மஞ்சள் காமாலை வருவது ஏன்?

nandhagopal
October 06, 2013 07:17 பிப
மஞ்சள்காமாலையைப் பற்றி கோவை என்.ஜி. மருத்துவமனையின் நிர்வாகி மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிறப்பு மருத்துவருமான டாக்டர். மனோகரன் விளக்கம் அளிக்கிறார்.

நம் உடலில் அவ்வப்போது ஏதாவது நோய் வந்து சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றைக் கவனியாமல் விட்டுவிட்டால் நிலைமை மிக மோசமாகிவிடும். அவற்றில் மிகவும் ஆபத்தானதும் மிகவும் கவனிக்கத்தக்கதாகவும் உள்ள நோய் மஞ்சள் காமாலை. நம் உடலிலுள்ள ஒரு உறுப்பான கல்லீரல், வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டு ரத்தத்திலுள்ள பிலுருபினின் அளவு அதிகரிப்பது மஞ்சள் காமாலை ஆகும். மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு தோல் மஞ்சள் நிறமாகவும், கண்களின் வெண் படலத்தில் மஞ்சள் நிறம் படிந்தும் காணப்படும். சிறுநீர் தொடர்ந்து மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

மஞ்சள் காமாலையின் வகைகள்?

வைரஸ் கிருமியால் பாதிக்கப்படுவது : இது ஹெபடைடிஸ் ஏ.பி.சி என்று மூன்று வகைப்படும்.

அப்ஸ்ட்ரக்டிவ் ஜான்டீஸ் :

பொதுவாக கல்லீரல் பித்தநீரை சுரந்து உணவு செரித்தலுக்கு பித்தநீரை அனுப்பும் வேலையைச் செய்கிறது. இவ்வாறு கல்லீரலில் சுரக்கும் பித்தநீரானது செல்லும் பித்தநாளத்தில் சில சமயங்களில் பித்தக்கல்லால் அடைப்பு ஏற்பட்டாலோ, பித்தநாளம் சுருங்குவதாலோ அல்லது பித்தநாளத்திற்கு வெளியில் கட்டி ஏற்பட்டு பித்தநாளத்தை நெருக்கினாலோ ஏற்படும் காமாலைக்கு அப்ஸ்ட்ரக்டிவ் ஜான்டீஸ் என்று பெயர். அப்ஸ்ட்ரக்டிவ் என்றால் அடைப்பு என்று பெயர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மலம் வெளுத்து காணப்படும். உடலில் அரிப்பு ஏற்படும். பசியின்மை, சோம்பல், களைப்பு, வாந்தி, குமட்டல், தலைவலி, உடல் எடை குறைவு, உடல் அரிப்பு, சாதாரண காய்ச்சல் அல்லது குளிர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும். காமாலை முற்றிய நிலையில் தோல் பகுதி, கண்கள் மற்றும் நகப்பகுதியில் மஞ்சளாகவும் சிறுநீர் மற்றும் மலம் மஞ்சள் நிறத்துடனும் காணப்படும்.

மஞ்சள் காமாலை வருவதற்கான காரணங்கள்

ரத்தத்தில் பிலுருபின் அளவு அதிகரித்தல், கல்லீரலை பாதிக்கும் சில நோய்கள், பித்தநீர் பை மற்றும் பித்தநாளத்தில் ஏற்படும் அடைப்பு, மது அருந்துதல், மாசுபட்ட தண்ணீரில் காணப்படும் நோய் கிருமிகள் போன்றவை.

தடுப்பு முறைகள்

தண்ணீரைக் காய்ச்சி பருக வேண்டும். தன் சுத்தம் பேண வேண்டும். துரித உணவை தவிர்க்க வேண்டும். ரத்தம் செலுத்தும்போது முறையாக பரிசோதனை செய்த பின் செலுத்த வேண்டும். மஞ்சள்காமாலை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

நன்றிகள்:தினகரன்