காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!

தமிழ்
ஆகஸ்ட் 22, 2013 12:34 முப

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே

 
பயனற்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படாது.
 

இப்பழமொழி பட்டினத்தார் வாழ்வில் நிகழ்ந்த சம்பவமாக கூறப்படுகிறது. இவ்வாக்கியமே பட்டினத்தார் துறவு நிலைக்கு வர உதவியதாகும்ய. 

சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட இவர், கடல் கடந்து வாணிபம் செய்யும் பணி செய்து வந்தார். 16ம் வயதில் சிவகலை என்பவரை மணந்து கொண்டார். திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, திருவெண்காடர் சிவனை வழிபட்டார்.

 

இவருக்கு அருள் செய்ய விரும்பிய சிவன், வறுமையில் வாடிய சிவபக்த தம்பதியரான சிவசருமர், சுசீலை என்பவர்களின் மகனாக பிறந்தார். மருதவாணர் என்று அழைக்கப்பட்டார். ஒருசமயம் சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை திருவெண்காடருக்கு தத்து கொடுக்கும்படி கூறினார். அதன்படி திருவெண்காடர், மருதவாணரை தத்தெடுத்து வளர்த்தார். மருதவாணரும் தந்தையின் தொழிலை செய்தார்.

 

 

மருதவாணரை வெளியூருக்கு அனுப்பி வாணிபம் செய்து வரச்சொல்ல அவரும் வணிகம் செய்து விட்டு வந்து தாயாரிடம் ஒரு பெட்டியைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். வீட்டிற்கு வந்த திருவெண்காடர், மகன் சம்பாதித்து வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தார். அதில் தவிட்டு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எருவும் ஒரு காதற்ற ஊசியும் ஒரு ஓலையும் இருந்தது. அதில், ""காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'' என்று எழுதப்பட்டிருந்தது. அதைக்கண்ட திருவெண்காடருக்கு ஒரு உண்மை உரைத்தது.

"மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது''  என்ற உண்மையை உணர்ந்தார். உடன் இல்லற வாழ்க்கையை துறந்து சிவனை வணங்கி அவரையே குருவாக ஏற்றார் என்பது வரலாறு.