யார் பாரதியார்

பாவலர் கருமலைத்தமிழாழன்
டிசம்பர் 10, 2014 10:06 முப

            யார் பாரதியார்

          பாவலர் கருமலைத்தமிழாழன்

 

யாரிந்த   பாரதியார்   அறிவீ   ராநீர்

          யாமறிந்த   மொழிகளிலே   தமிழைப்   போல

வேறெங்கும்    உள்ளதுவோ   என்றே   கேட்டு

          வெளியுலகம்   ஏற்றிடவே    முழக்கம்    செய்தோன்

யாரிந்த   பாரதியார்   அறிவீ   ராநீர்

          யாம்வாழும்   தாய்நாட்டைத்   தந்தை   யென்றே

வேறெந்த   புலவனுமே   சொல்லாச்    சொல்லில்

          வெறியேற்றி   வெள்ளையனை    விரட்டச்   செய்தோன் !

 

பாரதியார்   எனும்பெயரைப்   பார்க்கும்   போதே

          பன்னூறு   சூரியன்கள்    பிறக்கும்   கண்ணில்

பாரதியார்   எனும்பெயரைச்   சொல்லும்   போதே

          பாவந்து   தவழுமென்றன்   நாவின்   மீதே

பாரதியார்   எனும்பெயரைக்   கேட்கும்   போதே

          பாய்ந்துவரும்   புத்தெழுச்சி   நெஞ்சிற்   குள்ளே

பாரதியார்   எனுப்பெயரை   எழுதும்    போதே

          படையெடுக்கும்   புதுக்கருத்து   விரலை   விட்டே !

 

முண்டாசுக்   கவிஞனவன்    பெயரைச்    சொன்னால்

          முறுக்கேறும்    நரம்பெல்லாம்   உணர்ச்சி    யாலே

மண்ணுரிமைக்    கவிஞனவன்   பெயரைச்   சொன்னால்

          மனத்தினிலே   விடுதலையின்   வேட்கை   ஊறும்

பெண்ணுரிமைக்    கவிஞனவன்    பெயரைச்    சொன்னால்

          பேதையர்க்கு   மடமையெல்லாம்    ஓடிப்    போகும்

மண்டியிடா    கவிஞனவன்    பெயரைச்    சொன்னால்

          மானத்தில்    தலைநிமிர்ந்தே    தமிழன்    நிற்பான் !