இது என்ன மரம்

கல்யாண கண்ணன்
கல்யாண கண்ணன் சிறப்பு பதிவு
ஏப்ரல் 14, 2014 03:30 பிப

மாமா இதோட பேரு என்ன?

எதோடதுடா

இதோ .....இந்த மரம்

காதலர்கள் உருவாக்கிய இதயத்தில் மெல்லிய நரம்புகள் தெரிவதுபோல் இலைகளையுடைய அந்த மரத்தை பார்த்தவனுக்கு அதன் பெயர் தெரியவில்லை. வேறு என்ன செய்வது எந்தவித தயக்கமின்றி உண்மையை ஒத்துகொண்டான். அவனும் அதை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை.அவன் கவனம் எல்லாம் சட்டென்று பூங்காவில் இருந்த ஊஞ்சல் மேல் சென்றது.

மாமா வா ஊஞ்சல் விளையாடலாம்

சரி வாடா போகலாம் என்று பதில் சொல்வதற்குள் ஊஞ்சல் மேல் அமர்ந்தான்.

தள்ளிவிடு.......... தள்ளிவிட்டு.........

இந்தமுறையாவது வானத்தை தொடவேண்டும் என்பதுபோல ஒவ்வொருமுறையும் மேலே செல்லும்பொழுதும் கால்களை தன்னால் முயன்றவரை தூக்கினான். ஒவ்வொரு முறையும் அவனது முகசுழிப்பு மாறுவது அவனக்கு சிரிப்பாய்யிறுந்தது. கொஞ்சநேரம் சென்றவுடனேயே அவன் கவனம் கயிறு ஏற்றம் மேல் சென்றது. இன்னும் சற்றுநேரத்தில் அவையெல்லாம் மறைந்துவிடபோவதுபோல.

நிறுத்து நிறுத்து என்று அவசர அவசரமாக ஊஞ்சலை நிறுத்த செய்து கயிறு ஏற தொடங்கியவன் நான்கு அடுக்குகொண்ட அதில் இரண்டாம் அடுக்கே போதும் என அங்கேயே நின்றுவிட்டான். அடுத்த ரெண்டு அடுக்கு ஏறி அடுத்தபக்கம் போக விருப்பமில்லைபோலும். கயிறை பிடித்தவாரே மாமா இது பேரு என்ன என்றான். ராணுவ அதிகாரியின் தோரனையில். நெறுக்கமாகவும் சிறியதாகவும் இலைகளையுடைய விட்டமின் D நிறைத்த கனிகளை தரக்கூடிய அந்த மரத்தின் பெயரும் தெரியவில்லை. ஆனால் முன்பு போல் இல்லாமல் சற்று நேரம் யோசித்துவிட்டு ஞாபகம் வந்தவன் போலும் ஆனால் சற்று நேரம் முன்புதான் மறந்தவன்போலும் சமாளித்தான். அவன் அதை கேட்டுகொண்டே கயிறைவிட்டு இறங்கி அடுத்த விளையாட்டை நோக்கி ஓடினான். விளையாட்டு பொருட்கள் அனைத்தையும் செவ்வகவடிவ பூங்காவின் அனைத்து பக்கங்களிலும் வைத்தது அவன் மாமாவிற்கு சற்று எரிச்சலை ஏற்படுத்தியது. இப்பொழுதுதான் பலவருடம் கழித்து தன்வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்காவிற்கு இரண்டாவது முறையாக வருகிறான். அவன் பொழுதுபோக்கிற்கு நகரின் பல இடங்களில் திரையரங்கமும், காப்பி கடைகளும், வணிக வளாகமும் இருந்தது. எப்பொழுதும் குறையபோகாத தொப்பையை குறைப்பதற்காக பல பேரும்,பேசிசிரிக்க சிலபேரும் என மாலைவேலையில் மட்டுமே அந்த பூங்கா பயன்படுத்தப்பட்டது.

பூங்கா குடியிருப்புகள் அதிகம் உள்ள ஏரியாவில் இருப்பதால் காதலர்கள் என கூறிகொள்பவர்களின் தொல்லையில்லை. சந்தையில் வந்த புதுவித ஸ்மார்ட்போன் பற்றி பேசிகொண்டிருந்தவனை நீண்ட நேரத்திற்கு பிறகு மீண்டும் அதே கேள்வி அவனைதாக்கியது.

இந்த மரத்தோட பேரு என்ன ?

..ம்ம்... மரம் ஏன்டா படுத்துற போடா போயி விளையாடுறா. அவனும் ஒவ்வொருமுறையும் அனிச்சைசெயல் போல மரத்தை பார்த்ததும் பெயர் கேட்க ஆரம்பித்தான். இப்பொழுது ஐந்தாவது முறையாக தன்னை தாக்கும் அந்த கேள்வி அவனை எரிச்சலடைய செய்தது. நீண்ட நேர நடையும் கூடதான். அருகில் இருந்த மரஇருக்கையில் சற்று அமர்ந்து ஆசுவாசபடுத்தி கொண்டவன் இடையில் ஒரு மரத்திற்கு வேறு பெயர் கூறியதை நினைவுபடித்திகொண்டே தான் பெயர் தெரியாது என்று சொன்ன அந்த மரங்கள் அனைத்தையும் சற்று நிதானத்துடன் கவனித்தான். தன் பெயர்கூட தெரியாத அவனை அந்த மரங்கள் அலட்சியபடுத்துவதுபோல தோன்றியது. அவனுக்கு அவைகளின் ஒவ்வொரு அசைவும் அவனைபார்த்த ஏலனசிரிப்பாகவே தோன்றியது. ஒவ்வொரு மரத்தின் வித்தியாசம் அவனுக்கு புரிய ஆரம்பித்தது. கூர்மையான அந்த இலைகள் போர்வீரனை நோக்கிவரும் ஆயுதம் போல் அவனை நோக்கி காற்றில் நடனம் ஆடியபடியே வந்துகொண்டிருந்ததும் அவைகளின் மௌனமும் அவனை குற்றவுணர்ச்சி கொள்ளசெய்தது. அந்த பூக்களின் வாசம் அவனை எதோசெய்தது. அவ்வளவு பெரிய பூங்காவில் தனக்கு பெயர் தெரிந்த மரம் எதாவது இருக்காதா என்று தேட ஆரம்பித்தான். பெயர் தெரியாத மரத்தின் மரஇருக்கையில் இருந்து எழுந்து வேகமாக நடந்தான்.

மாமா மாமா இரு நானும் வரேன்

மரத்தோட பெயர்தானே தெரியாது என்று ஆறுதல்பட்டுகொண்டே தனக்கு தெரிந்தவை அனைத்தையும் சில நிமிடகளில் நினைவுபடித்திகொண்டவன்.

புன்சிரிப்புடன் தன் நடையை சற்று தளர்த்திகொண்டான்.

அவன் சிரிப்புக்கு காரணம் இருந்தது........

சற்றுதுரம் தள்ளி இருந்த அந்த மரத்தின் பெயர் அவனுக்கு தெரியும்.

கசப்பு தன்மையுடைய அந்த இலையும் அதன் பழங்களும் அவ்வளவு பரிச்சயம்மில்லை என்றாலும் அதன் பெயர் அவனுக்கு தெரியும். மரத்தை நெறுங்க நெறுங்க அவனேயே பார்த்தான். தேர்வில் தனக்கு தெரிந்த ஒரே ஒரு கேள்வி வினாதாளில் கடைசியாக இருப்பதை பார்த்தவன்போல. ஆனால் அவனோ சற்றும் சனலமற்று அதை கடந்துபோனான். குழந்தைகளுக்கு மட்டுமே அது சாத்தியம் போல.

அவனும் குழந்தையை போல ஏமாந்து போனான்.

மரத்தின் பெயர்கூட தெரியாத தன் மாமாவிடம் கேட்பதற்கு அவனிடம் கேள்விகள் ஒன்றுமில்லை போலும்.