திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 30 யாதுமாகி நின்றவன்

poomalaipalani
ஜூலை 24, 2014 01:05 பிப

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 30
யாதுமாகி நின்றவன்


சிவன்எங்கும் இருக்கிறான், அவனை நாம் காணவில்லை , எதிலும் இருக்கிறான் நாம் அறிவதில்லை. அவன் எப்போதும் இருக்கிறான் ஆனாலும் அவனை உணரும் முயற்சி நம்மிடம் இல்லை.திருமூலர் கூறுவார்: மனமென்றும் தேரேறிச் சென்று அந்த மாயனைப் பாருங்கள், அவன் புறக்கண்ணுக்கு புல்படுவதில்லை. உங்கள் சரீரத்திற்கண் அவன் விளங்குகின்றான். அடியார்கள் உள்ளந்தோறம் விளங்கி நிற்கும் அந்த பேரறிவாளனை நான் போற்றி வழிபடுகிறேன், என்று அவனது திருநாமத்தை சிந்தித்திருக்கும் மனம் ஆசைகளை விட்டு விலகிவிடும்,


நாமமோ ராயிரம் ஓதுமின் நாதனை
ஏமமோ ராயிரத் துள்ளே இசைவீர்கள்
ஓமமோ ராயிரம் ஓதவல் லாரவர்
காமமோ ராயிரம் கண்டொழிந் தாரே. என்கிறது திருமந்திரம்
ஆயிரம் திருநாமங்களால் சிவனை போற்றி வழிபடுங்கள், அதனால் ஒராயிரம் வகை சுகங்கள் அடையலாம், நீங்கள் சிரசின்மீது மனதை நிறுத்தி, ஞானசாதனையில் ஈடுபட்டால் ஆயிரமாயிரம் ஆசைகளும் நீங்கிப்போகும், இது பாடலின் கருத்து.


நீரின் தன்மையை அது தெளிவாக இருக்கம் நிலையில் தான் அறியமுடியும், கலங்கிய நீரில் சேறு கலந்திருக்கும், உங்கள் மனம் சரீரமயமான எண்ணத்தில் கலங்கியிருக்கும் போது உங்களால் எப்படி இறைவனின் இயல்வை அறிய முடியும்? குளத்து நீரை முகந்து குடத்தில் வைத்து தெளியச் செய்வதால் குடித்தற்காகும், சிந்தை தெளிவுற்றால் சீவனும் சிவனாகலாம், என்கிறது மந்திரம் பாடல்: மண்ணில் கலங்கிய நீர்போல் மனிதர்கள்.............


உள்ளங்கை நெல்லிக்கனி என்பார்கள் பிரத்யடச உண்மைக்கு நிருபணம் தேவைப்படாது. உண்மைத் தவமுடையாரின் உள்ளத்தில் சிவன் விளங்குவான், அவன் தூயவன் தூயநெறியை நமக்கு காட்டுவிப்பான், எனவேதான் அந்த தேவதேவனை நான் விரும்பினேன் அவனிடம் பொருந்தி உலகின் ஆசாபாசங்களைக் கடந்து சென்றேன் என்கிறார் சித்தர்.


தன்னை வழிபடுகிறவரின் தீயகுணத்தையும், தீய செயல்களையும் அவன் ஒழித்து கட்டுகிறான். அவனுடைய திருவடிகளே வீரர்கள் போய் சேரும் சொர்க்கம். சிவன் வாழ்வளிக்கும் ஐந்தெழுத்தில் விளங்கியிருப்பவன், அவனே உலகத்து உயிராகவும், நிலமாகவும், நீள்விசும்பிடை காற்றாகவும், கதிராகவும், மதியாகவும், ஆதியாகவும் அக்னியாகவும் உள்ளான். தன்னை புகலிடமாய் கொண்டவரை அவன் தாங்கி நிற்கிறான். உலகின் தனிப்பெருந் தலைவனாகிய பெருமான் ஆன்மாக்களின் பக்குவகத்திற்கேற்ப ஆட்கொள்கிறான்.


உலகம் ஏழுமம் அவனால் படைக்கப்பட்டது, அவற்றை கடந்து நிற்கும் பெருமையும் அவனுக்குண்டு தன் அடியார்கள் செல்லும் நெறியில் தானும் உடன் செல்வான். தூலத்திலும், சூக்குமத்திலும், சிவன் நிறைந்து விளங்குகின்றான், அவன் ஆதாரமாகிய உடலாகவும், அவன் ஆதாரம் கடந்த நாதமாகவும், நாத்தின் முடிவாகவும் (நாதாந்தம்) இருக்கிறான். அவனே உயிராகவும், உயிருக்கு வேறான அகண்ட வடிவமாகவும், இருக்கிறான், அவன்தான் தூலத்தையும் சூக்குமத்தையும் பொருத்தி இணைக்கும் பிராணசக்தி. ஆக்கப்பட்ட யாவும் அவனிடமிருந்தே தோன்றின, அவன் எல்லாமாகி நிற்பினும் உலகத்தாரால் காணப்ட தோன்றுபவன் அல்லன். அவன் தத்துவங்களின் தலைவன் அத்தனை தத்துவங்களும் தத்துவ விருத்தியேயாகும்.


அவன் புறக்கண்ணுக்கு புலப்படாதவன், என்பதால் இல்லை என்றாகி விடாது. நெகிழ்ந்துருகும் அன்பரிடம் அவன் விளங்கித் தோன்றுவான். அவன் மிகப் பழைமையானவன், பரிசுத்தன், நடுக்கமோ, குற்றமோ இல்லாதவன். உள்ளப்பண்போடு அவன்பால் அன்பு கொண்டவர்க்கு அவன் வெளிப்பட்டு அருள் புரிகிறான். அவனே ஆனந்தமாகவும், ஆனந்தத்தை அளிப்பவனாகவும், ஆனந்தில் திளைப்பவனாகவும் இருக்கிறான்,


அவன் எல்லப் புவனங்களிலும் நிறைந்த புண்ணியமூர்த்தி, பாமரிடத்தே அறியாமை என்கிற இருளிலும், ஞானியரிடத்தே ஞானக் கதிரொளியாகவும் அவன் உறைகின்றான். " எம்பெருமான் ஏழு உலகங்களையும் ( (பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், கனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம் ) தாங்கி நிற்கும் வல்லமை கொண்டவன், அணுவை காட்டிலும் நுட்பமான தன்மையும், அவனுக்குண்டு, எட்டு திக்கிலும் உள்ள மலைகளுக்கெல்லாம் ஒப்பானது அவனுடைய வலிமை .அகன்ற கடலினும் பெரிது அவன் கொண்ட ஆற்றல். அவரவரின் தவத்திற்கேகற்ப அவன் அறியப்படுகிறான். துன்பக்கடலில் அழுந்தித் துயர்படுவோர்கள் உள்ளொளியாம் சிவத்தை கண்டு கரைசேரலாம்,


சிவஞானயரின் உணர்வும், உயிரும் சிவன், பொருட்களால் உண்டாகிற அறிவும், அறியப்படுகிற பொருளும் அவன் , எங்கும் பரவியிருப்பவன் இதயத்தில் இருப்பதும் உண்மை, ஆனால் எண்ணத்தில் அவனை அகப்படுத்தமுடியாது.


விண்ண வனாய் உலகேழுக்கும் மேல்உளன்
மண்ண வனாய் வலம சூழ்கடல் ஏழுக்கும்
தணண வனாய் அதுதன்மையின் நிற்பதோர்
கணணவன் ஆகிக் கலந்து நின்றானே. என்கிறது திருமந்திரம்
அவனே வானம, அவனே பூமி, மேலும் கீழும் வியாபித்திருப்பவன் அவன், ஏழு உலகங்களுக்கும் அப்பால் உள்ளவன், கடல்களுக்குக் குளிர்ச்சியை தருபவன், வானின் இயல்பும் நிலத்ததின் இயல்பும் அவனுடையது,
அவனே உயிர்க் கூட்டம், அவனே உயிரினங்களைச் செலுத்துவமு, அவனைத் தலைவன் என்று சிவஞானியர் போற்றுவதில் என்ன வியப்பு


சீவரின் உடம்பில் உயிர்
அண்ட ஆகாயத்தில் பிராணசக்தி
விரிந்த கதிர்களை உடைதிங்கள்
விழிகளில் விளங்கும் சிவம்...... என்று யாதும் அவனே.
அண்ட பாதாளங்களள் அவனுடையவை
எட்டுதிக்கிலும் இருப்பது அவன்தான்
அவனே அறிவின் வடிவம்
தொலைவில் இருப்பதும், அண்மையில் இருப்பதும் அவனே
அவன் மாறுபாடற்றவன்
உயிர்களுக்கு இன்பம் செய்பவன்
தத்துவங்களாகவும், தத்துவங்கள் கடந்தும் காணப்படுபவன்
எங்கும் அவனே அவனே சிவம்,
அன்பே சிவமாகவும் சிவமே அன்பாகவும் அமைந்தவன்,
அவனே ஞானத்தலைவனாகவும், ஓமத்தலைவனாகவும் ஒளித்தலைவனாகவும் அமைந்தவன்


திருச்சிற்றம்பலம் .... ஓம் நமசிவாயம்


மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
vpoompalani05.wordpress.com, poomalai-karthicraja.blogspot.in, poompalani.weebly.com