எங்க ஊரு மீசைக்காரன்...!! - Mano Red

மனோ ரெட்
டிசம்பர் 11, 2014 08:09 முப

அமரகவியே சொல்...
முறுக்கு மீசையும்,
முண்டாசு தலையும்,
மிடுக்கும் தோற்றமும்,
மிரட்டும் பார்வையும்,
மின்னல் நடையும்,
மீள்பதிவுப் பேச்சும்,
மீண்டும் நாங்கள்
காண கண் கூடுமோ...???அமரகவியே சொல்...
கவிதைக் குவியலும்,
கருத்துக் பெட்டகமும்,
கோப உரைகளும்,
கொட்டுமுரசுப் பாக்களும்,
தாய்த் தமிழ் முழக்கமும்,
திகட்டாத கவிகளும்,
மீண்டும் நாங்கள்
கேட்கும் நிலை கூடுமோ..??அமரகவியே சொல்...
பால்ய விவாகம் அழிக்க
பாம்பாய் சீரிய வன்மையும்,
தமிழ் தான் இனிமையென
தரணியெங்கும் சொன்ன வீரமும்,
புவியில் தீண்டாமை தீயணைக்க
பூ நூல் அறுத்த துணிவும்
மீண்டும் நாங்கள்
கேட்டு அறிய கூடுமோ..??அமரகவியே சொல்...
சுட்டெரித்த அனலாய்
சுதந்திர கவியும்,
வெள்ளையன் முகத்திரை கிழிக்க
வெளிச்ச கட்டுரையும்,
அடிமைத்தனம் நீங்க
அடிகள் பலவும்
சிரித்தே சுமந்த உன்னை
மீண்டும் நாங்கள்
தழுவ கை கூடுமோ..??
அமரகவியே சொல்...
நீவீர் இறந்து விட்டீரென
எவன் கதைக்க முடியும்,
கவிதை உள்ளவரை
கவிக் கடவுளாய்
நீவீர் எங்களுடன் தான் இருப்பீர்..!
மீண்டும் உன்னை இழக்க
நாங்கள் ஒப்ப மாட்டோம்...!!