சுந்தரிக்கு இரவுகள் பிடிப்பதில்லை

கல்யாண கண்ணன்
டிசம்பர் 05, 2013 06:58 பிப

சுந்தரிக்கு இரவுகள் பிடிப்பதில்லை.

தனது இருபத்தைந்து வருட திருமண வாழ்கையில் கடந்த பத்து வருடமாக தான் இரவை அவள் அதிகமாக வெறுக்க ஆரம்பித்தாள். காலை சுற்றிய பாம்பு போல அவளை மிகவும் பயமுறித்தியது.

இதோ மாலை  பொழுது சூரியனை மலைபாம்பு உணவை விழுங்குவது போல மெல்ல விழுங்கி கொண்டே வருகிறது. அப்பொழுதெல்லாம் அவள் தன் உடல் உடம்பில் இருந்து கழட்டபட்ட உடையை போல எடை அற்று இருப்பதாக  உணர்ந்தாள். ஆரம்பகாலங்களில் இதை அவள் பெரிதாக எடுத்து கொண்டதில்லை. அவரும்  அப்படி நடந்துகொள்ளவில்லை. ஆனால் இப்பொழுதெல்லாம் அவர் அதிகமாக புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

ஏன் என்றே தெரியாத காரணமற்ற அவரது குடிகார புலம்பல்கள் அவளது தூக்கத்தை மெல்ல மெல்ல உறிஞ்ச ஆரம்பித்துவிட்டது. அவளுக்கு மட்டும் அந்த சப்தங்கள் பகலிலும் கேட்பது போல தோன்றும். காலை பொழுது எப்பொழுதும் அவள் அதே நினைப்பாக இருந்தாள்.

இரவில் நான் அவர் பக்கத்தில் படுப்பது அவருக்கு தெரியுமா? தன் இடுப்பில் தன் கைலி இல்லை என்பதாவது தெரியுமா? இரவில் சுந்தரி ...சுந்தரி ....என்று இருபது முறைக்கு மேல் கூப்பிட்டுவிட்டு ஒவ்வொரு முறையும் என்ன வென்று கேட்டபொழுது பதில் பேசாமல் துங்கினாரே அதுவாது தெரியுமா? எதற்காக  கூப்பிட்டார் ஏன் பதில் பேசவில்லை போன்ற எனது சிந்தனையாவது தெரியுமா?

குடிகாரனுக்கு தெரியாது தான் ஆனால் நான் தான் ஒவ்வொரு நாள் காலையிலும் சொல்லிவிடுகிறேனே. இவன் எப்பொழுதும் ஏன் இப்படி நடந்து கொள்கிறான். என்னுடைய தூக்கம் இல்லாத இரவுகள் அவனுக்கு ஏன் புரிவதில்லை.

அவரில் இருந்து அவனுக்கு இறங்கி பல வருடம் ஆகிவிட்டது. காலை நேரங்களில் அவள் உடல் நிலை அவளை துங்கவிடுவதில்லை. ஏன் என்னை பற்றி அவர் சிந்திபதில்லை. நான் வருமானமில்லாதவள்  அதனாலா? என் தேவைகளுக்கு அவரை அண்டி இருப்பதாலா? எனக்கு மருத்துவம் பார்ப்பதாலா? இப்படி அவளது பகல் முழுதும் கேள்விகளால் நிரம்பியது. அதுக்கு அவளிடம் பதிலும் இருந்தது. நான் தானே அவரது துணிகளை துவைகிறேன். அதனால் தானே உடல் சுகவீனபடுகிறது. அப்புறம் என்ன?

அவள் எப்பொழுதும் தன் மகனிடம் சொல்வதுண்டு அதோ அந்த எதிர்வீட்டுகாரி இருக்காளே அதுதாண்டா அந்த சாந்தி அவ அவ புருசன வெளிய அனுப்பிட்டா. இப்ப அவதா அந்த குடும்பத்த பாத்துகிறா. ...ம்ம்ம் அவளுகென்ன வேல பாக்றா. அவளது தூக்கமும் இளமை போல அவளை விட்டு கொஞ்சம் கொஞ்சம் மாக போய்விட்டது.

இப்பொழுதெல்லாம்  அவனின் கூச்சல் அவளுக்கு பழகிவிட்டது. காலையில் அவன் அப்படியில்லை, தான் பார்க்கும் clerk வேலைக்கு மேனேஜர் போல செல்வான். அப்பொழுதெல்லாம் அவள் ஒரு நமட்டு சிரிப்பு சிரிப்பாள். அவளின் ஒரே ஆசை தன்னுடைய கண் எரிச்சல் அவனை ஒரு நாளாவது சுடாதா என்று? அவளின் ஒரே ஆறுதல் டிவி பார்ப்பதுமட்டும்  தான். பழைய பாடல்களையே கேட்பாள்.

" காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதை தவறவிட்டால் தூக்கம் இல்லை மகளே"


இதை கேட்கும் பொழுதெல்லாம் அவளை அறியாமலே அவள் கண்ணீர் விடுவாள்.