திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படவில்லை -3

பிறைநேசன்
November 29, 2013 06:20 பிப
இந்தத் திருமணம் என்பதில் காதலோ, அல்லது பரஸ்பர அன்பு என்ற ஒன்றோ இருப்பதில்லை. சுத்தமாக இல்லை. ஆனால் அப்படி இருப்பதாக இவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக், ஊரையும் ஏமாற்றி விடுகிறார்கள்.
 
திருமணத்திற்குத் துணைதேடும் இவர்கள் தனக்கு ஏற்ற வருமானம், சமூக அந்தஸ்து, அழகு, சாதி உள்ளவரை மட்டுமே தேர்ந்து எடுக்கிறார்கள். அதாவது தனக்கு வாழ்க்கையை கழிக்க ஒரு துணை வேண்டும். அதற்காக மட்டுமே இவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அந்த வாழ்க்கைத்துணை உறவில் மட்டுமே தெய்வீகக் காதல் இருப்பதாகக் காட்டிக்கொள்கிறார்கள். அதிலே இயற்கையான ஒரு பிடிப்பு ஒருபோதும் இருப்பதில்லை. இவர்களாக ஒரு பிடிப்பை உருவாக்கிக் கொள்கிறார்கள். இந்தத் திருமணம் இயற்கைக்கு எதிரானது.
 
இயற்கையிலேயே திருமணத்திற்குப் பின் அந்த வாழ்க்கை வெற்றியடைந்து அன்போடு இருந்தவர்களும் உண்டு. ஆனால் அந்த வாழ்வு கூட நான் உன்னிடம் நான் அன்பாக இருக்கிறேன், நீயும் என்னிடம் அன்பாக இருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவானதாகவே இருக்கிறது. அதனால்தான் அந்த ஒப்பந்தம் விவாகரத்து மூலம் ரத்தாகி விடும்போது இவள் அவனிடம் ஜீவனாம்சம் கேட்கிறாள். அவன் அதைக் கொடுப்பதற்காக ஒவ்வொரு மாதமும் நாட்கணக்கில் அவளைக் காத்திருக்க வைக்கிறான்.
 
இயற்கையான உணர்வின் பால் காதலில் விழுந்தவர்கள் ஒருபோதும் இந்த திருமண நிறுவனத்தில் வாழ முடியாது. அவர்கள் திருமணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் காதலர்களாகவே இருப்பார்கள். விவாகரத்து இல்லை. விவாகம் இருந்தால்தானே அது ரத்தாக முடியும். விவாகமும், அது ரத்தாவதும் மனிதன் உருவாக்கிய இந்த திருமண நிறுவனத்தில் மட்டுமே உண்டு. 
 
திருமணம் நமது சமூகக் கட்டமைப்பை பாதுகாக்க மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஏற்பாடு மட்ட்மே. இதற்கிடையில் உண்மையான காதல் என்பது திருமணத்திற்குப் பின்னர்தான் வரும் என்பது மட்டும் எப்படி உண்மையாக இருக்க முடியும். திருமணத்திற்கு பிந்தைய காதல் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஏற்பாடேயாகும்.
 
மனிதனே இன்னும் உயர்வான நிலையை அடையவில்லை எனும்போது அவனால் உருவாக்கப்பட்ட இந்த திருமணம் உட்பட மற்ற எல்லா கண்டுபிடிப்புகளும் சொர்க்கத்தை சேராது. அவை வேண்டுமானல் சாத்தான் களால் நிச்சயிக்கப்பட்டதாக இருக்கலாம். ஏனெனில் மனிதனை விட மோசமான சாத்தான் ஏழு உலகிலும் இல்லை.
 
உங்களுக்கு தெரியுமா? காதலர்கள் ஏன் பெரும்பாலும் தோற்கிறார்கள்? அதற்கு காரணம் இந்த திருமண நிறுவனமும் அது மட்டுமே உயர்வானது என்று புரிதல் கொண்டுள்ள இந்த சமூகமும் தான். இவர்களுக்கு அதிக நாள் நீடிக்கக் கூடிய ஒரு பந்தம் வேண்டும் என்று நினைப்பதால் தான் திருமணத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அவர்கள் காதலை அங்கீகரிக்க ஆரம்பித்தால் திருமணத்திற்கு உள்ள மதிப்பு தானாகவே குறைந்துவிடும். எனவேதான் திருமணத்தை போற்றும் சமூகங்களில் காதல் அங்கீகரிக்க படுவதில்லை.
 
ஆனால் அதே சமயம் காதல் ஒவ்வொருவரின் இதயத்திலும் ஆழமாக உள்ளது. எனவேதான் அந்தப்படியான சமூகங்களில் கூட காதல் பற்றிய திரைப்படங்க்ள் நன்றாக ஓடுகின்றன. ஏனெனில் காதலைத்தான் திருமணம் சார்ந்த சமூகம் தடுக்கின்றது. காதல் திரைப்படங்களை அல்ல. மேலும் அப்படியே யாரவது காதலித்து திருமணத்தில் சேர்ந்தாலும் ஏதாவது ஒரு சண்டை அவர்களுக்குள் வராதா? அதை வைத்து இவர்களைப் பிரித்து விடலாமா? என்ற நோக்கம் உள்ளவர்கள் தான் உறவினர்களில் அதிகம்.
 
இந்த திருமணம் வாழ்க்கையை சொகுசாக கழிப்பதற்கு ஒரு மிகச்சிறந்த ஏற்பாடு. ஒரு பந்தம். ஒரு கடமை. ஆனால் அது தான் உண்மையான காதலைக் கொண்டு வருகிறது என்பது பொய். வேறு வழியில்லாமல் நீங்கள் உங்கள் துணையைக் காதலிக்கிறீர்கள். அப்படி காதலிக்காவிட்டாலும் உங்களுக்கு வேறு யாரும் துணையாக வரமாட்டார்கள், உங்கள் சமூகத்திலும் உங்களை மதிக்க மாட்டார்கள், அதற்காக காதலிக்கிறீர்கள்.