மழைப்பிறழ்நிலை .......

தறுதலையான்
டிசம்பர் 24, 2014 12:15 பிப

கிழிந்து விட்டிருந்த 
குடையிறங்கி எனைத் 
தின்றுவிட்டிருந்த மழை...
இன்று 
கொஞ்சம்  கனம்தான் ...காற்றில் படபடத்திருந்த 
குடையின் கிழிசல்களோ... எனைத் 
திட்டியதா... சிரித்ததா 
எனத் தெரியவில்லை...


இன்றைய எனதின் 
கனமாகிப் போனதுதானே  
என்றைக்குமாக இருந்திருக்கும் 
குடைக்கும்..


பிரிவுகள் உணர்த்திய 
கணத்தில் மலரும் 
மனிதக் காதலைப் போலவே... 
கிழிதலுக்குப்பின் எனக்கு 
குடையின் மீது காதல்...பின்வந்த நாட்களில் 
சொல்லிவைத்தாற்போல் 
நின்று போனது 
மழையும்...
எதற்கும் இருக்கட்டுமே என 
கிழிந்த குடையையும் 
சேமித்திருந்தேன் பரண்களில்...

எப்பொழுது மேகம் திரண்டாலும் 
எனக்கு குடையும் 
ஞாபகத்தில் வந்துபோகும்...

எடுத்துப் பார்க்கலாம் 
என்றாலும்.. கிழிசல்களோடு 
கூடிவிட்டிருந்த 
கைப்பிடிகளும்... சிரிக்குமோ..
திட்டுமோ.. பழையபடி..எதற்குத் தவிர்க்க வேண்டும்...?
நனைந்துகொண்டே 
சென்றுவிடுகிறேன்... 
என்னை நனைப்பதற்குத்தானே
கிழிந்து விட்டிருந்தது 
குடை.....
இங்கு நான்...! நானல்ல...
குடை.....! நீயல்ல...
மழை........!! அதுமட்டும் 
எப்பொழுதும்போல் நம்மிடையே 
கவிதையாய்.....