முன்னோட்டம்

சுரேஷ்.G.N
ஜூலை 29, 2014 06:06 பிப

               கதவை திறந்தாள் உமா. கையில் கேரி கவருடன் உள்ளே வந்தான், கார்த்திக். கேரி கவரை கட்டிலில் வைத்தவன் “ஏண்டி கதவை திறக்க இவ்வளவு நேரம்? தூங்கீட்டியா? ஓங்கி உட்டேன் னு வை” என்று கத்தியபடி, பாத் ரூமிற்குள் சென்றான்.http://sureshgnstories.blogspot.in/

              அவள் கட்டிலில் போய் அமர்ந்தாள்.

              அவன் துண்டை எடுத்து துடைத்துக் கொண்டே, கட்டிலில் வந்து அமர்ந்தான். “ஹலோ மேடம்! சாப்பிடலாமா?” என்று சொல்லி கொண்டே, கேரி கவரில் இருந்த சாப்பாடு பொட்டலத்தை வெளியே எடுத்தான்.

              அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

              வியப்புடன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

              “உமா என்னாச்சு?” என்றான்

              அவள் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

              “ஹே… என்ன கோபமா இருக்கிற மாதிரி இருக்கு. யார் மேல கோபம்?” என்று கேட்டான்.

              அவள் நகத்தைக் கடித்தபடி உட்கார்ந்திருந்தாள்.

              “என் மேலயா?” தொடர்ந்து கேட்டான்.

              சிறிது யோசித்தவன், “ஓ…. உள்ள வந்தவுடனே திட்டினதுனாலயா?” என்றபடி சிரித்தான்.

              தொடர்ந்து, “ஏய்… நான்தான் அடிக்கடி உங்கிட்ட இது மாதிரி வெளையாடுவேன்ல. சீரியஸா எடுத்துகிட்டியா?”

 

             

அவனை பார்த்து முறைத்தாள் உமா. “ஏய் லூசு…. என்னை பத்தி உனக்கு தெரியாது. நான் என்னைக்கு உன்னை திட்டியிருக்கேன்? அப்படி நான் சீரியஸாதான் திட்டினேன்னு நெனச்சீன்னா, இந்தா என்னை அடிச்சுடு” என்று, அவள் கையைப் பிடித்து, தன் கண்ணத்தில் செல்லமாக அடித்து கொண்டான். பிறகு, “வா சாப்பிடலாம்” என்று அவன் சிரித்து கொண்டே சொன்ன வினாடி,

              உமா சடாரென நிஜமாக அறைந்தாள்.

              அதிர்ந்தான் கார்த்திக்.

              “எதுக்குடா காலைல எங்கப்பாவை போய் பார்த்த?” என்று கத்தினாள் உமா.

              “தெரிஞ்சு போச்சா?” என்று மனசுக்குள் நினைத்த படியே கட்டிலை விட்டு எழுந்து, திரும்பி நின்றவன். “உமா…. எனக்குதான் அப்பா, அம்மா, சொந்தம், பந்தம் யாருமே இல்லை. உனக்குதான் எல்லாரும் இருக்காங்கள்ல…. ஏன் எனக்காக அவங்களை எல்லாம் பிரிஞ்சு…” என்று சொல்லிக் கொண்டிருந்தவனை, விசுக்கென தன் பக்கம் திருப்பிய உமா, “அவங்கதான் பொண்ணே வேண்டான்னு விட்டுடாங்கள்லடா. அவங்க மட்டும் எனக்கெதுக்கு?” என்றாள்

             உடனே அவன், “அப்ப அவங்க ஒரே பொண்ணு உன்னை விட்டுட்டு, வேற யாருக்காக வாழணும்” என்றான்.

             உமா, பதிலேதும் சொல்லாமல், கண்கள் கலங்கியபடி நின்றாள்.

 

             “சொல்லு உமா… அவங்களை சாக சொல்லிடலாமா?” மேலும் கேட்டான்.

             விசுக்கென கட்டி கொண்டாள், உமா.

             அழுது கொண்டே, “அவங்க எனக்கு வேண்டான்னா… ஏன் உன்னோட வந்து ஒரு மாசம்…?” என்று விம்மினாள்.

             “சரி உமா… அழுகாதே” என்று அவள் தலையை கோதினான் அவன்.

             தொடர்ந்தாள் உமா, “உங்கூட வந்து ஒரு மாசமா ஏன் இன்னும் கல்யாண்ம் பண்ணிக்காம இருக்கேன்? அவங்க சம்மதத்தோடதானே கல்யாணம் நடக்கனும்னு காத்திருக்கேன்.” என்றாள், அழுது கொண்டே.

             “சரி சரி புரியுதுடா. அழாதே. நான் அங்க போனதுனால எனக்கு எந்த அவமானமும் இல்லை” என்று ஆறுதல் சொன்னான் அவன்.

             மெதுவாக அவனிடமிருந்து விலகியவள், “என்ன நடந்துச்சு?” என்றாள்.

 

             “நான் அங்கப் போனேன். என்னை பார்த்த உங்கப்பா, ‘வெளிய போக சொல்லு’ன்னு உங்க அம்மா கிட்ட சொன்னாரு, உங்க அம்மா என்ன சொல்றதுன்னு தெரியாம கையெடுத்து கும்பிட்டாங்க. பாக்கறதுக்கே கஷ்டமா இருந்துச்சு. திரும்பி வந்துட்டேன்.” என்றான்.

             “தெரியுண்டா” என்று கத்திவிட்டு சடாரென கட்டிலில் அமர்ந்தாள் அவள்.

             மேலும், “தெரியுண்டா… நீ அங்கபோனா என்ன நடக்குன்னு. அதான்… அதான்…” என்று பொறுமினாள், நெற்றியை தேய்த்து கொண்டே.

             “யே உமா… இது எனக்கு அவமானம் இல்லம்மா. இதையெல்லாம் நான் அவமானமா நெனைக்க மாட்டேன். இப்ப நீ கூட தான் என்னை அடிச்ச… அது மாதிரி, இதுவும் உரிமைகளோட அத்து மீறல். அவ்வளவுதான்.” என்ற படி அவளருகில் அமர்ந்தான்.

             அவள் கூந்தலை தடவிய படியே மீண்டும் தொடர்ந்தான்.

             “இல்லைன்ன… இதுக்கு எப்பதான் முடிவு கட்டுறது? அப்படியே விட்டுட்டா, ஊரு வேணும்னா நம்ம கல்யாணம் பண்ணிக்கிடு வாழ்றோம்னு ரிஜிஸ்டர் சொல்றதை நம்பும். ஆனா, நாம… இந்த ஒரு மாசம் இருந்த மாதிரிதான் காலம்பூராவும் இருக்கனும்.” என்று சொன்னவுடன் அவன் மடியில் படுத்து கொண்டாளவள்.

 

             “கோபத்துல அடிச்சுட்டேன் சாரிடா, வலிக்குதா?” அவன் கண்ணத்தை தடவினாள் அவள்.

             மேலும் “”அச்சச்சோ…. புருசனை பொண்டாட்டி அடிக்க கூடாதுல்ல? என்றாள்.

             “அட… ஆமா. சரி பரவாயில்ல. பொண்டாட்டி புருசனுக்கு இன்னொரு அம்மா மாதிரிதானே, அடிக்கலாம். அம்மா அடிச்சா பையனுக்கு வலிக்காது” என்றான்.

 

             சிரித்தாள் உமா.

             “பசிக்குதுடா” என்றாள்.

             இருவரும் சாப்பிட்டு விட்டு படுத்தனர். கட்டிலில் படுத்திருந்த உமா, திரும்பி கீழே படுத்திருந்த கார்த்திக்கை பார்த்தாள்.

 

             கண்கள் கலங்கிய படியே, மனசுக்குள், “நான் கொடுத்து வச்சவடா” என்று நினைத்து கொண்டாள்

.http://sureshgnstories.blogspot.in/2014/07/blog-post.html#more 

SURESH.G.N