திருவாதவூர் சுவாமிகள் அருளிய ஞானத்தாழிசை

சுந்தரேசன் புருஷோத்தமன்

 

அன்பிற்கினியோர்க்கு வணக்கம். இக்காலத்தில் வெளியாகும் சைவ திருமுறை திரட்டுக்களில், மேற்சொன்ன மணிவாசகப்பெருமான் அருளிய ஞானத்தாழிசை எனும் அற்புத பாடல் இடம்பெறுவதில்லை. நெடுநாள் இப்பாடல்கள் கிடைக்கப்பெறாமல் என் குருநாதர் துயருற்றதை நானறிவேன். தேடலின் பயனால் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய ஐயா உயர்திரு. ச.இராமசாமி அவர்களின் உதவியின் பேரில் இப்பாடல் மற்றும் விளக்கமுடன் அடங்கிய நூல் சமீபத்தில் கிடைக்கப்பெற்று பெருமகிழ்வடைந்தேன். அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி! புத்தகம் கிடைக்கும் முகவரியும், அலைபேசி எண்ணும் கீழே குறிக்கப் பட்டுள்ளது.

அன்பன்,

சுந்தரேசன் புருஷோத்தமன்

 

திருவாதவூர்ப் பெருமான் அருளிய, ஞானத்தாழிசை

 

பாடல்-1

சுழியாகிய முனைகண்டபின் உற்றாருற வற்றாய்
சூதும்பல பொய்பேசிய தொழிலும் பிறர்க்கிட்டாய்
வழியாகிய துறைகண்ட பின் அனுட்டானமுமற்றாய்
வழங்கும்பல நூல்கற்றிடு நினைவும் பிறர்க்கிட்டாய்
விழியாகிய மலர்கண்டபின் உயரர்ச்சனை யற்றாய்
மெய்ந்நீறிடு திருமந்திரம் விட்டாய் சிவமுற்றாய்
அழியாப்பதி குடியேறினை அச்சம்பல வற்றாய்
யாரொப்பவர் நிலையுற்றவர் அலைவற்றிரு மனமே

பாடல்-2‏

நெஞ்சிற்பொரு ளடிகண்டபின் நெஞ்சிற்பகை யற்றாய்
நேசத்தொடு பார்மங்கையர் மேலும்நினை வற்றாய்
மிஞ்சிச்சொலு முரையாண்மையும் வீம்பும்இடும் பற்றாய்
விரதங்களும் வேதங்களும் வீணாகம றந்தாய்
அஞ்சும்உட லாய்க்கண்டபின் ஆசைத்தொடர் பற்றாய்
ஆருந்திதிருக் கோயில்சிவம் அதுவும்தனில் உற்றாய்
தஞ்சம்எனும் ஞானக்கடல் மூழ்குந்திற மாகித்
தாள்சேர்ந்தனை குறைவேதினி சலியாதிரு மனமே

பாடல்-3‏

நாசிநுனி நடுவேதிருக் கூத்தாகிய நடனம்
ஞானக்கண் ணாலதனை நாடிச்செயல் கண்டு
சீசீ என முரையற்றனை சினமற்றனை உயிர்கள்
செய்யுமந்நி னைவற்றனை நேசத்துடன் கூடிக்
கூசிக்குல வரவற்றனை கோளற்றனைப் பாவக்
குடியற்றனை நலமுற்றனை குடியேறினை மேலாங்
காசிப்புனல் தனில்மூழ்கினை கரையேறினை காட்சி
கண்டாய் அரன் கொலுவாகிய சபைமேவினை மனமே

பாடல்-4‏

வெளிபெற்றிடு சொருபப்பொருள் வெளியாகிய ஒளியில்
விளையாகியநாதத் தொனிவிந்தின் செயல்கண்டு
களிபெற்றனை தயவுற்றனை பிறவிக்கட லென்னும்
களையற்றனை உலகத்தினில் வரவற்றனை காணா
ஒளிபெற்றனை மயலற்றனை ஒழிவற்றனை ஓதும்
உரையற்றனை களிபெற்றனை பசியற்றனை ஊறல்
குளிபெற்றனை அரனுற்றிடு கொலுவுற்றனை கோமான்
கொடைபெற்றனை அறிவுற்றனை கோளற்றனை மனமே

பாடல்-5

பத்தோடிரு கலையாகிய பனிரெண்டினில் நாலும்
பாழ்போகிட மீண்டே வரும் பதியின்கலை நாலும்
பெற்றோடிவந் திங்கேறிய பேர்மைந்தனைக் கண்டு
பேசும்நிலை யோடும்உற வாகிப்பிணக் கற்றாய்
கற்றோருடன் கற்றோமெனும் வித்தாரமு மற்றாய்
கானற்புன லோகப்பிடி மானத்தையு மற்றாய்
சித்தோடிரு சித்தாகிய சிற்றம்பல மீதே
சேர்ந்தாய் குறை தீர்ந்தாய் இனி வாழ்வாயிரு மனமே

பாடல்-6

அல்லற்படு மோரொன்பது வாசல் பெருவாசல்
ஆருமறி வார்கள் அறியார்க ளொருவாசல்
சொல்லப்படு தில்லைச்சிறு வாசற்படி மீதே
சூழும்பல கரணாதிகள் வாழும் மணிவாசல்
தில்லைப்பதி யருகே யடையாள மெனலாகும்
சேருங்கனி காணும்பசி தீரும் பறந்தோடும்
சொல்லப்படு மல்லற்பல நூல்கற் றதனாலே
சின்னஞ்சிறு வாசல்புக லாமோசொலு மனமே

பாடல்-7

விண்டுமொரு வர்க்கும்உரை யாடப்பொருள் தானும்
பீஜாட்சர வீதித்தெருக் கோடிமுடிந் திடத்தே
கண்டுமிருந் தார்க்குள்ளிரு பரிபன் னிருகாலாற்
காணுமது தானும்பனி ரெண்டங்குலம் பாயும்
பிண்டம்புகு மண்டம்புகு மெங்கும்விளை யாடிப்
பீடமென்னும் நிலைசேர்ந்திடு பெருமைதனைக் காண்பாய்
என்றும்மொழி யற்றார்பரத் தோடும்உற வாகி
ஏதும்உரை யாமல்இருப் பார்களறி மனமே

பாடல்- 8

முப்பாழ் கடந்தப்பா லொரு முகப்புண்டதினடுவே
முச்சந்திகள் கூடும்அது தானும்முதற் பாழாம்
அப்பாழ்கடந் தப்பாலொரு கணவாயதன் பெருமை
அறுகுநுனி யிடமுமென அறிவார் பெரியோர்கள்
செப்பாதது தானுமறிந் தப்பாற் கடந்திட்டால்
சேருங்கலை நாலும்வரு திசையுமறிந் திட்டால்
ஒப்பாரினி இப்பாரினில் ஒப்பாருமே யில்லை
ஒன்றைப்பிடி தன்மைப்படு மெண்ணப் படுமனமே

பாடல்-9

நாதமெழுந் தெழுந்தோடி வந்துறையும் திருக்கூத்து
ஞானக் கண்ணினாலும்அதை நாடிச் செயல் கண்டு
பூதமெனும் பயமற்றனை பொறியற்றனை மெய்யிற்
பூசும்பரி மளமற்றனை பூவற்றனை லோகஞ்
சூதமென வரவற்றனை சுசியற்றனை எச்சில்
சுத்தஞ்செயு நினைவற்றனை சுவையற்றனை ஞானப்
பாதம்முடி மேல்வைத்தனை பற்றற்றனை யுற்று
பதிபெற்றனை இகலற்றனை பதையாதிரு மனமே

பாடல்-10

ஆயும்பல நூல்சாத்திர வேதத்தொடு புராணம்
ஆய்வந்திடு வழிகண்டறி யார்கள்அது தானும்
பாயுங்கலை பனிரெண்டினி லுண்டாகிய பருவம்
பாரும்அறி யாதுபனி ரெண்டின்செயல் கண்டு
நாயின்கடை கெட்டாய் வழிபாடும்முதற் பெற்றாய்
நாள்கோள் பலவற்றாய் கொலைகளவென்றது மற்றாய்
வாயும்வல தற்றாய்உயிர் வீடும்நெறி யற்றாய்
மண்ணின் வரவற்றாய் இனிபொன்னம் பலமனனே

பாடல்-11

கலையாகிய பிறவிக்கடல் அலையாம லுழன்றேன்
கற்கும்பல சமயங்களும் தர்க்கங்களும் விட்டேன்
நிலையாதெனப் பொருள்செல் வமும்நினைவும் பிறர்க்கிட்டேன்
நித்தம் செயும் நியமங்களும் நேமங்களு மற்றேன்
தொலையாத உறக்கத்தொடு சுகதுக்கமு மற்றேன்
துணையாகிய ஞானக்கடல் மூழ்குந்துறை கண்டேன்
அலையாம லிருக்கும்மன மதிலேகுடி கொண்டேன்
ஆனந்தம் வெளிப்பட்டபின் நானென் றறியேனே.

பாடல்-12

உருவானது விந்தின் பெயர் குருவானது ஞானம்
உடலுக்கு யிரீறாதி லொருநான்க னுள்முதலும்
குருவானது முனைமீதினி லணுவாகிய வெளியிற்
குடியாகிய பதிகண்டவர் அருள்வாத வூரரே
ஒருவாசக திருவாசகம் புவிமீதில் மகிழ்ந்தே
உரைசெய்தனர் தமிழ்த்தாழிசை நெறியின்படி நின்றோர்
கருவாசலி லணுகாமலே பிறவாநெறி பெறுவார்
கடவுட்செய லறியாதவர் கருவாசலிற் புகுவார்.

 

திருச்சிற்றம்பலம்

 

புத்தகம்: ஞானத்தாழிசை,  விளக்கவுரை- சுவாமி சங்கரானந்தர்

அன்புடன் புத்தகங்களை எனது முகவரிக்கு அனுப்பி வைத்த ஐயா, உயர்திரு. ஆ. சிவராமகிருஷ்ணன் (மானேஜிங் டிரஸ்டி, சங்கரானந்தா டிரஸ்ட்) அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.


கிடைக்குமிடம்:

சங்கராஸ்ரமம்,

ஐந்தருவி,

குற்றாலம் (P.O)

627 802

 

தொடர்பு கொள்ள: உயர்திரு. ஆ. சிவராமகிருஷ்ணன் அவர்கள், ஐந்தருவி, குற்றாலம். அலைபேசி: 0 94432 34962