்டம்
வாடுறியே மாமா இவ
அதை நினைச்சு துடிக்கிறனே
அல்லும் பகலும் உன் நினைப்பால மாமா......!!!!!

உன் நெத்தியில வேர்த்திருந்தா
நான் ஒத்தடமா தொடச்செடுப்பேன்
உன் நெஞ்சுக்குள்ள வேர்த்திருக்க
அதை துடைக்க வழியில்லையே மாமா....!!!!

சிறகொடிஞ்ச பறவையாட்டம்
நீ சீமையிலே தவிக்கையிலே
சிறுக்கி மவ இவ உனக்கு
சிறு ஆறுதலா இல்லையே மாமா.....!!!!

தேனிக் கூட்டத்துல கல்லெறிஞ்சு
களைச்சுப்புட்டேன் மாமா
அது தேடி வந்து கொத்துதுன்னு
தினம் துடிக்கிறனே மாமா.....!!!!

காத்து பட்டு உந்தன்
கண்ணு கலங்குதுன்னா மாமா
காத்துக்கு தடை போட்டு
என் சேலையில சிறைபிடிப்பேன் மாமா....!!!!

சாந்து பொட்டு எடுத்து
என் நெத்தியில மாமா
நீ வச்சி விடும் நேரம்
எனக்கு வாச்சிடுமா மாமா....!??

வெத்தலை பாக்கோட
சுண்ணாம்பு தடவித்தாறேன்
வேட்டி ஓரத்துல என்
நெனப்பு மட்டும் முடிஞ்சுக்க மாமா......!!!!

ஊத்து வத்திப் போனா
ஊருக்குத்தான் தண்ணியில்ல
உன் பேச்சு நின்னு போனா
நான் மூச்சு விடவும் நியாயமில்லயே மாமா.....!!!