தோற்றுப் போன இதயம்...!!! (Mano Red)

மனோ ரெட்
செப்டம்பர் 28, 2013 01:34 பிப

காதல் முறிவென்பது,
இணைந்து காதல் செய்த 
இரு இதயங்களில்,
ஒரு இதயம் செய்யும்
முட்டாள்தனமான 
காதல் கருக்கலைப்பு..!!

உயிரென்றும்,
உணர்வென்றும்,
உயிர் மூச்சென்றும்,
நினைவென்றும்,
நீங்கா சுவாசமென்றும்,
அழகென்றும் அதிசயமென்றும்,
பொய்களை அள்ளிவிட்ட காதல்
விட்டுப் பிரியும் பொழுதே
பொய்யாய் உண்மை பேசி நடிக்கும்..!!

மோகம் சூழ் மேகமாய் காதல்,
இதயமுள்ள நிலவைக் காதலிக்கும்
இதயமற்ற காதலர்களாய் நட்சத்திரங்கள்..!!
இரவெல்லாம் காதல் கொண்டு
இனிய இசை பாடி மகிழ்ந்து
விடியும்வேலையில்
நிலவைத் தவிக்க விட்டு
நட்சத்திரங்கள் ஓடி விட,
காதலுடன் காத்திருந்த நிலவோ
கரைந்து மெலிந்து மறைகிறான்..!!

காதலில் திருடன் போல்
சுற்றித்திரிந்த நாட்களில்,
இதயம் உள்பட எல்லாம் 
திருடு போகுமே தவிர
காதலுக்காக எதையும் 
திருடி வைக்காது உண்மைக் காதல்..!!
உயிர் தவிர எல்லாம் இழந்த பின்பு
காதலில் இழப்பதற்கு என்ன இருக்கு..??

பாதி உயிருடன் கலந்த காதல்,
மீதி உயிர் தேடி காதலில்
பாதிக்கிணறு கடக்கையிலே
சிறு மூளையில் விளக்கு எரியும்,
சாவு பயம் கண்ணில் தெரியும்,
மன வெளிச்சத்தை இருள் மூளும்,
மானம் காற்றில் பறக்கும்,
நிழல் கூட பேயாய் மாறும்,
இவையெல்லாம் சூடு வைத்தாலும்
சூடு சொரணையின்றி காதல் சிரிக்கும்..!!

எல்லாம் கடந்து,
காதல் தேனாய் கசந்து,
எல்லை மீறும் போது
அத்தனையும் உடைந்து,
அவசரமாய் பிரிந்து,
காதல் தலை குனிந்து நிற்கையில்
நரகமும் இரக்கப் பட்டு அழும்..!!

காலத்தினும் அழியாத
காதல் கூத்து கலைந்து
நாடக திரை மூடும் போது,
கிழிந்த காதல் கடிதங்களும்,
நசுக்கப்பட்ட ரோஜாக்களும்,
ஆணியறைந்த இதயமும்,
காத்துகிடந்த கடிகாரம் மட்டுமே
தோற்றுப் போன இதயத்திடம்
மிச்சமாய் இருக்கும்...!!!