காவலன் உள்ளம்

சுரேஷ்.G.N
ஜூலை 31, 2014 03:08 பிப

 

            ‘அஞ்சலி உனக்கே தெரியும், என் அம்மா தேசப்பற்று அதிகம் கொண்டவர் என்று. அதனால்தான், அப்பா இறந்த பின்பும் என்னை ஒரே பையன் என்று யோசிக்காமல், ராணுவத்திற்கு அனுப்பி வைத்துவிட்டார். அவர் ஆசியுடன்தான் எனக்கு திருமணம் நடக்க வேண்டும், என நினைத்தேன். ஆனால் விதி, இப்படி நடந்து விட்டது. இந்த விஷயத்தை என் அம்மா எப்படி எடுத்து கொள்ள போகிறார், என்று தெரியவில்லை.

 

            நான் சென்ற விடுமுறைக்கு ஊருக்கு வந்த போது, என் டைரியை என் அம்மாப் பார்த்து விட்டார். அந்த டைரி முழுதும் என்னுடைய ராணுவ அனுபவங்கள், பயண அனுபவங்கள் என அனைத்தையும், உன்னிடம் பகிர்வது போல் எழுதியிருந்தேன். அம்மா அதைப் படித்து விட்டு “முரளி, யார் டா, அந்த அஞ்சலி” என்று கேட்டார்.

 

           “என்கூட படிச்சவ. அவளை எனக்கு பிடிச்சுருக்கு, அவளுக்கும் என்னை பிடிச்சுருக்கு. அவளையே எனக்கு கல்யாணம் செஞ்சு வையுங்கம்மா.” என கேட்டேன். “அவளை நான் பாக்கனுமே” என்றார். ஆனால் நீ சுற்றுலா சென்றிருந்ததால், உன்னை அம்மாவிடம் அறிமுகம் செய்ய முடியவில்லை. பிறகு அம்மாவே “அடுத்த லீவுக்கு ஊருக்கு வருவேயில்ல. அப்ப வா, அவளையும் பாத்துட்டு கல்யாணத்துக்கும் பேசி முடிக்கலாம்.” என்றார்.

 

               ஆனால் விதி அப்படி நடக்க விட வில்லை. நான் அடுத்த விடுமுறைக்கு ஊருக்கு வரும் வழியில், வட மாநிலம் ஒன்றில், ரயில் நின்றது. கல்லூரி செல்வதற்க்காகக் காத்திருந்த மாணவர் கூட்டம் ரயிலில் ஏறினார்கள். அதில் பெண்களும் இருந்தனர். ரயில் புறப்பட்டது.

 

               திடீரென்று ஓடும் ரயிலில் ஒரு கூட்டம் ஏறியது. அந்த கூட்டம் ஆயுதங்களால் எதிர்ப் பட்டவர்களையெல்லாம் தாக்கினார்கள். வெட்டினார்கள். நான் என்னையும், என்னால் முடிந்தவர்களையும் காப்பாற்றினேன். ரயில் நின்றது. சில மணி நேரத்தில், காவல்துறை வந்தது. பலர் தப்பித்தோடிவிட்டனர். ஒரு சிலர் கைதாகினர்.

 

               எனக்கு வயிற்றில் சிறிது கத்திக்காயம், முதலுதவி செய்தார்கள். எங்கும் மரண ஓலம். உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை முதலுதவி குழுவும், பொது மக்களும் காப்பாற்றி கொண்டிருந்தனர். நானும் உதவினேன். அப்பொது, ஒரு ரயில்ப்பெட்டியில் யாரோ முனகும் சப்தம் கேட்டது. உள்ளே சென்று பார்த்தேன். ஒரு மாணவி ஆடைகள் அலங்கோலமாய், எழுந்து நடக்கக்கூட முடியாத நிலையில்….

 

              அவளை மருத்துவமனையில் சேர்த்தோம். அவள் கற்பழிக்க பட்டிருந்தாள். அவள் பெற்றோர் வந்தார்கள்…

              கதறி அழுதார்கள்,

              தேற்ற முடியவில்லை.

              ஏதேதொ புலம்பினார்கள். இறுதியில் தவறான முடிவாக தற்கொலை செய்ய நினைத்தனர். உடன் வந்த உறவினர்கள். சமாதானம் சொன்னார்களே தவிர ஒரு முடிவிற்கு வரவில்லை. நிலைமையை புரிந்து கொண்ட நான், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன். அந்த பெண் முதலில் ஒத்து கொள்ளவில்லை என்றாலும், பிறகு சம்மதித்தாள்.

 

              திருமணமும் நடந்தது. இதை எப்படி என் அம்மாவிடம் சொல்வேன். ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமையை எப்படி தாங்கி கொள்வார்.

 

               என் அம்மா, இதையே எப்படி தாங்கி கொள்வாரென்று தெரியவில்லை. இப்படி இருக்கும் போது, நீ சுற்றுலா சென்று திரும்பிய போது, நடந்தப், பேருந்து எரிப்பு கலவரத்தில், பேருந்துடன் எரிந்து இறந்த மூன்று பெண்களில் நீயும் ஒருத்தி, என்பதை எப்படி என் அம்மாவிடம் சொல்வேன். என்று எழுதிக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு,

 

               கண்கள் கலங்க டைரியை மூடினான், முரளி.

sureshgnstories.blogspot.in/2014/07/blog-post_31.html 

SURESH.G.N