இணைய நிலா: திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படவில்லை – 1

பிறைநேசன்
ஜூன் 10, 2013 05:08 பிப

“அன்புடையீர், நிகழும் நந்தன ஆண்டு ….” என்ற வரிகளுடன் ஆரம்பிக்கும் எத்தனையோ திருமண அழைப்பிதழ்களை படிக்கிறோம். வாழ்த்துகிறோம். அதை ஒரு சந்தோசமான நிகழ்வாக எடுத்துக் கொள்கிறோம். ஆனால் திருமணம் என்பது உண்மையிலேயே திருமணம் தானா? இரு மணங்கள் தாங்களாகவே முன்வந்து இணைகிற வைபவமா? என்று கேள்விகள் கேட்டு விடை தேடினால் ஒரு உண்மை புலப்படும்.

திருமணங்கள் நடப்பதில்லை. நடத்தி வைக்கபடுகின்றன.

இரண்டு மணங்கள் இணைவதில்லை. அவர்களை சாக்காக வைத்து இரண்டு குடும்பங்கள் இணைந்து கொள்கிறார்கள்.

இங்கே பெண்ணைப் பெற்றவர்கள் தங்கள் கடமையை முடித்து விடுகிறார்கள். ஆண்பிள்ளையை பெற்றவர்கள் தங்கள் குலத்தை விருத்தி செய்ய வழிவகை தேடிக்கிகொள்கிறார்கள் அல்லது தனது பிள்ளைக்கு ஒரு கால்கட்டு போட்டு விடுகிறார்கள்.

இதற்கிடையில் இது இருமணங்களின் சங்கமம்தானா? என்று அந்த இரு மணங்களுக்கே தெரிவதில்லை. நிச்சயதார்த்ததிற்கும் திருமணத்திற்கும் இடையில் கிடைக்கும் ஒரு சில வாரங்களில் அவர்கள் அனைத்தையும் பேசி புரிந்து கொண்டதாக நினைக்கிறார்கள். இடைப்பட்ட அந்த நாள்களிலேயே அவர்களுக்கிடையே ஒரு ஆழ்ந்த புரிதல், காதல் வந்து விட்டதாக கற்பனை செய்து கொள்கிறார்கள்.

பல வருடங்களாக நகமும் சதையுமாக வாழ்ந்துவிட்ட தம்பதியரே சில நேரங்களில் துணையின் மனதை கணிக்க முடியாமல் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது. ஆனால் ஒரு சில நாட்களில் இவர்கள் அனைத்தையும் கண்டதாக கூறுவது தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்வது தானே.

முதலில் பெற்றோர் பார்த்து முடிக்கும் திருமணங்களை எடுத்துக் கொள்வோம். பெண் பார்க்கும் படலம் என்று ஒன்று இருக்கிறது. பெண்ணைப் பார்த்ததும் அல்லது சில நாட்களிலேயே அந்தப் பெண் நமது குடும்பத்திற்கு சரிப்பட்டு வருவாள் என்று மாப்பிள்ளை வீட்டார் முடிவு செய்து விடுகிறார்கள். ( வீட்டில் போய் போன் போடுகிறோம் என்று சொல்வதெல்லாம் மற்ற விசயத்தில் இந்த சம்பந்தம் சரிப்பட்டு வருமா என்று ஆராய்வதற்காகத்தான்.)

ஜவுளிக்கடையில் போய் ஒரு புடவை வாங்குவதற்கே மணிக்கணக்கில் நேரம் செலவு செய்யும் இவர்கள் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதில் ஐந்து நிமிடத்தில் முடிவு செய்து விடுகிறார்கள். மேலும் வரதட்சணை விசயத்தில் இந்த மாப்பிள்ளைகள் மிகவும் பெட்டைத்தனமாக நடந்து கொள்கிறார்கள். எல்லாவற்றிலும் தன் அம்மா சொல்வதே சரி என்று.

நாங்கள் ஒன்றும் எங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைத் துணையை கண்களை நம்பி ஏமாந்து விடவில்லை என்று நமது பெற்றோர்கள் கேட்கக் கூடும். அது உண்மையென்றால் குணமிருந்தும் அழகில்லாத, பணமில்லாத எத்தனை பெண்கள் நமது நாட்டில் இன்னும் முதிர்கன்னிகளாகவே இருக்கிறார்கள். நீங்கள் மற்ற குணங்களையும் பார்க்கிறீர்கள் என்பது உண்மையாக இருக்கலாம் ஆனால் முதலில் கண்கள் சொல்லும் அழகுக்குதான் முக்கியத்துவம் தருகிறீர்கள் என்பதும் முற்றிலும் உண்மை.

முதலில் சாதி என்ற சல்லடையால் மணப்பெண்களை வடிகட்டி விடுவீர்கள். பின்னர் கல்வி,  பொருளாதாரம், வரதட்சணை போன்ற வடிகட்டிகள். அதன்பின் நீங்கள் பெண்பார்க்க செல்லும் போதே தமது அந்தஸ்துக்கு இணையான ஒருவரைத்தான் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்து உங்களது அந்தஸ்து சல்லடையில் மணப்பெண்களை வடிகட்டி விடுவீர்கள். இதே போன்ற அளவுகோலை பெண் வீட்டாரும் பயன்படுத்துகிறார்கள்.

இதையெல்லாம் தாண்டிவரும் மணப்பெண்தான் உங்கள் வீட்டில் மனைவியாக வாழ முடியும். .. மன்னிக்கவும், மனைவியாக வேலை பார்க்க முடியும்.

பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணத்தை பொறுத்தவரை அது அவர்களது கடமையை முடித்துக் கொள்வதற்கான ஒரு ஏற்பாடு. அங்கே இரண்டு மனங்களின் சங்கமம் என்பது பாதி நேரங்களில் மட்டும் சாத்தியமாகிறது.ஒரு வேளை மணமக்கள் சிறுவயதிலிருந்தே நன்கு பழகியவர்களாக, காதலர்களாக இருந்தால் மனங்களின் சங்கமம் சாத்தியம்.

காதல் இருமணம்தான் நூறு சதவீதம் சரியென்று என்னால் கூறமுடியாது ஆனால் பெற்றோர் பார்த்துவைக்கும் திருமனங்கள் நூறு சதவீதம் சரி என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.