வாய் விட்டு அழுங்க… நோய் விட்டுப் போகும்!

கவிப்புயல் இனியவன்
October 14, 2013 05:08 பிப
பொதுவாக ‘வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்’ என்பர். ஆனால் சிரித்தால் மட்டுமல்ல, மனம் விட்டு அழுதால் கூட நோய்கள் ஏதும் அருகில் அணுகாது.

சொல்லப் போனால், உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே மனம்தான். மனதில் ஏற்படும் கோளாறுகளே உடல்நலக் கோளாறுகளாக பிரதிபலிக்கின்றன.
மனிதராய் பிறந்த அனைவருக்குமே வாழ்வில் பிரச்னைகள், சிரமங்கள் நிச்சயம் இருக்கும்.

ஆனால் பிரச்னைகளின் மூலம் ஏற்படும் உணர்ச்சிகளை அடக்குபவரே இங்கு ஏராளம். சோகமாக இருந்தாலும் சரி, சந்தோஷமாக இருந்தாலும் சரி, சிலருக்கு அழுகை பீறிட்டு விடும். ஆனால் அழுகையை பலவீனமாக நினைத்து, அதனை அடக்கி கொள்வோர் அநேகம்.

அவ்வாறு அழுகை வரும்போது, அதை அடக்கிக் கொள்வதாலே நிறைய நோய்கள் உடலை பற்றிக் கொள்கின்றன. பெரும்பாலான மக்கள் கண்ணீரை உணர்ச்சி பெருக்கெடுத்து வரும் பலவீனத்தால் ஏற்படுவது என்றே பார்க்கின்றனர். ஆனால் கண்ணீர் என்பது உடல் மற்றும் மனதில் உள்ள அழுத்தத்தை போக்குவது என்று பலரும் உணருவதில்லை.

அழுகை என்பது நாம் அடக்கி வைத்திருக்கும் உணர்ச்சிகளை, அது மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, வெறுப்பாக இருந்தாலும் சரி, வெளிப்படுத்துவதற்கு உதவுகிறது. இது மட்டுமின்றி அழுவதால் நிறைய ஆரோக்கிய நலன்களும் உள்ளன.

அழுவதை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். மேலும் கண்ணீரிடையே பல வகையான இரசாயன வேறுபாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இப்போது கண்ணீர்களில் உள்ள வகைகள் மற்றும் அவ்வாறு அழுவதனால் ஏற்படும் ஆரோக்கிய நலன்களைப் பற்றி இங்கே காண்போம்.
உணர்ச்சிப் பெருக்கால் வரும் கண்ணீர்
இந்த வகையான மக்கள் உணர்ச்சி

வயப்படும்போதெல்லாம், கண்ணீர் சிந்துவர். இது சோகம், அழுத்தம், விரக்தி மற்றும் ஆனந்த கண்ணீராக இருக்கலாம்.
அடிப்படை சார்ந்த கண்ணீர்
இவ்வகை கண்ணீர், பைலாக்ரைமல் (bylachrymal) என்னும் சுரப்பிகள் வெளியிடும் திரவம் ஆகும். இது பாக்டீரியா தாக்குதல்களில் இருந்து, விழிகளை பாதுகாக்க அத்தியாவசியமானதாகும்.

தற்காத்துக் கொள்ள வெளியாகும் கண்ணீர்
இது தூசிகள் கண்களில் படும்போது, அதிலிருந்து கண்ககளைப் பாதுகாத்து கொள்ள வெளியிடும். இவ்வகை கண்ணீர்கள் கண்களில் அன்னிச்சையான செயலாகும்.
கண் பார்வை மேம்படும்

கண்ணீர் பார்வையை மேம்படுத்த உதவும். கண்களில் உள்ள விழி திரைகள் மற்றும் சவ்வுகள் நீரற்று காய்ந்து போனால், பார்வையில் தடுமாற்றம் ஏற்படும். அந்த நிலையில் அழுதால், கண்ணீரானது விழித்திரை மற்றும் சவ்வுகளை ஈரப்படுத்தி பார்வையை சரி செய்யும்.

கண்களை சுத்தம் செய்யும்

மற்ற பகுதிகளில் இருப்பதை போல விழிகளிலும் பாக்டீரியாக்கள் இருக்கும். ஆனால் கண்ணீரில் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் (Anti Bacterial Activity) உள்ளன. வெறும் ஐந்து நிமிடங்களில் 90 முதல் 95 சதவீதம் வரை, கண்களில் இருக்கக் கூடிய பாக்டீரியாக்களை கொல்லக் கூடிய திரவமான லைசோஜோம் (Lisozom) கண்ணீரில் இருக்கின்றது.

மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம்
மன அழுத்தம் மற்றும் கவலையுடன் இருக்கும் போது, உடலில் உள்ள இரசாயன நிலைகளில் ஏற்றத்தாழ்வு ஏற்படும். அதனை சரி செய்ய கண்ணீர் உதவுகிறது. ஒருவர் கவலையான சூழ்நிலையில் இருக்கும்பொழுது, மனம் விட்டு அழுதால் மன இறுக்கம் மற்றும் அழுத்தம் இருக்காது என்று கூறப்படுகிறது. உணர்ச்சிப் பெருக்கால் வரும் கண்ணீர் அட்ரினோ கார்ட்டிகாட்ரோபிக் (Adrenocorticotropic) மற்றும் லூசின் (Leucine) என்ற உடலில் இருந்து மன அழுத்தத்தை போக்கும் ஹார்மோன்களை வெளிப்படுத்துகின்றன .
நச்சுப் பொருட்களை போக்கும்
சாதாரணமாக வெளிப்படும் கண்ணீரில் 95 சதவீதம் தண்ணீர் இருப்பதாகவும், உணர்ச்சிப் பெருக்கால் வெளியாகும் கண்ணீரில் மன அழுத்தத்தைப் போக்கும் ஹார்மோன்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றன. மேலும் உணர்ச்சியால் உடலில் ஏற்படும் அழுத்தங்களினால் உருவாகும் நச்சுகள் கூட, கண்ணீர் வழியாக வெளியேற்றப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண் உறுத்திகளிடம் இருந்து பாதுகாப்பு
வெங்காயம் நறுக்கும்போது கண்களில் ஏன் கண்ணீர் ஏற்படுவது என்பது ஆச்சரியத்திற்குரிய விஷயம். ஏனெனில் வெங்காயத்தில் கண்களை எரிச்சலடைய செய்யக்கூடிய என்சைம்கள் உள்ளன. அது போலவே ஏதேனும் தூசி பட்டாலும், கண்கள் நீரை சிந்தும். இந்த வகை அழுகை கண்களை சுத்தப்படுத்தி தூசி போன்ற அந்நியப் பொருட்கள் கண்களை பாதிக்காமல் வெளியேற்றுகிறது.

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம்
உணர்ச்சிப் பெருக்கால் வெளியாகும் கண்ணீரில் 24 சதவீதம் வரை அல்புமின் (albumin) புரதம் உள்ளது. இது உடலின் ஜீவத்துவ பரிணாமத்தை மேம்படுத்துகிறது. அழுகை உடலில் மன அழுத்தத்தால் ஏற்படக் கூடிய நோய்களான இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்களில் இருந்து காக்கிறது.

ஆறுதலாக உணர வைக்கும்
வாழ்வில் நிறைய பிரச்னைகள் மற்றும் சிரமங்களை சந்தித்தாலும், அழுகை சிறந்த மன ஆறுதலை தரும். மேலும் கண்ணீர் விட்டு அழுத பின் மூளை, இதயம் சரியான நிலையில் செயல்பட ஆரம்பித்து விடும். எனவேதான் அழுத பின்னர், உடல் அளவில் மிகவும் ஆறுதலாக உணர முடியும்.
ஆகவே அழ நினைத்தால் உடனே அழுது விட வேண்டும்.

அப்போது பலவீனம் என்று நினைத்து அதனை மனதிலேயே அடக்கி வைத்து கொண்டால், உடலுக்கும் மனதிற்கும் கேடு விளையும். அதுமட்டுமின்றி, அழுவதால் இவ்வளவு நன்மை என்று தெரிந்த பின்னும் அழுவதற்கு யோசிக்க கூடாது.


நன்றி
தூதுஒன்லினெ .கம /